Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

படிவம் 17C ஐ பதிவேற்றினால் மார்ப்பிங் செய்வார்கள்.. உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கவலை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வாக்குப்பதிவு விவரங்கள் தொடர்பான படிவம் 17C ஐ இணையதளத்தில் வெளிப்படையாக பதிவேற்றுவது தவறான செயல்களுக்கு வழிவகுக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

நமது நாட்டில் இப்போது லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 2 கட்ட தேர்தல் மட்டுமே பாக்கி உள்ளது.

Uploading of Form 17C on website can lead to mischief Election Commission told SC

இந்நிலையில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் காமன் காஸ் ஆகிய அமைப்புகள், வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடர்பான படிவம் 17-சியின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்திருந்தனர். இந்த மனுவில், வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், மொத்த வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் வாக்குப் பதிவு நடந்த நாளன்று வௌியிட்ட எண்ணிக்கை விவரங்களுக்கும், இறுதியாக வெளியிட்ட விவரங்களுக்கும் இடையில் 5 அல்லது 6 சதவீதம் அளவுக்கு வேறுபாடு உள்ளதாகவும். இது பொதுமக்களிடம் நிறைய சந்தேகங்களை எழுப்பி உள்ளது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது குறிப்பாக தேர்தல் நேர்மையாக நடக்கிறதா என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது என்றும் எனவே வாக்குப்பதிவு விவரங்களை உடனடியாகவும், துல்லியமாகவும் வெளியிட இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒரு வழிகாட்டுதலுடன் கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" என்றும் பொதுநல மனுவில் கூறப்பட்டிருந்தத. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் கடந்த 17ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதிடுகையில், "தேர்தல் அதிகாரியிடம் இருந்து படிவம் 17சி-ல் இருந்து புள்ளி விவரங்களை பெற்று வெளியிடுவது தான் இந்திய தேர்தல் ஆணையத்தின் வேலை. ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை என்பதே எங்களுடைய குற்றச்சாட்டு" என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "ஒரே இரவில் விவரங்களை வாங்கி வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு என்ன பிரச்னை இருக்கிறது. மாலை 6 அல்லது 7 மணிக்குள் வாக்குப்பதிவு முடிந்து விடுகிறது. இதையடுத்து அதிகாரிகளிடம் இருந்து தரவுகளை வாங்கி நீங்கள் (தேர்தல் ஆணையம்) பதிவேற்றம் செய்யலாமே. உங்களுக்கு போதுமான கால அவகாசம் உள்ளது தானே" என்று கேள்வியெழுப்பினார்.

அதற்கு தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங் சர்மா பதில் அளித்து வாதிடுகையில், "இந்த விவகாரத்தை பொறுத்தவரை ஒரு செட் டேட்டா இருக்கிறது. குறிப்பாக தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக முதல் வாக்காளர் பட்டியல் சரியான ஒன்றாகதான் இருந்தது.

ஆனால் புதிய வாக்காளர்கள் மற்றும் அவர்களின் எண்ணிக்கையில் பெரும் தாக்கம் தான் இப்போது பிரச்னையாக உள்ளது. எனினும் எங்களால் தரவுகள் அனைத்தும் துல்லியமாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. குறிப்பாக தகவல்களை ஒழுங்கு செய்ய ஒரு செயலி உள்ளது. அதுதொடர்ந்து விவரங்களை புதுப்பித்து கொண்டே இருக்கிறது. அதனால் இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அது சரி செய்யப்படும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ''இதில் ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல் முடிந்து விட்டதே என்றார். அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், "அதுதான் தற்போது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. ஏனெனில் திடீரென 6 சதவீத வாக்குகள் உயர்வதால் இ.வி.எம் மாற்றப்படுவதாக வாக்களித்த குடிமக்கள் சந்தேகமடைகிறார்கள்" என்றார்

தொடர்ந்து தலைமை நீதிபதி குறுக்கிட்டு தேர்தல் ஆணைய வழக்கறிஞரை பார்த்து பேசுகையில், ''இந்த விவகாரத்தில் 17சி அடிப்படையில் வாக்கு சதவீதத்தை வெளியிடுகிறீர்களா?. 66 சதவீத வாக்குப்பதிவு என்று நீங்கள் தெரிவிப்பது 17சி தரவுகளின் அடிப்படையில் தானே?. அதில் ஏதேனும் உங்களுக்கு (தேர்தல் ஆணையம்) பிரச்னை உள்ளதா?" என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர், ''அதில் எங்களுக்கு எந்தவித சிரமங்களும் இல்லை. எனினும் அதில் கொஞ்சம் நேரம் எடுக்கும். அதனைத்தவிர வேறு ஒரு பிரச்னையும் கிடையாது . இருப்பினும் தற்போது வைக்கப்படுவது ஒரு பொய்யான குற்றச்சாட்டு. தேவைப்பட்டால் இரவு முழுவதும் உட்கார்ந்து நாங்கள் பணி செய்ய தயாராக இருக்கிறோம். இருப்பினும் இந்த விவகாரத்தில் நாங்கள் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளோம்" என்றார்

இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பிறப்பித்த உத்தரவில், ''இந்த விவகாரத்தில் தொடரப்பட்ட பிரதான வழக்கு கடந்த 2019 ம் ஆண்டு முதல் நிலுவையில் இருக்கிறது. மேலும் இடைக்கால மனுவில் விசாரணை நடத்தி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும் போது ஏன் தேர்தல் ஆணையம் ஒரு தெளிவான விவரங்களை தாக்கல் செய்ய வில்லை" என்று கேள்வி எழுப்பினார். மேலும் வாக்கு எண்ணிக்கை மற்றும் சதவீதங்களை விரைவாக வெளியிடக்கோரிய வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் மே 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்த பதில் மனுவில், படிவம் 17Cயை (வாக்குப் பதிவு) அதன் இணையதளத்தில் பதிவேற்றுவது தவறான செயல்களுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளது. இதை வைத்து போலியான அவநம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய வகையில் படங்களை மார்ப்பிங் செய்து வெளியிட வாய்ப்பு உள்ள என்றும் கவலை தெரிவித்துள்ளது.

படிவம் 17C-ஐ முழுமையாக வெளியிடுவது, ஒட்டுமொத்த தேர்தல் இடத்தையும் சீர்குலைக்கும் மற்றும் கேடு விளைவிக்கும் என்றும் தேர்தல் அணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைக்கு, அசல் படிவம் 17C ஸ்ட்ராங் ரூமில் மட்டுமே உள்ளது என்றும் அதன் நகலை வாக்குச் சாவடி முகவர்களிடம் கையெழுத்திட்டால் மட்டுமே கிடைக்கும் என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம், இதனை கண்மூடித்தனமாக வெளிப்படுத்துவது மற்றும் இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிடுவது ஆகிய செயல்கள், அந்த டேட்டா படங்களை மார்பிங் செய்து மாற்றுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உட்பட, ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறையிலும் அசௌகரியத்தையும் அவநம்பிக்கையையும் உருவாக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அச்சம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் 17சி தகவலை, தனது இணையதளத்தில் வெளியிடுவதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதை அறிய விரும்பும் உச்ச நீதிமன்றம், இதுபற்றி வெள்ளிக்கிழமை ஆலோசிக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+