"டாஸ்க் 25".. இப்போ இதுவாங்க முக்கியம்? அமித் ஷா கேட்டதும்! புருவத்தை உயர்த்திய எடப்பாடி? கதை க்ளோஸ்
டெல்லி: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் கவனம் பெற்றுள்ள நிலையில், அவரின் பயணத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கியமான சில ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2 நாட்களுக்கு முன்பாக டெல்லி சென்றார். அவரின் டெல்லி பயணம் தமிழ்நாடு அரசியலில் பெரிய அளவில் கவனம் பெற்றது.
அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவும் நிலையில், அதை பற்றி பேசத்தான் அவர் டெல்லி சென்றார் என்று கூறப்பட்டது. அதோடு பிரதமர் மோடியை எடப்பாடி சந்திப்பார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் டெல்லியில் சென்ற எடப்பாடிக்கு பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கொடுக்கப்படவில்லை. இதனால் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மட்டும் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

எடப்பாடி பழனிசாமி
இந்த சந்திப்பில் இரண்டு முக்கியமான விஷயங்களை எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். திமுக பற்றி அமித் ஷாவிடம் எடப்பாடி பற்ற வைத்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது திமுக பற்றி புகார்களை அடுக்கியதாக கூறப்படுகிறது. எங்கள் மாஜி அமைச்சர்கள் மீது திமுக உத்தரவின் பெயரில் லஞ்ச ஒழிப்புத்துறை அடுத்தடுத்து ரெய்டுகளை நடத்துகிறது. ஆனால் அவர்கள் பல டெண்டர்களை எடுக்கிறார்கள். அதை பற்றி விசாரிக்க ஆள் இல்லை. அதை உடனே விசாரிக்க வேண்டும் என்று எடப்பாடி பெரிய லிஸ்ட் அடங்கிய பைல் ஒன்றை கொடுத்தார் என்று கூறப்படுகிறது.

ஓ பன்னீர்செல்வம்
இந்த மீட்டிங்கில் ஓ பன்னீர்செல்வம் குறித்தும் எடப்பாடி பற்ற வைத்து இருக்கிறாராம். அதாவது ஓ பன்னீர்செல்வம்தான் திமுகவுடன் நெருக்கமாக இருந்து அதிமுக மாஜிக்கள் பற்றிய விவரங்களை திமுகவிடம் பற்ற வைக்கிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி இந்த மீட்டிங்கில் கொட்டி தீர்த்ததாக கூறப்படுகிறது. இதை எல்லாம் அமித் ஷா அமைதியாக கேட்டுக்கொண்டார். முக்கியமாக திமுக தொடர்பான பைலை சந்தோசமாக அமித் ஷா வாங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

அமித் ஷா
இந்த மீட்டிங்கில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. முக்கியமாக லோக்சபா தேர்தலில் கூட்டணி தொடர்வது பற்றி அவர்கள் பேசி இருக்கிறார்களாம். அதில் அமித் ஷா பேசுகையில்.. தமிழ்நாட்டில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 25 இடங்கள் தேவை. அதை எப்படியாவது பெற வேண்டும். அங்கிருந்து மத்திய அமைச்சர்கள் வந்தால்தான், நமது கூட்டணி வலுவாக இருக்கும். இப்படிப்பட்ட நேரத்தில் அதிமுகவில் நீங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

ஒற்றுமை
கட்சி பிரச்சனை இப்போது முக்கியம் இல்லை. அதனால் தேர்தல் வெற்றி மீது கவனம் செலுத்துங்கள். உட்கட்சி பிரச்சனை காரணமாக தேர்தலில் தோல்வி அடைய கூடாது என்று அமித் ஷா கூறியதாக தெரிகிறது. இதை கேட்டதும் சட்டென எடப்பாடியின் புருவம் உயர்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எடப்பாடி தரப்பு.. அதிமுகவில் வேறு தலைவர்கள் யாரும் இல்லை. பெரும்பான்மை ஆதரவு எங்களுக்கே இருக்கிறது. அதனால் உட்கட்சி பிரச்சனையால் வாக்குகள் சிதறும் வாய்ப்பே இல்லை என்று உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் கிட்டத்தட்ட அதிமுக - பாஜக இடையிலான லோக்சபா கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே அரசியல் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications