ரயில்வே துறை+பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து! பாஜகவை குடைய தொடங்கியது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம்
டெல்லி: ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் உதவியுடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க இருக்கிறார். இந்நிலையில், தங்களுக்கு ரயில்வே அமைச்சர் பதவி மற்றும் பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்தில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்த நிலையில், ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது தொடக்கம் முதல் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு கடும் போட்டி நிலவியது.

இறுதியாக பாஜக கூட்டணி 293 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றியது. பாஜகவை எடுத்துக்கொண்டால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உதவியின் ஆட்சியமைக்க முடியாது. இந்த இரண்டு கட்சிகளிடம் 17+16 என 33 தொகுதிகள் இருக்கின்றன. இதை கழித்துவிட்டால் பாஜக கூட்டணிக்கு 260 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும். பெரும்பான்மை பெற 272 தொகுதிகள் வேண்டும்.
எனவே தற்போது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை பாஜக அரவணைத்து செல்கிறது. இதற்கு கைமாறாக தற்போது முக்கிய துறைகளை கேட்க இரண்டு கட்சிகளும் தொடங்கியுள்ளன. எனவே சந்திரபாபு நாயுடு, தங்களுக்கு மக்களவை சபாநாயகர் பதவி வேண்டும் அல்லது என்டிஏ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வேண்டும் என்று கோர இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளம் ரயில்வே துறையை கேட்டிருக்கிறது. ஐக்கிய ஜனதா தளத்தின் எம்பியான லவ்லி ஆனந்த் மற்றும் மோகன் ஆகியோர் இன்று டெல்லி நடைபெற்று வரும் என்டிஏ தலைவர்கள் மற்றும் எம்பிக்களின் கூட்டத்தில் பங்கேற்க சென்றிருந்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள் ரயில்வே துறையை ஜக்கிய ஜனதா தளத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மட்டுமல்லாது பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் கோரியுள்ளனர்.
ஐக்கிய ஜனதா தளம் தவிர, பீகாரின் லோக் ஜனசக்தி கட்சியும் அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாஜகவுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது. அக்னிபாத் திட்டம் போன்று மேலை நாடுகளிலும் செயல்படுத்தப்படுவதாகவும், எனவே அதை ரத்து செய்ய முடியாது என்று பாஜக ஏற்கெனவே தெளிவுப்படுத்தியிருந்தது. ஆனால் இப்போது கூட்டணி தயவுடன் ஆட்சியமைக்க இருப்பதால் பாஜக நிச்சயம் இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications