சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள்
திருவனந்தபுரம்: சவுதி அரேபியாவில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபரை, "ரத்த பணம்" எனக்கூறப்படும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பணம் வழங்கி கேரள மக்கள் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றிய விவரங்கள் வருமாறு:-
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். 46 வயதான இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு டிரைவர் பணிக்கு சென்றார். சவுதியில் தான் வேலை பார்த்த வீட்டு உரிமையாளரின் 15 வயது மகன் அனஸ் அல் பாயிஸ் என்ற சிறுவனை பராமரிப்பது, அவனை காரில் அழைத்து செல்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

மரண தண்டனை விதிப்பு
இந்த நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி சிறுவனை காரில் அழைத்து சென்ற போது அப்துல் ரஹீமின் கை பட்டு சிறுவனுக்கு பொருத்தப்பட்டு இருந்த செயற்கை சுவாச குழாய் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தது. இதில் செயற்கை சுவாசம் மூலமாக உயிர் வாழ்ந்து வந்த சிறுவன் உயிரிழந்தான். இதையடுத்து அந்த நாட்டின் சட்டப்படி கொலை குற்றம் என கருதப்பட்டு ரஹீமுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தால் ரஹீமை விடுவிக்க முடியும் என்ற நிலை சவுதி அரேபிய சட்டத்தில் உள்ளது. இதன்படி, பெரும் சட்ட போராட்டம் நடைபெற்றது. சிறுவனின் குடும்பத்தினர் ரூ.34 கோடி பெற்றுக்கொண்டு பொது மன்னிப்பு வழங்க சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, அப்துல் ரஹீமை மீட்க மலையாளிகள் சங்கம் சார்பில் நிதி திரட்டப்பட்டது.
34 கோடி ரூபாய் கொடுத்த கேரள மக்கள்
34 கோடி ரூபாய் பணம் திரட்டப்பட்டு அல் பாயிசின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. இதை ஏற்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வழக்கை வாபஸ் செய்தனர். அதன்பிறகு அவருக்கு தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது. 20 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட அப்துல் ரஹீம், நேற்று கேரளா திரும்பினார். ரியாத்தில் இருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையம் வந்தடைந்த ரஹீமை, அவரது உறவினர்கள் உற்சாகமாக வரவேற்று அழைத்துச் சென்றனர்.
விமான நிலையத்தில் தொழிலதிபர் பாபி செம்மண்ணூர் ரஹீமை கட்டித்தழுவி வரவேற்றார். அப்போது ஏராளமான மக்கள் மற்றும் ஊடகத்தினர் அங்கு திரண்டிருந்தனர். ரஹீம் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் 'தம்ஸ்-அப்' சைகை காட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஹீம், "எனக்கு உதவிய அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்" என்றார். ரஹீம் தூக்குத் தண்டனையில் இருந்து தப்பிக்க, கேரள மக்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து இந்தப் பெரும் தொகையை திரட்டியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications