நாய் கூட சாப்பிட முடியாத உணவு என அழுத உ.பி. கான்ஸ்டபிள்.. ஒழுங்கீனமானவர் என காவல்துறை கண்டிப்பு
டெல்லி: தங்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருக்கிறது என வீடியோ வெளியிட்ட காவலரை 'ஒழுங்கீனமானவர்' என்றும், 'மீண்டும் மீண்டும் குற்றம் இழைப்பவர்' என்றும் உத்தரபிரதேச காவல்துறை கூறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத்தில் செயல்படும் போலீஸ் கேண்டீனில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக காவலர் நிலையில் பணியாற்றும் மனோஜ் குமார் என்பவர் கண்ணீர்விட்டு அழுதபடி இன்று காலை புகார் கூறியிருந்தார். பிரோஸாபாத் போலீஸ் கேண்டீனில் மிகப்பெரிய முறைகேடு நடைபெறுவதாகவும், தங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை காவல் உயரதிகாரிகள் மோசடி செய்வதால் தரம் குறைந்த மோசமான உணவுகள் வழங்கப்படுவதாக காவலர் மனோஜ் குமார் கூறியிருந்தார். மேலும், தங்களுக்கு கொடுக்கப்படும் உணவை நாய்களால் கூட சாப்பிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார். மனோஜ் குமார் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ஃபிரோஸாபாத் கேண்டீனில் வழங்கப்படும் உணவு குறித்து விசாரணை நடத்த உ.பி. காவல்துறை டிஜிபி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய ஃபிரோஸாபாத் காவல் உயரதிகாரிகள் காவலர் மனோஜ் குமார் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர். காவலர் மனோஜ் குமார் பணியில் ஒழுங்கீனமானவர் என்றும், மீண்டும் மீண்டும் குற்றம் இழைப்பவர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பணியில் அலட்சியமாக இருந்ததற்காக இதுவரை 15 முறை அவருக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விரைவில் அவர் மீது பணியிடை நீக்கம் அல்லது பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.'
கடந்த 2018-ம் ஆண்டு எல்லைப் பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எஃப்) காவலராக பணியாற்றிய தேஜ் பகதூர் யாதவ் என்ற வீரர், தங்களுக்கு மிக மோசமான தரமில்லாத உணவுகள் வழங்கப்படுவதாக கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த சமயத்தில் அது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, உணவு தரம் குறித்து விசாரிக்கப்படும் பிஎஸ்எப் தெரிவித்தது. ஆனால், அடுத்த சில தினங்களிலேயே பணிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி தேஜ் பகதூர் பணிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications