ஆபாச வீடியோ+ மிரட்டல்+ லிவ் இன் உறவு.. எரித்து படுகொலை செய்யப்பட்ட டெல்லி இளைஞர்! திக்திக்
டெல்லி: தலைநகர் டெல்லியில் லிவ் இன் உறவில் இருந்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அவரது பெண் பாட்னர், முன்னாள் காதலர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் இந்த விவகாரத்தில் தோண்டத் தோண்டப் பூதம் வெளியே வந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தக் காலத்தில் லிவ் இன் உறவில் பலரும் இருக்க ஆரம்பித்துவிட்டனர். அதில் சில லிவ் இன் உறவுகளில் மிக மோசமான சம்பவங்கள் நடந்துவிடுகிறது. அப்படியொரு சம்பவம் தான் டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. டெல்லி காந்தி விஹார் பகுதியில் யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வந்த 32 வயதான இளைஞர் ஒருவரின் உடல் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது.

லிவ் இன் பார்ட்னர் கைது
அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் மூன்று பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. அதில் ஒருவர் கொல்லப்பட்ட நபருடன் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 21 வயதான அந்தப் பெண் இளைஞருடன் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது.
மேலும், அந்தப் பெண்ணின் முன்னாள் காதலன் மற்றும் அவர்களது கூட்டாளி என மொத்தம் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடயவியல் அறிவியல் படித்து வந்த அந்தப் பெண்ணும், மற்ற இருவரும் உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
என்ன நடந்தது!
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "இளைஞருடன் லிவ்-இன் உறவில் இருந்த அந்தப் பெண், அவரை கொலை செய்ய மற்ற இரு ஆண்களுடன் சேர்ந்து சதி செய்திருக்கிறார். கொலைக்குப் பிறகு, அது ஒரு விபத்து போல் தெரிய அவரது உடலை எரித்துள்ளனர்.
எங்களுக்கு முதலில் கடந்த அக்டோபர் 6ம் தேதி, ஏசி வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தது. தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து, அறையில் பலத்த தீக்காயங்களுடன் ஒரு உடலைக் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தோம்" என்றார்.
மாஸ்க் நபர்
அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது தான் சில முக்கிய தகவல்கள் தெரிய வந்தன. அதாவது அக்டோபர் 5 நள்ளிரவு இரவு, மாஸ்க்குடன் தங்கள் முகத்தை மறைத்தபடி இரு ஆண்கள் வீட்டில் நுழைவது பதிவாகியுள்ளது. பிறகு அதிகாலை 2.57 மணியளவில், இளைஞர்களுடன் அப்பெண் வெளியேறுவது தெரிந்தது. அவர்கள் வெளியேறிய சிறிது நேரத்திலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கைது
போலீசார் மேலும் கூறுகையில், "இதனால் எங்களுக்கு சந்தேகம் அதிகரித்தது. தொடர்ந்து அந்தப் பெண்ணின் செல்போன் நம்பர் இருக்கும் இடத்தை ஆய்வு செய்தோம். அதில் குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் அந்தப் பெண் இருந்தது தெரிந்தது. அவர்கள் தலைமறைவானதால் சந்தேகம் அதிகரித்தது. இதையடுத்து மொராதாபாத்தில் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, அக்டோபர் 18ம் தேதி அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும், குற்றத்தில் தனக்கு உடந்தையாக இருந்த இருவர் குறித்த தகவல்களையும் அளித்தார்.
என்ன காரணம்!
இதையடுத்து, அவரது இரண்டு கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். இந்தப் பெண்ணின் ஆபாச வீடியோவை அந்த இளைஞர் எடுத்து வைத்திருக்கிறார். அதை டெலிட் செய்ய மறுத்துள்ளார்.. இதனால் அப்பெண் தனது முன்னாள் காதலனைத் தொடர்பு கொண்டு இது பற்றிக் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் இளைஞரைக் கொலை செய்ய முடிவு செய்தார்.
நாடகம்
அந்த மூன்று பேரும் இளைஞரின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். பிறகு உடலில் எண்ணெய், நெய் மற்றும் மதுவை ஊற்றியுள்ளனர். கேஸ் ஏஜென்சியில் வேலை செய்த பெண்ணின் முன்னாள் காதலன், சிலிண்டரின் வால்வைத் திறந்து, அதனை தீ வெடிக்கும்படி செட்அப் செய்துள்ளனர். பின்னர் அவர்கள் உயிரிழந்தவரின் ஹார்டு டிஸ்க், லேப்டாப் உடன் தப்பியுள்ளனர்" என்றார்.
குற்றவாளிகளிடமிருந்து ஒரு ஹார்டு டிஸ்க், ஒரு ட்ராலி, உயிரிழந்தவரின் சட்டை மற்றும் இரண்டு மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications