பச்சைக்கொடி.. திருத்தப்பட்ட ‛ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டம் மத்திய அரசு ஒப்புதல்..என்ன ஸ்பெஷல்?
டெல்லி: இந்தியாவில் ‛ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' திட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பி நீதிமன்றம் வரை சென்றது. நீதிமன்றத்தின் உத்தரவு மத்திய அரசுக்கு சாதகமாக வந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு 'ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் திருத்தப்பட்ட ‛ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவின் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் 25 லட்சம் பேர் பயன்பெற உள்ளனர்.
இந்திய ராணுவத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பின்பற்றப்படும் ஓய்வூதிய திட்டத்தை மாற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு முடிவு செய்தது.
இதையடுத்து‛ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' திட்டம் வகுக்கப்பட்டது. இதுதொடர்பாக மறைந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பரில் அறிவிப்பு செய்தார்.

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்
இந்த திட்டத்தின் மூலம் ஒரு பதவியில் இருந்து பணி ஓய்வு பெறும் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்கப்படுவதை நோக்கமாக கொண்டது. இந்த திட்டத்தின் மூலம் 2014 ஜூலை 1ம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு செயல்படுத்தப்படும். நிலுவைத் தொகைகள் 4 தவணைகளில் வழங்கப்படும். ஏற்கெனவே ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் புதிதாக ஓய்வூதியம் பெறுபவர்களுக்குமான இடைவெளி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இ ந்நிலையில் தான் இந்த திட்டத்துக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நீதிமன்றத்தில் வழக்கு
மேலும் முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், "இந்த திட்டத்தில் சமமான அந்தஸ்து கொண்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் மாறுபாடு உள்ளது. ஒரே பதவி மற்றும் ஒரே பணிக்காலம் கொண்ட வீரர்கள் இடையே ஒரு தனி வகுப்பை இத்திட்டம் உருவாக்கிறது. மேலும் ஓய்வூதியம் பெறுவர்களுக்கான இடைவெளியை 5 ஆண்டுக்கு பதில் ஓராண்டுக்கு ஒருமுறை சரிசெய்ய வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.

அமலான திட்டம்
இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது அரசின் திட்ட கொள்கை, அரசியலமைப்பு சட்டத்தில் குறைபாடுகள் எதையும் காணவில்லை எனக்கூறிய உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இதன்மூலம் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்த பச்சை கொடி காண்பிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் ‛ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' திட்டம் அமல்படுத்தப்பட்டது. முன்தேதியிட்ட திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 8 ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.7,123 கோடி வீதம் சுமார் ரூ. 57,000 கோடி செலவிடப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட திட்டம்
இந்நிலையில் தான் திருத்தப்பட்ட ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்மூலம் சுமார் 25 லட்சம் ராணுவ ஓய்வூதியதாரர்கள் பயன்பெற உள்ளனர்.இந்த திருத்தப்பட்ட ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்ட பலன்கள் 2019 ஜூன் 30 வரை ஓய்வு பெற்ற வீரர்களுக்கு பொருந்தும். இதன்மூலம் சேவை செய்தவர்களின் ஓய்வூதிய பணபலன் தரவரிசை வாரியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 2019 முதல் ஜூன் 2022 வரை ரூ.23,600 கோடிக்கு மேலான நிலுவை தொகை(அரியர்) செலுத்தப்பட உள்ளது. அதோடு 31 சதவீத அகவிலை நிவாரணம் வழங்கப்படுவதால் ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தின் ஆண்டு செலவு ரூ.8,450 கோடியை தொட உள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறினார்.












Click it and Unblock the Notifications