அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குனர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் நீட்டிக்கலாம்.. மத்திய அரசு புது சட்டம்
டெல்லி: அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகளின் இயக்குனர்களின் பதவிக்காலத்தை 5 வருடங்கள் வரை நீட்டிக்க அனுமதி அளித்து மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.
வருமான வரித்துறையின் முன்னாள் கமிஷ்னரும், ஐஆர்எஸ் அதிகாரியுமான சஞ்சய் குமார் மிஸ்ரா கடந்த 2018 நவம்பரில் அமலாக்கத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டார். கணக்குப்படி இவரின் பதவிக்காலம் கடந்த வருடம் முடிந்து இருக்க வேண்டும்.
2 வருடம் மட்டுமே இவர் பதவியில் நீடிக்க முடியும் என்ற நிலையில் கடந்த நவம்பரில் இவரின் பதவிக்காலம் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டது. இதனால் இந்த வருடம் நவம்பர் 17ம் தேதியோடு இவரின் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது.

பதவிக்காலம்
இவரின் பதவிக் காலம் கடந்த முறை நீட்டிக்கப்பட்ட போதே அதை அரசியல் விமர்சகர்கள் பலர் விமர்சனம் செய்து இருந்தனர். அமலாக்கத்துறை இயக்குனர்கள் பதவிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதி எல்என் ராவ் அமர்வு இந்த நீட்டிப்பை விமர்சனம் செய்து இருந்தது. அவசியமான நேரங்களில் மட்டுமே, மிகவும் அரிதாக பதவி நீட்டிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டு இருந்தது.

நீட்டிப்பு
இதையடுத்து இந்த முறை நவம்பர் 17ம் தேதியோடு இவரின் பதவிக்காலம் நிறைவு பெறுவதால் மீண்டும் அமலாக்கத்துறை இயக்குனராக சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி நிலவி வந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகளின் இயக்குனர்களின் பதவிக்காலத்தை 5 வருடங்கள் வரை நீட்டிக்க அனுமதி அளித்து மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது.

சட்ட திருத்தம்
முன்பு 2 வருட பதவிக்காலம் + 1 வருடம் வரை பதவி நீட்டிப்பு செய்யலாம் என்ற விதி இருந்தது. இனி 2 வருடம் பதவிக்காலம் + 1+1+1 என 3 வருடம் நீட்டிப்பு என்று மொத்தமாக 5 வருடமாக பதவிக்காலத்தை நீட்டிக்கலாம் என்று மாற்றப்பட்டுள்ளது. முதல் இரண்டு வருடம் பணியாற்றியதை வைத்து அடுத்தடுத்த வருடங்களில் நீட்டிப்பு மேற்கொள்ளப்படும். இரண்டு சட்ட திருத்தத்திற்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தொடர்
பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்காத நிலையில் அவசரம் கருதி இந்த சட்ட திருத்தம் நேரடியாக குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன அவசரம் என்று இதில் குறிப்பிடவில்லை. இந்த வருடம் நவம்பர் 17ம் தேதியோடு அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் நிறைவு பெரும் நிலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. .

பணி நீட்டிப்பு
அதே சமயம் 5 வருட பதவிக்காலத்திற்கு பின் மேலும் பணி நீட்டிப்பு இனி மேற்கொள்ள முடியாது. அதாவது 5 வருடம் அல்லது அதற்கு குறைவாக பணியில் இருக்க முடியும். ஆனால் அதற்கு மேல் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகளின் இயக்குனர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க அவசியம் இல்லை என்று இந்த புதிய சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications