"கருப்பு அங்கி இனி கிடையாது".. பட்டமளிப்பு விழாவுக்கான உடையில் அதிரடி மாற்றம்.. மத்திய அரசு உத்தரவு
டெல்லி: பட்டமளிப்பு விழாவில் மாணவ - மாணவிகள் இனி கருப்பு அங்கி, தொப்பி அணிய வேண்டாம். ஒவ்வொரு மாநிலங்களும் தங்களின் பாரம்பரிய ஆடையின் அடிப்படையில் பட்டமளிப்பு விழாவுக்கான உடையை தேர்வு செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவின் கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்துள்ளது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராகி உள்ளார். இந்நிலையில் தான் ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்க மனநிலையில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய பிரதமர் மோடி மீண்டும் ஒருமுறை அதனை வலியுறுத்தினார். நாம் காலனி ஆதிக்க மனநிலையில் இருந்து விடுபட வேண்டும். அதோடு நமது பாரம்பரியத்தை காத்து அதன் வழியாக பெருமை கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார்.
இந்நிலையில் தான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் உள்பட பிற மத்திய அரசின் மருத்துவக்கல்வி சார்ந்த நிறுவனங்களுக்கு அதிரடியாக உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது மருத்துவக்கல்லூரிகளில் பட்டமளிப்பு விழாவின்போது பொதுவாக மாணவ-மாணவிகள் கருப்பு அங்கி மற்றும் கருப்பு தொப்பி அணிந்து பட்டங்கள் பெறுவது வழக்கம். இந்நிலையில் தான் இனி மருத்துவக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கருப்பு அங்கி, கருப்பு தொப்பி அணிய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ‛‛பட்டமளிப்பு விழாவுக்கான டிரஸ்கோட் ஆக கருப்பு நிற அங்கி மற்றும் கருப்பு நிற தொப்பி உள்ளது. இந்த கருப்பு நிற அங்கி மற்றும் தொப்பி அணியும் வழக்கம் என்பது மத்திம காலத்தில் ஐரோப்பாவில் தொடங்கப்பட்டது.
அதன்பிறகு ஆங்கிலேயர்களால் காலனியாதிக்க நாடுகளில் நடைமுறைக்கு கொண்டு வரப்பபட்டது. இப்போதும் கருப்பு நிற அங்கி, கருப்பு நிற தொப்பி அணிந்து பட்டம் பெறுவது என்பது காலனியாதிக்க மரபு மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது. இது மாற்றப்பட வேண்டி உள்ளது. இதனால் மருத்துவ கல்வி நிறுவனங்கள் தங்களது மாநிலத்தின் பாரம்பரியத்துக்கு ஏற்ப பட்டமளிப்பு விழாவுக்கான பொருத்தமான ஆடையை தேர்வு செய்ய வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவின்படி பார்த்தால் தமிழகத்தில் ஆண்களுக்கான பாரம்பரிய உடையாக வேஷ்டி சட்டை உள்ளது. பெண்களுக்கு சேலை பாரம்பரிய உடையாக உள்ளது. இதனால் தமிழகத்தில் மாணவர்கள் வேஷ்டி சட்டை அணிந்தும், பெண்கள் சேலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பட்டமளிப்பு விழாவுக்கான உடை மாறலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications