செப்.12ல் குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்கும் சிபி ராதாகிருஷ்ணன்?
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 12ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் என்டிஏ கூட்டணி சார்பாக போட்டியிட்ட சிபி ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக போட்டியிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். மொத்தமாக பதிவாகிய வாக்குகளில் 452 வாக்குகள் சிபி ராதாகிருஷ்ணன், 300 வாக்குகளை சுதர்சன் ரெட்டியும் பெற்றனர். இதனால் 152 வாக்குகள் வித்தியாசத்தில் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக 15வது குடியரசு துணைத் தலைவராக சிபி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்க உள்ளார். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன், 1998ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கோவையில் வெற்றிபெற்றார். கோவையில் பாஜக வலுப்பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சிபி ராதாகிருஷ்ணன். இதன்பின் அவரால் எந்த தேர்தலிலும் வெல்ல முடியவில்லை.
ஆனால் தமிழக பாஜகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவருக்கு, 2023ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் பொறுப்பு அளிக்கப்பட்டது. அதன்பின் தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராகவும் செயல்பட்டார். இதன்பின் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக செயல்பட்டு வந்தபோது, ஜனதீப் தங்கர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதன்பின் நடந்த பாஜக ஆலோசனை கூட்டத்தில் என்டிஏ கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யபட்டார். தற்போது தேர்தலிலும் வென்றுள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. திருப்பூரை சேர்ந்த அவர் டெல்லியின் உயர் பதவிக்கு சென்றிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவராக சிபி ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 12ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜ்ய சபாவை சிபி ராதாகிருஷ்ணன் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications