சோர்ஸ் கோட் கொடுக்கணும்.. அடிமடியில் வைத்த மத்திய அரசு.. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஷாக்!
டெல்லி: மத்திய அரசு தரப்பில் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் தங்களின் source code-ஐ பகிர்ந்துகொள்ளவும், பல மென்பொருள் மாற்றங்களைச் செய்யவும் புதிய பாதுகாப்பு விதிமுறைகளை முன்மொழிந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு ஆப்பிள், சாம்சங் போன்ற முன்னணி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையான இந்தியாவில் சுமார் 75 கோடி மொபைல்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இணைய மோசடிகளும், டேட்டா திருட்டுகளும் அதிகரித்து வருகிறது. அண்மையில் மத்திய அரசு சந்தைக்கு வரும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, பின்னர் எதிர்ப்பு கிளம்பிய பின், அந்த முடிவை கைவிட்டது.

இந்த நிலையில் இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் தங்களின் சோர்ஸ் கோட்டை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற புதிய விதியை முன்மொழிந்துள்ளது. இந்த விதிமுறைகளில், முக்கிய மென்பொருள் அப்டேட் குறித்து அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறையாக இருக்கிறது. மொத்தமாக 83 பாதுகாப்பு தரநிலைகள் கொண்ட இந்தத் தொகுப்பு, உலக அளவில் இது போன்ற முன்னுதாரணமற்றது என்றும், நிறுவனங்களின் தனியுரிமை விவரங்களை வெளிப்படுத்தும் ஆபத்து கொண்டது என்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் கிருஷ்ணன் கூறுகையில், மத்திய அரசின் பாதுகாப்பு விதிகளின் முன்மொழிவுகள் குறித்து தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதனால் கருத்து தெரிவிக்க இயலாது என்றார். இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் ஷியோமி 19%, சாம்சங் 15% மற்றும் ஆப்பிள் 5% பங்கைக் கொண்டுள்ளன.
இப்படியான சூழலில், மத்திய அரசு ஸ்மார்ட்போன்களின் சோர்ஸ் கோட்டை கோருவது சர்ச்சையாகி இருக்கிறது. ஏனென்றால் சோர்ஸ் கோட் என்பதை ஒவ்வொரு நிறுவனமும் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கும். அதனை பகிர்வது மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் என்றும் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது. உலகின் வேறு எந்த நாட்டிலும் ஸ்மார்ட்போன்களின் சோர்ஸ் கோட் இதுவரை கேட்கப்பட்டதில்லை.
அதேபோல் மத்திய அரசின் முன்மொழிவில் ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளை பயனர்கள் நீக்க அனுமதி அளிக்க வேண்டும், தகவல் திருட்டை தடுக்க கேமரா மற்றும் மைக்ரோஃபேன் ஆகியவற்றை செயலிகள் பின்னணியில் அணுகுவதை தடுக்கவும் விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதேபோல் ஒவ்வொரு அப்டேட் கொடுப்பதற்கு முன்பாகவும், அதனை மத்திய அரசுடன் பகிர்ந்து, அது சோதனை செய்யப்பட்ட பின்னரே வெளியிட வேண்டும் என்றும், குறிப்பிட்ட கால அளவில் ஸ்மார்ட்போன்களில் ஆட்டோமேட்டிக் முறையில் மால்வேர் ஸ்கேன் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications