ஒன்றல்ல.. இரண்டல்ல.. 18வது முறையாக இந்தியாவை சீண்டிய அதிபர் டிரம்ப்.. இதே வேலையா போச்சே!
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் என்று ட்ரம்ப் 18வது முறையாக குறிப்பிட்டுள்ளார். நான் உலகில் நிறைய மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன். அந்த வரிசையில் இந்தியா - பாக். போர் நிறுத்தத்தை முக்கியமானதாகக் குறிப்பிடலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.

டிரம்ப் மீண்டும் போர் நிறுத்தம் பற்றிய பேச்சு
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வர்த்தகத்தை ஒரு கருவியாக பயன்படுத்தியதாக டிரம்ப் பலமுறை கூறியுள்ளார். "என் தலையீட்டால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன், உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
டிரம்ப்பின் இந்த கூற்றுக்கு இந்திய வெளியுறவுத் துறை பதிலளித்திருந்தது. இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம் பற்றி பேசப்படவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இருப்பினும், டிரம்ப் சவுதி அரேபியாவில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் வர்த்தகத்தை முன்னிறுத்தி போரை நிறுத்தியதாக மீண்டும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நடந்த சண்டையின் போது, போர் நிறுத்தத்தை மேற்கொள்ள உதவியது தான்தான் என்று டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் எந்த வெளிநாட்டு உதவியும் பெறவில்லை என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், டிரம்ப் பாகிஸ்தான் தலைவர்களைப் புகழ்ந்து பேசத் தொடங்கியுள்ளார். அதோடு, இந்த பெரிய போரை தடுத்ததில் அமெரிக்காவின் பங்கை இந்தியா மதிக்கவில்லை என்றும் டிரம்ப் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை புகழ்ந்து இந்தியாவை விமர்சித்த டிரம்ப்
டிரம்ப் பேசுகையில், "பாகிஸ்தானில் நல்ல தலைவர்கள் உள்ளனர். இதை நான் சொல்வது சிலருக்கு பிடிக்காது, ஆனால் அதுதான் உண்மை. பாகிஸ்தான் தலைவர்களை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது. நான்தான் போரை நிறுத்தினேன். ஆனால் யாரும் எனக்கு பாராட்டுத் தெரிவிக்கவில்லை. இந்த பெரிய போரை தடுத்ததில் அமெரிக்காவின் பங்கை இந்தியா மதிக்கவில்லை," என்று கூறினார்.
முன்னதாக, இதே விவகாரம் தொடர்பாக டிரம்ப் பேசுகையில், "இரண்டு நாடுகளுமே நிறைய அணு ஆயுதங்களை கொண்டுள்ளன. ஆனால் அணு ஆயுதப் போர் ஏற்படாமல் தடுத்தது நான்தான் என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். அவர்கள் நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம், உறுதி தங்களுக்கு இருக்கிறது என்ற நிலைபாட்டில் இருந்தார்கள். ஆனால் நாங்கள் நிறைய உதவினோம். வர்த்தகத்தில் உதவினோம்." என்றார்.
மேலும், "சண்டையை நிறுத்தினால் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம் என்று இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் சொன்னேன். போரை நிறுத்தாவிட்டால் நாங்கள் எந்த வர்த்தகத்தையும் செய்யப் போவதில்லை என்று சொன்னேன். உடனடியாக நாங்கள் போரை நிறுத்துவோம் என்று சொன்னார்கள். அதை அவர்கள் செய்துவிட்டார்கள்," என்று டிரம்ப் கூறியிருந்தார்.
இந்தியா என்ன சொல்கிறது?
டிரம்பின் கருத்தை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. மே 10 அன்று போர் நிறுத்தம் மற்றும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான முடிவு இருதரப்பு ராணுவ அதிகாரிகளால் எடுக்கப்பட்டது என்று இந்தியா திட்டவட்டமாக கூறி வருகிறது. இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் ஜெனரல்களுக்கு இடையே மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ இந்திய டிஜிஎம்ஓவுக்கு அழைப்பு விடுத்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது. டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் மோதலில் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று இந்தியா கூறி வருகிறது.
இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள். இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னைகள் இருந்து வருகின்றன. இதனால் அவ்வப்போது மோதல்கள் ஏற்படுவதுண்டு. இரு நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்ட பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இருதரப்பு ராணுவ அதிகாரிகள் எடுத்த முடிவின்படி போர் நிறுத்தம் ஏற்பட்டதே தவிர, இதில் எந்த வெளிநாட்டு உதவியும் இல்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.












Click it and Unblock the Notifications