US Tariff: டிரம்பை பழிக்கு பழி வாங்கணும்.. அமெரிக்காவுக்கும் 50% வரி போடுங்க.. மோடிக்கு ஐடியா தந்த சசிதரூர்!
டெல்லி: டொனால்ட் டிரம்பை பழிக்கு பழி வாங்க வேண்டும். நமக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்து இருப்பது போல் அமெரிக்காவுக்கும் நாம் 50 சதவீத வரியை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார். மேலும் நம் நாட்டில் வளங்கள் உள்ளன. வெளிநாடுகளில் பலவும் நட்பு நாடுகளாக உள்ளதால் கவலைப்படாமல் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஐடியா கொடுத்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இது உக்ரைன் போருக்கு உதவும் வகையில் இருப்பதாக கூறி டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு வரிகளை விதித்துள்ளார்.

கடந்த 1ம் தேதி 25 சதவீத வரியை போட்டார். இந்த வரி இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்பிறகும் இந்தியா, தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டினார்.
இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால் நேற்று இன்னும் கூடுதலாக 25 சதவீத வரிகளை அறிவித்தார். இந்த வரி 21 நாட்களுக்கு பிறகு அமலுக்கு வரும் என்று கூறியுள்ளார். இதன்மூலம் டிரம்ப் நம் நாட்டுக்கு மொத்தம் 50 சதவீத வரியை விதித்துள்ளது. இது நம் நாட்டுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தான் அமெரிக்காவின் இந்த வரி விதிப்பை காங்கிரஸ் எம்பி சசிதரூர் எம்பி கடுமையாக கண்டித்துள்ளார். அதோடு அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க மத்திய அரசுக்கும் ஐடியா கொடுத்தார். டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தபோது சசிதரூர் கூறியதாவது: அமெரிக்காவின் வரி விதிப்பு பல்வேறு வழிகளில் அநியாயமான ஒன்றாக உள்ளது. அதேபோல் நியாயமற்றதாக இருக்கிறது. நாம் ரஷ்யாவின் கச்சா எண்ணெய், எரிவாயுவை வாங்குவதாக டிரம்ப் கூறுகிறார். நாம் இதனை பொதுச்சந்தையில் செய்கிறோம். தற்போதைய அமெரிக்காவின் நடவடிக்கை தேவையற்றது.
ஏனென்றால் டிரம்ப், சீனா அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கு இதுபோன்ற தண்டனையை வழங்கவில்லை. இந்த 2 நாடுகளுடன் ரஷ்யாவுடன் எரிசக்தி சார்ந்த வர்த்தகத்தை அதிகம் மேற்கொண்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்காவே தனது தொழில்களுக்காக ரஷ்யாவிடம் இருந்து தான் யுரேனியம், ஹெக்ஸாஃப்ளூரைடு, பல்லேடியம் மற்றும் பிற இரசாயனங்களை வாங்குகிறது.
நம் நாடு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் நாடு அல்ல. இதனால் அமெரிக்கா நமக்கு வரி போட்டது போல் நாமும் பதிலுக்கு வரி போட வேண்டும். அமெரிக்க பொருட்கள் மீதான சராசரி வரி 17 சதவீதமாக உள்ளது. இதனை 50 சதவீதமாக அதிகரிப்போம் என்பதை தெளிவாக எடுத்து கூற வேண்டும்.
பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டினாலும் பரவாயில்லை. நமக்கு வெளிநாடுகளில் நட்புகள் உள்ளன. நம் நாட்டில் வளங்கள் உள்ளன. நல்ல சந்தைகளும் இருக்கின்றன. இதனால் பதிலுக்கு பதில் அமெரிக்காவுக்கு வரி விதிக்க வேண்டும்'' என்று ஐடியா கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications