"டிராமா போடும் மம்தா.. சட்ட ஒழுங்கை சீர்குலைக்க போடும் திட்டம்தான் இது!" பாஜக சுவேந்து அதிகாரி பகீர்
டெல்லி: மேற்கு வங்க பாஜக தலைவரான சுவேந்து அதிகாரி, அம்மாநில முதல்வர் மம்தா மீது சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மக்களை ஏமாற்ற மம்தா முயல்வதாகவும் டெல்லிக்குப் போய் டிராமா போடுவதாகவும் சுவேந்து அதிகாரி விமர்சித்துள்ளார். மேலும், இதை வைத்து சட்ட ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தவும் கூட மம்தா திட்டமிட்டுள்ளதாக அவர் சாடினார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற உள்ளது. முன்னதாக இது குறித்து நேற்றைய தினம் தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்த மம்தா, சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

சுவேந்து அதிகாரி
இதற்கிடையே மம்தாவை மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கடுமையாகச் சாடியுள்ளார். மம்தா டெல்லிக்கு போய் டிராமா போடுவதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், தெளிவான வாக்காளர் பட்டியல் இல்லாமல் தேர்தல்களை நடத்த பாஜக அனுமதிக்காது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
முன்னதாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமரைச் சந்தித்த முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தான் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டினார். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியால் பாதிக்கப்பட்டவர்களை, தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்திக்க விடாமல் போலீஸ் தடுத்தாக மம்தா குற்றஞ்சாட்டியிருந்தார்.
டிராமா போடுகிறார்
இது குறித்துப் பேசிய மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மாநில தலைவருமான சுவேந்து அதிகாரி, "மம்தா டெல்லிக்கு போய் டிராமா போடுகிறார். அந்த டிராமாவுக்கு பலியாகாத டெல்லி போலீஸ் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லிக்கு போன மம்தா டிரஸ் மாற்றக் கூட நேரம் இல்லை. நேரடியாகத் தேர்தல் ஆணையத்திற்குச் சென்றதாகச் சொல்கிறார். அவ்வளவு அவசரமாகப் போனாலும் மைக் எடுத்துப் போக மம்தா மறக்கவில்லை. அதை வீடியோவாக எடுத்துப் போடவும் மறக்கவில்லை.
டெல்லி பதற்றமான பகுதி.. மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டால், காவல்துறை பங்ள பவனில் தேடுதல் வேட்டையைக் கூட நடத்தலாம்" என்றார். பங்ள பவன் என்பது டெல்லியில் அமைந்துள்ள மேற்கு வங்க விருந்தினர் மாளிகையாகும். அங்கு போலீசார் சோதனை நடத்தலாம் என சுவேந்து அதிகாரி கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
திட்டம் இதுதான்
இது தொடர்பாக சுவேந்து அதிகாரி மேலும் பேசுகையில், "சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியைச் சீர்குலைக்க வேண்டும்.. தேவைப்பட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்கி மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே மம்தாவின் திட்டம். ஞானேஷ் குமார், வானிஷ் குமார் ஆகியோரை சந்திப்பதன் மூலம், மனோஜ் குமார் அகர்வாலுக்கு (மேற்கு வங்கத் தலைமைத் தேர்தல் அதிகாரி) அழுத்தம் கொடுக்க முடியும் என அவர் நம்புகிறார்.
இந்தச் சூழலில் தான் 2024 வாக்காளர் பட்டியலின்படி தேர்தல் நடத்தக் கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இவரின் சதி அம்பலமாகியுள்ளது. இதை ஏற்கவே முடியாது. வாக்காளர் பட்டியலில் பல போலியான சட்டவிரோதமாக நாட்டில் நுழைந்த பலருடைய பெயர்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்த எஸ்ஐஆர் பணிகள் தேவைப்படுகிறது.
மக்களை ஏமாற்ற முயற்சி
முதலமைச்சர் மம்தா பானர்ஜி சமீபத்தில் மேற்கு வங்க மாவட்ட ஆட்சியர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார் (மாவட்ட ஆட்சியர்கள் தான் மாவட்ட தேர்தல் அதிகாரிகளாகவும் உள்ளனர்). அவர்களை வைத்து மக்களைத் துன்புறுத்தத் திட்டமிட்டார்.. இதன் மூலம், மக்கள் கோபத்தைத் தேர்தல் ஆணையம் மற்றும் பாஜக மீது திருப்புவதே மம்தாவின் திட்டம்" என்றார்.
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு, 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு, மொத்தம் 7.08 கோடி வாக்காளர் உள்ளனர். இருப்பினும், திரிணாமுல் வாக்காளர்களைக் குறிவைத்துத் தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளதாக மம்தா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே மம்தா மீது சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications