2790+ இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தல்.. டிரம்ப் வந்த பிறகு எல்லாமே மாறிடுச்சு
டெல்லி: அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. சிலர் சட்டவிரோதமாகவும் கூட அமெரிக்காவுக்குச் செல்ல முயல்கிறார்கள். இந்தாண்டு தொடக்கம் முதல் அப்படிச் சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசித்து வந்த 2790+ மேற்பட்டோர் நாடுகடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் அரசு அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாகச் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை நாடுகடத்தும் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இது வழக்கமான நடைமுறைதான் என்றாலும் டிரம்ப் வந்த பிறகு இதில் அமெரிக்கா அதிகக் கவனம் செலுத்தி வருகிறது.

2790+ இந்தியர்கள் நாடுகடத்தல்
சட்டவிரோதமாக அமெரிக்காவில் யாராவது தங்கி இருப்பது தெரிய வந்தால் அவர்கள் உடனடியாக நாடுகடத்தப்படுகிறார்கள். இதற்கிடையே இந்த ஆண்டு ஜனவரி முதல் அமெரிக்காவில் இருந்து 2,790-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வந்தவர்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் இவர்கள் இந்தியாவுக்கு நாடு திரும்பி உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இது குறித்த தகவலைப் பகிர்ந்து கொண்டார். முறையான விசா இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருந்த இந்தியர்கள் மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசு அறிவிப்பு
அவர் மேலும் கூறுகையில், "அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இந்தியர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.. அதில் உரிய விசா அல்லது அனுமதி இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதல் 2790+ இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் அங்குச் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தனர். நாங்களும் அவர்களின் ஆவணங்களைச் சரிபார்த்து உறுதி செய்துள்ளோம்.
அவர்கள் இந்தியர்கள் என உறுதி செய்யப்பட்ட பிறகே, இந்தியா திரும்ப அனுமதித்தோம். இந்த நாடுகடத்தும் நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள சட்ட நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டது" என்றார்.
பிரிட்டனில் இருந்து 100+ இந்தியர்கள்
அமெரிக்கா மட்டுமின்றி பிரிட்டன் நாட்டிலும் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஜெயஸ்வால் மேலும் கூறுகையில், "இதேபோல், பிரிட்டனில் இருந்து 100 இந்தியர்கள் இந்த ஆண்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களும் இந்தியர்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, தாயகம் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்" என்றார்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் சட்டவிரோதக் குடியேற்றங்கள் அதிகரித்து வருகிறது. மேலும், விசா காலம் முடிந்த பிறகும் தங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மற்ற உலக நாடுகளுடன் இணைந்து, இதுபோன்ற சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்க இந்தியா தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அமெரிக்கா தகவல்
அமெரிக்காவும் தனது நாட்டில் சட்டவிரோதமாக நுழைய முயல்வோர் குறித்த டேட்டாவை வெளியிட்டு வருகிறது. அதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாக அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
2024 அக்டோபர் முதல் 2025 செப்டம்பர் வரை, 34,146 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய முயன்றதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில் 90,415 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு அது 62 சதவீதம் குறைந்துள்ளது.. கடந்த 2021க்கு பிறகு சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய முயலும் இந்தியர்கள் எண்ணிக்கை இந்தளவுக்குக் குறைவது இதுவே முதல்முறையாகும்.












Click it and Unblock the Notifications