“மாற்றம் அல்ல.. பழிவாங்கல்!” மம்தா பானர்ஜி வைத்த முழக்கம்! மேற்கு வங்கத்தில் மாறும் களம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 2011ம் ஆண்டு, மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளை வீழ்த்த, "மாற்றம் வேண்டும், பழிவாங்கல் அல்ல" என்கிற முழக்கத்தை வைத்திருந்தார். இப்போது "மாற்றம் அல்ல.. பழிவாங்கல்" என்கிற முழக்கத்தை முன்வைத்திருக்கிறார். இது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 1977 தொடங்கி 2011 வரை, மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதிக்கம் இருந்தது. ஆனால், 2011ல் மம்தா அதை உடைத்தார். அப்போது அவர் வைத்த அரசியல் முழக்கத்திற்கும், இப்போது அவர் முன் வைத்திருக்கும் அரசியல் முழக்கத்திற்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன.

பழிவாங்கல் வேண்டும்

2011-இல் இடதுசாரி ஆட்சியை வீழ்த்தியபோது மம்தா முன்வைத்த முழக்கம் 'மாற்றம் வேண்டும், பழிவாங்கல் அல்ல' என்பதுதான். ஆனால், 15 ஆண்டுகள் கழித்து இப்போது அவர் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். 'எங்களுக்கு மாற்றம் தேவையில்லை, பழிவாங்கல் தான் வேண்டும்' என்று அவர் ஆக்ரோஷமாகப் பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

மம்தா இவ்வாறு பேச 3 காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் எஸ்ஐஆர் தான். இந்த விஷயத்தில், மத்திய அரசுக்கு எதிராக நேரடியாக உச்சநீதிமன்றம் வரை சென்று மம்தா போராடியுள்ளார்.

மேற்கு வங்க நிலைமை

தமிழகத்தைப் போலவே மேற்கு வங்கத்திலும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் சுமார் 27 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது தனது வாக்கு வங்கியைச் சிதைப்பதற்கான மத்திய அரசின் சதி என்று மம்தா கருதுகிறார். குறிப்பாக மேற்கு வங்கத்தில் இருக்கும் 30% முஸ்லீம் வாக்குகளை தனக்கு கிடைக்க கூடாது என்பதற்காக, வாக்காளர் பட்டியலிலிருந்து அவர்களை நீக்கியிருப்பதாக மம்தா குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது தன்னை ஜனநாயக ரீதியாகத் தன்னை முடக்க நினைக்கும் செயல் என்றும், அப்படி நினைப்பவர்களுக்கு அதே பாணியில் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும், எனவேதான் பழிவாங்கல் என்ற முழக்கத்தை வைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

West Bengal

காரணம் இதுதான்

மம்தா இப்படி பேச இன்னொரு காரணம், மத்திய விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள்தான். மத்திய விசாரணை அமைப்புகள் (ED, CBI, NIA) தேர்தல் நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் I-PAC ஊழியர்கள் மீது தொடர்ந்து ரெய்டு நடத்தி வருகின்றன. இந்த செயல் தனது கட்சியை முடக்கும் முயற்சி என்று மம்தா அச்சம் தெரிவித்திருக்கிறார்.

எனவே, 'நீங்கள் எங்களை வேட்டையாடினால், நாங்களும் சும்மா இருக்க மாட்டோம்" என்ற எச்சரிக்கையைத் தொண்டர்களுக்குக் கடத்தவே இவ்வளவு ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகிறார் என்று சொல்லப்படுகிறது.

அதிகார போட்டி

மூன்றாவது காரணம், மம்தா களமிறங்கும் தொகுதியை பாஜக டார்கெட் செய்திருப்பதுதான். தமிழ்நாட்டில் என்னதான் திமுக-அதிமுக இடையே பஞ்சாயத்து இருந்தாலும், கொளத்தூரில் எடப்பாடி பழனிசாமியோ, எடப்பாடி தொகுதியில் மு.க.ஸ்டாலினோ போட்டியிட மாட்டார்கள். ஆனால், மேற்கு வங்கத்தில் சீன் வேற.. மம்தா போட்டியிடும் பவானிபூர் தொகுதியில், பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி களமிறக்கப்பட்டிருக்கிறார். இது மம்தாவை டென்ஷனாக்கியிருக்கிறது.

கடந்த 2021ல், மம்தா பானர்ஜி தனது பாரம்பரிய தொகுதியான பவானிபூரை விட்டுவிட்டு, சுவேந்து அதிகாரிக்கு எதிராக நந்திகிராமில் களமிறங்கியிருந்தார். ஆனால், 1956 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். எனவே இந்த தேர்தலில் அதற்கு பழிவாங்க வேண்டும் என்று மம்தா உறுதியா இருந்து வருகிறார்.

இந்த பின்னணியில்தான், இந்த தேர்தலில் மாற்றம் வேண்டாம்.. பழிவாங்கல் வேண்டும் என்று மம்தா முழக்கத்தை முன்வைத்திருக்கிறார்.

வலுவான எதிரி

கடந்த 15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இது மக்களிடையே சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீண்ட கால ஆட்சி இயல்பாகவே சலிப்பை கொடுக்கும். போதாத குறைக்கு மம்தா அரசு மீது சில குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. இதனை மடை மாற்றம் செய்ய, தொண்டர்களின் சோர்வை நீக்க.. வலுவான எதிரி அவசியம். எனவேதான் பாஜகவுக்கு எதிராக மம்தா இப்படி ஆக்ரோஷமாக இறங்கியிருக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+