"தேர்தல் அதிகாரி என்னை பார்த்து கத்தினார்.. நான் சொல்வதை கூட கேட்கல.." மம்தா பரபர குற்றச்சாட்டு
டெல்லி: மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக அம்மாநில முதல்வர் மம்தா பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதற்கிடையே பாஜக ஆதரவு கொண்ட தேர்தல் அதிகாரிகள் பல லட்சம் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக விமர்சித்தார். மேலும், தேர்தல் அதிகாரி தன்னை நோக்கி சத்தம் போட்டதாகவும் அவர் சாடினார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி மேற்கு வங்கத்திலும் எஸ்ஐஆர் பணிகள் நடத்தப்பட்டன. இருப்பினும், இந்த நடவடிக்கையில் திரிணாமுல் வாக்காளர்கள் குறிவைத்து நீக்கப்பட்டதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

மம்தா
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா நேரடியாக ஆஜராகி வாதிடுகிறார். இதனால் தேசியளவில் கவனிக்கப்படும் ஒரு வழக்காக இது மாறியுள்ளது. முன்னதாக மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்ட எஸ்ஐஆர் பணிகளை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்தார்.
அவசர கதியில் இந்தப் பணிகள் நடத்தப்படுவதாக அவர் சாடினார். மேலும், பாஜக மனப்பான்மை கொண்ட அதிகாரிகளால் நடத்தப்படும் இந்தப் பணிகள் திரிணாமுல் காங்கிரஸ் வாக்காளர்களைக் குறிவைத்து நடத்தப்படுவதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், இதில் பல அதிகாரிகளைத் துன்புறுத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
செய்தியாளர் சந்திப்பு
எஸ்ஐஆர் பணிகளில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட குடும்பத்தினரை டெல்லிக்கு அழைத்து வந்த மம்தா அவர்களைச் செய்தியாளர் சந்திப்பில் அறிமுகப்படுத்தினர். இதுபோல பல லட்சம் மக்கள் எஸ்ஐஆர் பணிகளில் தாங்கள் வாக்களிக்கும் உரிமையை இழந்துள்ளதாக அவர் சாடினார்.
தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு டைரக்டர் ஜெனரல் சீமா கன்னாவை பாஜக ஆதரவாளர் என்றும் செயற்கை நுண்ணறிவைத் தவறாகப் பயன்படுத்துபவர் என்றும் மம்தா பானர்ஜி சாடினார். அவர் மேலும், "உண்மை என்ன என்றே தெரியாமல்.. தேர்தல் விதிகள், கள ஆய்வு எதைப் பற்றியும் கவலைப்படாமல், வரைவுப் பட்டியலிலிருந்து 58 லட்சம் பெயர்களை நீக்கியுள்ளனர். இது சட்டவிரோதம்" என்று அவர் குற்றம்சாட்டினார். மேலும், உயிரிழந்தோர் எனச் சொல்லிப் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
கடும் தாக்கு
மேலும், சிறப்புப் பார்வையாளர்கள் நியமனத்தையும் மம்தா கடுமையாக விமர்சித்தார். அவர் மேலும், "இது மேற்கு வங்கத்தில் மட்டுமே நடக்கிறது.. இது தேர்தல் விதிகள், சட்ட விதிகளுக்கு எதிரானது. பாஜக அதிகாரிகள் மற்றும் 8,100 பார்வையாளர்கள் ஆகியோர் மாவட்ட தேர்தல் அதிகாரி சொல்வதைக் கேட்பதில்லை. அவர்கள் தங்கள் இஷ்டத்திற்குச் செயல்படுகிறார்கள்.
கத்தினார்
திங்கள்கிழமை நான் டெல்லியில் தேர்தல் அதிகாரியைப் பார்க்கச் சென்றிருந்தேன். எனது கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் அவர் சத்தம் போட ஆரம்பித்தார். எனது எந்தவொரு வேண்டுகோளையும் மதிக்கவில்லை. நாங்கள் அடிமைகள் அல்ல. பூக்களும் இனிப்புகளும் கொண்டு சென்றோம். அவர்களின் நடத்தையால் அவர்களைப் புறக்கணித்தோம்" என்று விளக்கமளித்தார்.
மேற்கு வங்கத்தைத் தேர்தல் ஆணையம் குறிவைப்பதாக மம்தா குற்றம்சாட்டினார். அவர் மேலும், "மற்ற அனைத்து மாநிலங்களிலும் இருப்பிடச் சான்றிதழ், குடும்பப் பதிவு, அரசுத் திட்ட ஆவணங்கள் அனுமதிக்கப்படும்போது, மேற்கு வங்கத்தில் மட்டும் எதுவும் அனுமதிக்கப்படுவதில்லை. ஏன் இந்த பாரபட்சம்?' என்று அவர் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications