வேண்டாத வேலை பார்த்த நெட்டிசன்கள்.. பெண்களை சங்கிலியால் கட்டி இழுத்துச் செல்லும் புகைப்படம் போலியாம்
டெல்லி: இன்றைய இணைய காலகட்டத்தில் டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. உலக நிகழ்வுகள் முதல் உள்ளூர் நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் வரை சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.
சமுதாயத்துக்கு பயனுள்ள கருத்துக்களை தெரிந்து கொள்ளவும், சாதனை படைக்கும் சாமானியர்களை வெளிச்சம் போட்டும் காட்டவும் சமூக வலைத்தளங்கள் மிக முக்கிய கருவியாக செயல்படுகிறது என்றால் அது மிகையல்ல.

போலி செய்திகள்
ஆனால் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தும் கயவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் வெளியிடும் போலி செய்திகள், கருத்துக்கள் பல்வேறு வகையான எதிர்வினைகளை ஏற்படுத்தி வருகின்றன. இப்படி போலியாக பரப்பபட்ட ஒரு செய்தியைத்தான் இப்போது பார்க்க போகிறோம். ஆப்கானிஸ்தான் விவகாரம்தான் இப்போது உலகமெங்கும் தலைப்பு செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அங்கு சுமார் 20 ஆண்டுகள் நடந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளது.

ஆப்கான் விவகாரம்
ஆப்கான் அரசை வீழ்த்தி அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். தாலிபான் பயங்கரவாதிகள். டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் என எங்கு திரும்பினாலும் ஆப்கானிஸ்தான் பற்றிய காற்றுதான் வீசுகிறது. ஒரு சிலர் தாலிபான்களுக்கு ஆதரவாகவும், ஒரு சிலர் ஆப்கான் முந்தைய அரசுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை கூறி வருகின்றனர். தாலிபான்கள் வந்த பிறகு ஆப்கானில் பெண்கள், குழந்தைகள் நிலை குறித்தும் பலரும் கருத்துகளையும், தகவல்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

வைரலான புகைப்படம்
இப்படியாக புர்கா உடையணிந்த 3 பெண்கள் கால்களில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் நடந்து செல்வது போலவும், அந்த பெண்களுக்கு முன்னால் நடந்து செல்லும் ஒரு மனிதன் அந்த சங்கிலியின் இன்னொரு முனையை கையில் பிடித்துக் கொண்டு செல்வது போலவும் சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலானது. இதுதான் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் நிலை என்று அந்த புகைப்படத்தின் கீழே குறிப்பிடப்பட்டு இருந்தது.

பொங்கியெழுந்த நெட்டிசன்கள்
'மீனை பிடிக்கும் கொக்கை போல்' இதற்காகவே சமூக வலைத்தளங்களில் காத்திருந்த நெட்டிசன்கள் ஏகத்துக்கும் பொங்கியெழுந்து விட்டனர். தாலிபான்களை திட்டி தீர்த்த அவர்கள், ஆப்கானிஸ்தான் பெண்கள், குழந்தைகள் நிலை குறித்து தங்களது உணர்ச்சி கருத்துக்களை அள்ளி வீசினார்கள். ஆனால் இப்போது அந்த புகைப்படம் போலியானது என்பது தெரியவந்துள்ளது. அதாவது இந்த படம் ஆப்கானிஸ்தானிலேயே எடுக்கப்படவில்லை. இந்த புகைப்படம் 2003-ம் ஆண்டு ஈராக்கில் எடுக்கப்பட்டது.

இதுதான் ஒரிஜினல்
புகைப்படக் கலைஞர் முராத் துசியோல் என்பவர் இதனை படம்பிடித்துள்ளார். முராத் துசியோல் எடுத்த ஒரிஜினல் படத்தில் அந்த மனிதரும், அவருக்கு பின்னால் புர்கா அணிந்த 3 பெண்களும் சாதரணமாக நடந்து செல்கின்றனர். பெண்களின் காலில் எந்த சங்கிலியும் கட்டப்படவில்லை; அந்த நபரும் சங்கிலியை பிடித்திருக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்த ஒரிஜினல் புகைப்படத்தை எடுத்த நெட்டிசன்கள் சிலர், பெண்கள் காலில் சங்கிலி கட்டி இருப்பதுபோல் அதனை மாற்றி தற்போது ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டதுபோல் சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டனர். இதனை உண்மை என நம்பிய சமூகவலைத்தளவாசிகளும் தங்களின் அதிகப்படியான எனர்ஜியை தேவையில்லாமல் இதில் கொட்டி விட்டனர்.

இவர்களை ஒழிக்க முடியாது
''நான் இஸ்தான்புல்லில் வசிக்கும் ஒரு புகைப்பட கலைஞர். 30 வருடங்களாக இந்த பணியை செய்து வருகிறேன். ஈராக்கில் 2003-ம் ஆண்டில் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் வீட்டுக்கு சென்று சிலர் இரங்கல் தெரிவித்து வந்தனர். அப்போதுதான் எதேச்சையாக இந்த படத்தை எடுத்தேன். ஆனால் எனது படத்தை துரதிர்ஷ்டவசமாக தவறாக கையாண்டு வருகின்றனர். இது குறித்து நான் எச்சரித்து வருகிறேன், ஆனால் யாரும் காது கொடுத்து கேட்பதாக தெரியவில்லை'' என்று புலம்பி தவிக்கிறார் புகைப்படக் கலைஞர் முராத் துசியோல். ''திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது'' என்பதுபோல் இப்படி போலியாக கருத்துக்கள் பரப்புவர்கள் தாங்களாக திருந்தினால்தான் உண்டு. வைரஸ் போல் பெருகி வரும் இந்த வதந்தியாளர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பதே உண்மை.












Click it and Unblock the Notifications