விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ
திருப்பூர்: சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், விஜய பாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரண்டனர். இதில் அதிருப்தியாக அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இதில் குதிரை பேரம் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். தாராபுரம் எம்எல்ஏவாக இருந்த சத்தியபாமா, தனக்கு தவெக அளித்த வாக்குறுதி என்ன என்று உடைத்து பேசியுள்ளார்.
தவெகவில் இணைந்துள்ள தாராபுரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்தியபாமா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "என்னை வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்காக நான் நிறைய வாக்குறுதிகள் கொடுத்துள்ளேன். அதற்காக காத்துகொண்டிருந்தபோது பெரிய இடி விழுந்ததால் இப்படி ஒரு முடிவு எடுத்தேன். திமுகவுடன் சேர வேண்டும் என முடிவு செய்த பொதுச்செயலாளரின் முடிவில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் இந்த முடிவை எடுத்தேன்.

விஜய் கொடுத்த வாக்குறுதி
அதிமுகவில் கருத்துகள் பரிமாறப்படுவதில்லை. கடந்த காலங்களில் கருத்துகளை கேட்டுதான் இயங்குவார்கள். இப்போது எங்களின் கருத்துகளை பரிமாற முடிவதில்லை. என்னுடைய நிலைப்பாட்டை கருதி தான் தவெகவில் இணைந்தேன். அவர்களிடம் எந்த பிரதிபலனும் எதிர்பார்த்து இணையவில்லை. நான் தவெகவிடம், நான் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தான் கோரிக்கை வைத்தேன்.
அமைச்சர் ஆதவ் மற்றும் முதலமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தேன். மக்களுக்காக வைக்கும் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினர். தேர்தலுக்கு முன்பு திமுகவும், அதிமுகவும் பரஸ்பரம் எவ்வளவோ விமர்சனங்கள் வைத்தனர். அவர்களுடன் கூட்டணி வைக்க முயற்சிக்கும்போது, சமீபத்தில் வந்துள்ள தவெகவுடன் இணைவது தவறில்லை. குறுகிய காலத்திலேயே நல்ல திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர்.
குதிரை பேரமா
தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து நான் ஒரு ரூபாய் கூட பெறவில்லை. யாரிடமும் வசூல் செய்யாமல் சொந்த நிதியை தான் தேர்தலில் செலவிட்டேன். குதிரை பேரத்திற்காக பேசி முடிவு எடுக்கவில்லை. அங்கு குதிரை பேரம் இல்லை. இது சத்தியம். தவெக ஆட்சியை விமர்சிப்பதற்காக அப்படி விமர்சிக்கிறார்கள். அதிமுகவின் சூழலால் நான் நெருக்கடிக்கு தள்ளப்பட்டதால் மாறியுள்ளேன். மக்களுக்காக நான் பணியாற்றும்போது என்னை ஏற்று கொள்வார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications