“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!
சென்னை: "காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், ஐ.யூ.எம்.எல்-ஐ விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை, விசிக அமைச்சரவையில் பங்கேற்றதை பொறுத்துக்கொள்ள முடியாத கும்பல் நமக்கு எதிராக அவதூறுகளை பரப்புகிறார்கள்" என திமுகவை மறைமுகமாக சாடியுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
தவெக அமைச்சரவையில் விசிக சார்பில் வன்னி அரசு இடம்பெற்ற நிலையில், திமுக மற்றும் விசிக தொண்டர்களிடையே உரசல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக சில இடங்களில் இருதரப்பினர் இடையே மோதலும் ஏற்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக விசிக தொண்டர்களுடன் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சமூக ஊடகம் வாயிலாக உரையாற்றினார்.

அப்போது திருமாவளவன் பேசுகையில், "தவெகவுக்கு ஆதரவாக நாம் எடுத்த முடிவை ஆ.ராசா உள்ளிட்ட சிலர் விமர்சிக்கிறார்கள் என்பது சற்று வலியாக உள்ளது என்றாலும் அவர்கள் ஆதங்கப்படுவதில் ஒரு நியாயம் இருப்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். திமுகவை கடுமையாக விமர்சிக்கும் தவெகவோடு களத்தில் நிற்பதை அவ்வளவு எளிதாக எப்படி அவர்களால் கடந்து செல்ல முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "நடந்து முடிந்த தேர்தல் முடிவு அதிர்ச்சி அளித்தது. ஜனாதிபதி ஆட்சி அமைந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்தோம். நாம் எடுத்த முடிவில் உறுதியாக இருப்போம் நாம் எத்தகைய முடிவு எடுத்திருந்தாலும், விமர்சனங்களை வீசத்தான் செய்வார்கள்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய மதச்சார்பற்ற, நாம் அரசியல் நெருக்கடியை உணர்ந்த நிலையில் ஆதரவு கொடுத்து இருக்கிறோம். இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமைந்து விடக்கூடாது. தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற கூடாது என்ற நோக்கத்தில் பிரச்சாரம் செய்தோம் எதிர்த்து களமாடினோம். இதனால் பாஜகவின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்.
காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், ஐ.யூ.எம்.எல்-ஐ விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை, விசிக அமைச்சரவையில் பங்கேற்றதை பொறுத்துக்கொள்ள முடியாத கும்பல் நமக்கு எதிராக அவதூறுகளை பரப்புகிறார்கள். விசிகவை விமர்சித்த திமுக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து எவ்வித போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டாம்.
தவெகவுக்கு ஆதரவளிப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் சொல்லிவிட்டுதான் வந்தேன். விசிகவும், திருமாவளவனும் எவ்வளவு நேர்மையாக இருந்தார்கள் என அண்ணன் ஸ்டாலினுக்கு தெரியும். அவரை சுற்றி இருக்கும் ஒரு சிலரும் நன்கு அறிவார்கள்.
அதையும் தாண்டி நாம் எடுத்த முடிவை ஆ.ராசா உள்பட பலர் விமர்சனம் செய்கிறார்கள் என்பது சற்று வலியாகத்தான் இருக்கிறது. என்றாலும் கூட அவர்கள் ஆதங்கப்படுவதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்பதை உட்கொள்ள வேண்டும். ராசாவை எதிர்த்து விமர்சனம் செய்யக்கூடாது. போராட்டம் நடத்துவது தேவையற்றது. எனவே தொண்டர்கள் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும்.
மறு கட்டமைப்பு பணிகளுக்கு தயாராக வேண்டும். ஜூலை 23-ந் தேதி நடைபெறும் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டிற்கு லட்சக்கணக்கானவர்களை திரட்ட வேண்டும். காங்கிரஸ் செய்த துரோகத்தை விட விசிக செய்த துரோகம் பெரிது என்று நமக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள்.
தேர்தலுக்குப் பிறகு ஆதவ் அர்ஜுனாவுடன் திட்டமிட்டு சதி செய்ததாக கூறுகிறார்கள். இது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மனசாட்சிக்கு தெரியும். விசிகவும், திருமாவளவனும் எந்த அளவிற்கு நேர்மையாக உறவு கொண்டிருந்தோம். நட்பு கொண்டிருந்தோம் என்பது அவரது மனசாட்சிக்கு தெரியும். வேறு யாருக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications