"தற்கொலை படை தாக்குதல்னா என்ன தெரியுமா?" டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமரின் பகீர் வீடியோ
டெல்லி: கடந்த வாரம் டெல்லி செங்கோட்டை அருகே நடந்த தாக்குதல் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது இதற்கிடையே இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான டாக்டர் உமர் உல் நபியின் வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் தற்கொலைப் படை தாக்குதல் தொடர்பாக அவர் சர்ச்சை கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த வாரம் மிக மோசமான ஒரு தாக்குதல் அரங்கேறியது. அங்கு சிக்னலில் காரில் இருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இந்தச் சம்பவத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தை முதலில் டெல்லி போலீசார் விசாரித்து வந்த நிலையில், இப்போது என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

டாக்டர் உமர் வீடியோ
இதற்கிடையே இந்தச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான டாக்டர் உமர் உல் நபியின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில் அவர் தற்கொலைப்படை தாக்குதல்கள் குறித்து சில சர்ச்சை கருத்துகளைக் கூறியிருக்கிறார். "தற்கொலைப் படை தாக்குதல்" என்ற சொல்லே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக டாக்டர் உமர் தெரிவித்தார்.. தற்கொலைப் படை தாக்குதல்களைத் தியாகிகளின் தாக்குதல்கள் என்று குறிப்பிட்ட அவர், இதுவே தற்கொலைப் படை வீரர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த நவம்பர் 10ம் தேதி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து என்றே புலனாய்வு அதிகாரிகள் கருதுகின்றனர். இருப்பினும், உமர் ஒரு பெரிய தற்கொலைப் படை தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது..
தற்கொலைப்படை தாக்குதல்
தற்கொலைப் படை தாக்குதல்கள் உண்மையில் தியாகிகளின் தாக்குதல்கள் என்று அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டார். ஒரு குறிப்பிட்ட இடத்தில்.. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உயிரிழப்போம் என்று முன்பே தெரிந்து அந்தக் காரியத்தைச் செய்வதால் அதைத் தியாகிகள் தாக்குதல் என்று சொல்ல வேண்டும் என்ற வினோத விளக்கத்தை அவர் தருகிறார்.
அவர் மேலும், "தற்கொலைப் படை தாக்குதல்களைப் பலரும் எதிர்க்கிறார்கள். இது தவறு என்ற பல வாதங்கள் உள்ளன. ஆனால், என்னைப் பொறுத்தவரை.. ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உயிரிழப்போம் என்று ஒருவர் உறுதியாகத் தெரிந்த பிறகு ஒருவர் அதைச் செய்வது தியாகித் தாக்குதல்" என்று வினோத விளக்கத்தைக் கொடுத்தார். டெல்லி குண்டுவெடிப்பில் உமரும் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த உமர்
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட டாக்டர் உமர் காஷ்மீரின் புல்வாமா அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் எப்போதும் அமைதியாகவே இருப்பார் என்றும் தனிமையில் நேரத்தைச் செலவிடவே விரும்புவார் என்றும் அவருடைய உறவினர்கள் குறிப்பிடுகிறார்கள். இருப்பினும், சமீபத்திய மாதங்களில் உமரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஃபரிதாபாத்தில் சோதனை
கடந்த அக்டோபர் 30ம் தேதி முதல் பல்கலைக்கழகப் பணிகளைத் தவிர்த்து, ஃபரிதாபாத் மற்றும் டெல்லி இடையே அடிக்கடி பயணம் செய்துள்ளார். மேலும், ராம்லீலா மைதானம் மற்றும் சுன்ஹேரி மசூதிக்கு அருகிலுள்ள மசூதிகளும் நேரில் சென்று நோட்டமிட்டார். கடந்த நவம்பர் 9ம் தேதி ஃபரிதாபாத்தில் சோதனை நடத்தி சிலரை போலீசார் கைது செய்த நிலையில், போலீசார் அப்போது சுமார் 2,900 கிலோ அமோனியம் நைட்ரேட் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தது.
இந்தச் சோதனையைத் தொடர்ந்தே நபி மாயமாகியிருந்தார். சோதனை நடந்து இரண்டாவது நாளிலேயே டெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. என்ஐஏ அதிகாரிகள் இப்போது இது குறித்து விசாரித்து வரும் நிலையில், அதில் பல பகீர் தகவல்கள் வெளியாகி வருகிறது.












Click it and Unblock the Notifications