‛ஜெய் சியா ராம்’.. ரிஷி சுனக்கை வரவேற்றபோது மத்திய அமைச்சர் சொன்ன வார்த்தை இதுதான்! ஏன் தெரியுமா?
டெல்லி: ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்திறங்கிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை வரவேற்றபோது மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சவ்பே கூறிய வார்த்தையும், அவர் அளித்த பிரதிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
டெல்லியில் ஜி20 மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று, நாளை என 2 நாட்கள் இந்த மாநாடு நடக்கிறது. இதற்காக நேற்று முதல் ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாட்டு தலைவர்கள், அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியா வந்தனர்.

குறிப்பாக கூற வேண்டும் என்றால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், தென்னாப்பிரிக்கா அதிபர் சிறில் ரமாபோசா உள்பட ஏராளமான தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த தலைவர்கள் அனைவரும் நேற்று இந்தியா வந்தனர். அவர்கள் டெல்லி விமான நிலையத்தில் விமானத்தில் வந்திறங்கினர். ஒவ்வொரு தலைவர்களையும் நேரில் சென்று மத்திய அமைச்சர்கள் வரவேற்றனர். இந்நிலையில் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவி அக்சதா மூர்த்தியுடன் டெல்லி வந்தார். டெல்லி பாலம் விமான நிலையத்தில் ரிஷி சுனக் வந்தார்.
ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவியை மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே வரவேற்றார். ரிஷி சுனக்கை அவர் ‛‛ஜெய் சியா ராம்'' எனக்கூறி வரவேற்றார். அதோடு அவர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவிக்கு பகவத்கீதை மற்றும் ஹனுமான் சாலிசாவின் பிரதிகளை வழங்கினார். அதனை ரிஷி சுனக் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இந்தியாவை சேர்ந்த அக்சதா மூர்த்தியை திருமணம் செய்துள்ளார். இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நாராயணமூர்த்தி-சுதா மூர்த்தி தம்பதியின் மகள் ஆவார். இவர்களின் திருமணம் என்பது பெங்களூரில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரிட்டன் பிரதமராக இருந்தாலும் கூட ரிஷி சுனக் தான் ஒரு இந்து. கோவில்களுக்கு அடிக்கடி செல்வதாகவும், கஷ்டமான காலங்களில் பகவத் கீதை வாசிப்பதாகவும் பலமுறை தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில் தான் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே ரிஷி சுனக்கை, ‛ஜெய் சியா ராம்' என்ற வார்த்தையை பயன்படுத்தி வரவேற்று பகவத் கீதை, ஹனுமான் சாலிசாவுக்கான பிரதிகளை வழங்கினார்.












Click it and Unblock the Notifications