நடுத்தர வர்க்க மக்களுக்கு என்னங்க செஞ்சி வச்சிருக்கீங்க.. பட்ஜெட்டை பார்த்து பொங்கி வரும் மீம்ஸ்கள்
டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் நடுத்தர குடும்பங்களுக்கு எதுவுமே அறிவிக்கப்படவில்லை என்றும் இந்த பட்ஜெட் நடுத்தர மக்களுக்கு எதிராக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் மீம்ஸ் மூலமாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பட்ஜெட்டில் குடைகளுக்கான இறக்குமதி வரி 20 சதவீதம் ஆக உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். மேலும் வைரத்துக்கான வரி குறைக்கப்பட்டிருப்பதாகவும் அறிவித்திருந்தார். இது நடுத்தரக்குடும்பங்களை மிகவும் பாதிக்கும் என்பது நெட்டிசன்கள் விமர்சனம்.
மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று பல ஆண்டுகாலமாக மக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் அது தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மாத சம்பளதாரர்களுக்கு அல்வா மட்டுமே கொடுத்துள்ளார் நிர்மலா சீதாராமன் என்ற குற்றச்சாட்டும் நடுத்தர குடும்பங்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

ராகுல் காந்தி
மோடி அரசின் ஜீரோ பட்ஜெட்டில், மாத சம்பளதாரர், நடுத்தர மக்கள், ஏழைகள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், சிறு, குறு நிறுவனங்கள் என யாருக்கும் ஒன்றுமில்லை' என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் விமர்சனம் செய்திருந்தார். ராகுல்காந்தியை அடுத்து முதல்வர் முக.ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி உள்ளிட்டோரும் இந்த பட்ஜெட் குறித்து விமர்சனங்களைத் தெரிவித்திருந்தனர்.

பட்ஜெட்
நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான கடந்த ஆண்டு 98 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது, தற்போது 73 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், இலவச எரிவாயு இணைப்பு தருவதற்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டில் ரூ. 1,618 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 800 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டிருக்கிறது.

நடுத்தர வர்க்கம்
நேரடி வரி வருவாயில் கிட்டத்தட்ட 35-40% பங்களிப்பவர்கள் தனிப்பட்ட வரி செலுத்துபவர்களே. மக்கள் இந்த பட்ஜெட்டில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சேதத்தை ஈடுகட்ட சில வருமான வரிச்சலுகைகளை எதிர்பார்த்திருந்தனர். வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லாதது, மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் விலை குறையாமல் இருப்பது போன்றவற்றால் நடுத்தரவர்க்கத்தினர் ஏமாற்றமடைந்துள்ளனர்.

மீம்ஸ்
இந்த பட்ஜெட்க்குப் பிறகு தங்கள் ஏமாற்றத்தை, மீம்ஸாக செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ''2023 ஆண்டுக்குள் 80 லட்சம் வீடுகள் 48,000 கோடியில் கட்டப்படும் என்கிறாரே நிதி அமைச்சர். 80 லட்சம் வீடுகள் 48,000 கோடியில் கட்டினால் ஒரு வீடு 30 சதுர அடி மட்டுமே கட்ட முடியும் .. 30 சதுர அடி வீட்டில் அளவு என்ன தெரியுமா 6 அடி x 5 அடி .. மனிதனின் சவகுழி அளவு என்ன தெரியுமா 7 அடி x 4.5 அடி .. இப்படி சவகுழியை விட சின்ன சைஸ் 80 லட்சம் வீட்டை கட்டி என்ன பண்ண போறாங்க இந்திய மக்கள் .. ஒரு சில நியாய தர்மம் வேணாமா .. இந்திய மக்கள் மீது கருணை வையுங்கள்'' என்று பதிவுகளையும் காண முடிகிறது.

போதும்..போதும்
வைரத்துக்கு வரி குறைக்கப்பட்டிருப்பதும், அத்தியாவசிய பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டதையும் சுட்டிக் காட்டி, ''போதும் போதும் ஏழை, நடுத்தர மக்கள் எல்லாம் மயங்கிட போறாங்க'' என்று மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆட்டோ
பட்ஜெட் குறித்து கருத்து ஒன்று ஆட்டோவில் எழுதப்பட்டிருந்தது. அதை சுட்டிக்காட்டி, ஆட்டோ டிரைவருக்குத் தெரிந்த விஷயம் நம்மவூர் அரசியல் வாதிகளுக்கு தெரியவில்லை என்று வாசகத்தோடு நெட்டிசன் ஒருவர் பகிர்ந்திருந்தார்.

அறிவுசார் பிரிவு
''என்கூட படிச்ச economics படிச்ச பிள்ளைகள் கூட நல்லா பட்ஜெட் போடுவாங்க .. நல்ல வேளை மார்க்கெட்டில் தினமும் சாமானியர் வாங்கும் வைரத்திற்கு 5% வரி குறைச்சாங்க, பெரும் பணக்காரர்கள் மட்டுமே வாங்கும் குடைக்கு வரி அதிகம்'' என்று பகிர்ந்து பாஜகல அறிவு சார் இயக்கம் இருந்திருக்கு பாருங்க என்று பகிர்ந்திருந்தனர்.
Recommended Video

வருமான வரி உச்ச வரம்பு
''எது தனி நபர் வருமான வரி உச்ச வரம்ப பத்தி கேக்கறானுங்களா.... அடுத்த பட்ஜெட்ல தனி நபர் வருமானம்னு ஒன்னு இருக்கனுமா வேணாமானு கேளு அவனுங்கள...'' என்ற வாசகத்துடன் கூடிய பட்ஜெட் குறித்த மீம்ஸ் பெரும்பாலனவர்களால் பகிரப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications