"இந்தியா" அணியில் ஒரே டமார் டமார் சத்தம்.. கூட்டணிக்கு பெரிய அணுகுண்டு வைக்கும் மமதா பானர்ஜி?
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் "இந்தியா" கூட்டணிக்கு உயிர் கொடுக்கலாம் என காங்கிரஸ் கனவு காணும் நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி தெரிவித்திருக்கும் கருத்துகள் கூட்டணிக்கே வேட்டு வைக்கிறதா? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்துவிட்டன. தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. சத்தீஸ்கர், ராஜஸ்தானில் பாஜகவிடம் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பாஜக தக்க வைத்துக் கொண்டது. மிசோரமில் ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை பிடித்துள்ளது.

4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கும் போதே, "இந்தியா" கூட்டணியின் கூட்டம் டிசம்பர் 6-ந் தேதி நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின. 5 மாநில சட்டசபை தேர்தலுக்காக "இந்தியா" கூட்டணியின் ஒட்டு மொத்த நடவடிக்கைகளையும் காங்கிரஸ் நிறுத்தி வைத்தது. தற்போது 5 மாநில தேர்தல் முடிவடைந்ததால் "இந்தியா" கூட்டணியை உயிர்ப்பிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.
ஆனால் "இந்தியா" கூட்டணி சில மாதங்களுக்கு முன்னர் இருந்ததைப் போல ஒற்றுமையுடன் பாஜகவுக்கு எதிராக வலிமையாக உருவெடுக்குமா? என்கிற சந்தேகத்தை மமதாவின் கருத்துதான் கிளப்பிவிட்டுள்ளது. "இந்தியா" கூட்டணியின் டிசம்பர் 6-ந் தேதி கூட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு, அப்படி எனக்கு எந்த ஒரு தகவலும் வரவில்லை. டிசம்பர் 6,7 ஆகிய் தேதிகளில் எனக்கு ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் உள்ளன. எனக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால் "இந்தியா" கூட்டணிக்கு சென்றிருப்பேன். என்னுடைய ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளை உடனடியாக மாற்றுவது சாத்தியமில்லை என பட்டும் படாமலும் கூறிவிட்டார் மமதா பானர்ஜி.
மமதா பானர்ஜியின் இந்த பதிலை காங்கிரஸ் மற்றும் "இந்தியா" கூட்டணியின் தலைவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. அத்தனை பேருக்கு அதிர்ச்சி தரும் வகையில்தான் மமதா பானர்ஜி கருத்து தெரிவித்திருக்கிறார். இதனால் "இந்தியா" கூட்டணியின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகி இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications