ஸ்டாலின் சின்ன சின்னதாக கட்டிய கூட்டணி கூடு.. இன்று சின்னத்துக்குள் சுருங்கிய திமுக வீடு
சென்னை: தமிழக அரசியலில் ஒரு மெகா கூட்டணியை கட்டமைத்து தேர்தலை எதிர்கொண்ட திமுக, தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழலில் புதிய சவால்களை சந்தித்து வருகிறது.. தவெகவின் எழுச்சியால் கூட்டணிக் கட்சிகள் மெல்ல விலக தொடங்கியுள்ள நிலையில், திமுகவின் தற்போதைய பலம் என்பது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர்களை மட்டுமே சார்ந்திருப்பதாக மாறியுள்ளது.. அதாவது கூட்டணியின் உறுதித்தன்மையை விட, சின்னம் வழங்கிய சட்டரீதியான பிடியே இன்று திமுகவின் பலத்தை நிலைநிறுத்தி வருகிறது..!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு சுவாரசியமான அரசியல் சூழலை உருவாக்கியுள்ளன.. 2021 தேர்தலை விட இந்த முறை திமுக ஒரு மாபெரும் கூட்டணியை மிக நேர்த்தியாகக் கட்டமைத்து தேர்தலைச் சந்தித்தது..

திமுக கூட்டணி
கடந்த முறை அதிமுக பக்கமிருந்த தேமுதிக, எஸ்டிபிஐ போன்ற கட்சிகளையும் தன் பக்கம் இழுத்து, பலமான ஒரு கட்டமைப்பை திமுக உருவாக்கியிருந்தது.. மறுபுறம், தமிழக வெற்றிக் கழகம் எந்தக் கூட்டணியும் இல்லாமல் தனித்தே களம் கண்டது.. ஆரம்பத்தில் தவெக தனித்து விடப்பட்டதாகத் தோன்றினாலும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒட்டுமொத்த அரசியல் களமும் மாறியுள்ளது..
இப்போது 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு, ஆட்சியமைக்க இன்னும் சில இடங்களே தேவைப்படும் நிலையில், அரசியல் சூழல் வேகமாக நகர்கிறது..
விஜய்க்கு ஆதரவு
குறிப்பாக, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தவெகவிற்கு தங்கள் ஆதரவை வழங்க முன்வந்துள்ளன.. இதன் மூலம் தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது. விசிகவின் ஆதரவும் கிடைக்கும் பட்சத்தில் விஜய் ஆட்சியமைப்பது உறுதியாகிவிடும் என்ற சூழல் நிலவுகிறது..
இங்கே கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், மற்ற கட்சிகளைத் தன் பக்கம் இழுக்க விஜய் எந்த முயற்சியும் செய்யவில்லை அல்லது மற்றவர்களின் அரசியல் நகர்வுகளில் அவர் நேரடியாக குறுக்கிடவும் இல்லை.. மாறாக, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான சூழ்நிலையால் கூட்டணிக் கட்சிகளே தவெக பக்கம் நகரத் தொடங்கியுள்ளன. இதற்கு முதல் அடியை போட்டது காங்கிரஸ்தான். விஜய்யை தேடிச்சென்று ஆதரவு வழங்கியது..
திமுக உதயசூரியன் சின்னம்
இந்த சூழலில் திமுக இன்று இருக்கும் நிலைமையை ஒரு அரசியல் பார்வையில் அணுக வேண்டியது அவசியமாகிறது.. திமுக இன்று தனித்து விடப்பட்டுவிட்டதா என்றால், தொழில்நுட்ப ரீதியாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்..
ஆனால் இன்று திமுகவின் பலமாகத் தெரிவது உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள் மட்டுமே.. ஒரு மெகா கூட்டணியை உருவாக்கிய திமுக, இன்று உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாத கட்சிகள் ஒவ்வொன்றாக விலகிச் செல்வதைக் காண்கிறது.. அதாவது, உதயசூரியன் சின்னம் என்ற அந்த ஒற்றைப் புள்ளிதான் இன்று திமுகவின் பலத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது..
ஒருவேளை இன்று திமுகவுடன் இருப்பவர்கள் தங்களின் சொந்தச் சின்னங்களில் போட்டியிட்டிருந்தால், அவர்கள் என்ன முடிவெடுத்திருப்பார்கள் என்பது விவாதத்திற்குரிய ஒன்றாக மாறியுள்ளது..
திமுகவின் பலம் சின்னம்
தேர்தல் ஆணைய விதிகளின்படி, வேறொரு கட்சியின் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள் அவ்வளவு எளிதில் மாற்று முடிவை எடுக்க முடியாது என்பதால், அவர்கள் இன்றும் திமுகவின் அங்கமாகவே நீடிக்கிறார்கள்.. எனவே, திமுக இன்று பலவீனப்பட்டுவிட்டது என்று சொல்வதை விட, 'சின்னம்' என்ற சட்டரீதியான பாதுகாப்பு வளையத்திற்குள் தனது பலத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது என்பதே உண்மை..
மெகா கூட்டணியாக தொடங்கிய ஒரு பயணம், இன்று உதயசூரியன் சின்னத்தின் கீழ் இருப்பவர்களை மட்டுமே சார்ந்திருக்கும் நிலைக்கு வந்துள்ளது.. இது திமுகவிற்கு ஒரு பின்னடைவு என்பதை விட, மாறிவரும் அரசியல் சூழலில் தனது பலத்தை தக்கவைத்துக் கொள்ள சின்னம் எவ்வளவு முக்கியமானது என்பதையே உணர்த்துகிறது..!!!












Click it and Unblock the Notifications