"காலிஸ்தான் பிரிவினைவாதம்.." அவர்களையும் வரவேற்கிறோம்! கனடா உயர் ஆணையர் சர்ச்சை! கிளம்பிய எதிர்ப்பு
டெல்லி: கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கும் இந்திய மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இந்தியாவுக்கான கனடா உயர் ஆணையர் கேமரூன் மேக்கே இது குறித்து சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.
இந்தியர்கள் பல்வேறு வெளிநாடுகளிலும் தொடர்ச்சியாக செட்டிலாகி வருகின்றனர். ஐடி தொடங்கி பல்வேறு துறைகளிலும் இந்தியர்கள் சிறந்து விளங்குவதால் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
அப்படி இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் முக்கியமானது கனடா. அங்கு இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளும் கூட சிறப்பாகக் கொண்டாடப்படும்.
உலககோப்பை டி20: பாகிஸ்தான்-ஜிம்பாப்வே ரசிகர்கள் திடீர் மோதல்.. காரணம் மிஸ்டர் பீன்.. ஒரே காமெடி

பஞ்சாப்
குறிப்பாகப் பஞ்சாபில் இருந்து சென்று செட்டிலானவர்கள் அதிகம். அவர்களில் ஒரு பகுதியினர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பிற்கும் ஆதரவு தெரிவிப்பவர்கள் ஆவர். பஞ்சாபை காலிஸ்தான் என்று தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கை. இந்தியாவில் இந்த அமைப்பிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், கனடாவில் காலிஸ்தான் இயக்கங்களுக்குத் தடை இல்லை.

காலிஸ்தான்
இதனால் அவர்கள் வெளிப்படையாகவே காலிஸ்தான் கோரிக்கையை வலியுறுத்துவார்கள். சுதந்திர தினம், குடியரசு தினங்களை அங்குள்ள இந்தியர்கள் கொண்டாடும் நிலையில், அவர்களுக்குப் பிரச்சினை கொடுக்கும் வகையிலேயே அதே இடத்திற்கு வந்து பிரிவினை கோஷங்களையும் எழுப்புவார்கள். காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுக்குக் கனடாவிலும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

சர்ச்சை கருத்து
இருப்பினும், இதை அந்நாட்டு அரசு கேட்பதாகத் தெரியவில்லை. இதற்கிடையே காலிஸ்தான் அமைப்புகளைக் கனடா அரசு எப்படி கையாளும் என்ற கேள்விக்குப் பதில் அளித்த இந்தியாவுக்கான கனடா உயர் ஆணையர் கேமரூன் மேக்கே, "கனடாவில் நாங்கள் அனைத்து நம்பிக்கை கொண்டவர்களையும் நேசிக்கிறோம். கனடாவில் அனைத்து தரப்பினரும் வரவேற்கப்படுகிறார்கள்" என்றார்.

விளக்கம்
கேமரூன் மேக்கே டெல்லியில் குருத்வாரா பங்களா சாஹிப்பிற்கு சென்ற போது ஏஎன்ஐ செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவின் நட்பு நாடு ஒன்றே, எப்படி பிரிவினைவாத குழுவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கலாம் எனப் பலரும் கேள்வி எழுப்பினர். இதையடுத்து இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் கனடா எப்போதும் ஆதரிக்கும் என்று அவர் தனது கருத்தைத் தெளிவுபடுத்தினார்.

மோதல்
முன்னதாக தீபாவளி தினத்தன்று கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கும் இந்தியக் குடிமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்குக் கொடியேற்றும் விவகாரம் தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. அங்குத் திரண்டவர்களில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் காலிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷத்தை எழுப்பினர். எதிர் தரப்பினர் ஜெய் ஸ்ரீராம் என்று பதிலுக்கு கோஷம் எழுப்பினர்.

வாக்கெடுப்பு
மேலும், இந்தியாவில் கடை செய்யப்பட்டுள்ள சீக்கியர்களுக்கான நீதி காலிஸ்தான் தொடர்பாக வரும் நவம்பர் 6ஆம் தேதி கனடாவில் பொது வாக்கெடுப்பை நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளனர். இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்குச் சவாலான ஒன்று என்பதால் இதைத் தடுத்து நிறுத்த கனடா அரசு தேவையான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.