இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த இளைஞர்! இந்து ஆண் இரு பெண்களை திருமணம் செய்யலாமா? சட்டம் சொல்வது என்ன
டெல்லி: மகாராஷ்டிராவில் ஒரே நேரத்தில் இரட்டையரை இளைஞர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இந்தியாவில் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கலாம்.
மகாராஷ்டிராவில் நேற்றைய தினம் இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் இரட்டையர் பெண்களை மணந்து கொண்டார். இரட்டையர்கள் விரும்பியே அந்த இளைஞரைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.
10 நாளில் மகளுக்கு திருமணம்.! காதலனுடன் ஓட்டம் பிடித்த அம்மா! மகளின் திருமண நகைகளும் அபேஸ்

இந்தியாவில் திருமண சட்டங்கள்
இது இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இந்தியாவில் திருமண சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கலாம். இந்தியாவில் அரசியலமைப்பின் 21ஆம் பிரிவு ஒருவர் தனக்கு விரும்பும் நபரைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமையை வழங்குகிறது. அதேநேரம் இதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும், இந்தியாவில் பல்வேறு மதங்களும் சமூகங்களும் வாழ்வதால் இங்கு பொது சிவில் சட்டம் அமலில் இல்லை. எனவே, திருமணம், விவாகரத்துத் தொடர்பாக ஒவ்வொரு மதங்களுக்கும் இங்கு ஒவ்வொரு சட்டங்கள் உள்ளன. இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், இஸ்லாமியர்களுக்கு தனித்தனியாகச் சட்டங்கள் உள்ளன.

சட்டம் என்ன சொல்கிறது
அதேபோல மாற்று மதத்தினரைத் திருமணம் செய்து கொள்ள வழிவகை செய்ய 1954ஆம் ஆண்டில் சிறப்புத் திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்டது. சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். நமது நாட்டில் இந்துக்களின் திருமணம் தொடர்பாக 1955இல் இந்து திருமண சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்து , பௌத்தம் மற்றும் சமணம் மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தும். இந்தச் சட்டத்தின்படி மணமகள் மணமகன் இருவருக்கும் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். சகோதர, சகோதரி உறவில் வரும் உறவினர்களாக இருக்கக் கூடாது. தீவிர மனநல பாதிப்புகள் இருக்கக் கூடாது.

பலதரப்பட்ட மணம்
குறிப்பாக இருவரின் சம்மதத்துடன் தான் திருமணம் நடைபெற வேண்டும். அதேபோல இந்து மத சட்டப்படி துணை ஏற்கனவே உயிருடன் இருக்கும்போது, ஒருவரால் திருமணம் செய்து கொள்ள முடியாது.. இந்து திருமண சட்டப்படி இது தண்டனைக்குரிய குற்றமாகும். அதாவது இந்தியா பலதரப்பட்ட மணத்தை அங்கீகரிக்கவில்லை. இவை ஐபிசி 494 மற்றும் 495ஐ கீழ் தண்டிக்கப்படுவார்கள். எனவே, மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்த இளைஞர் இப்படி இருவரைத் திருமணம் செய்து கொண்டது சட்டப்படி குற்றமாகும். இந்து திருமண சட்டம் 1955ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலையில், அதன் பிறகு சில சட்டத் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டது.

சட்டங்கள்
குறிப்பாகச் சதி எனப்படும் உடன்கட்டை ஏறும் முறையை ஒழிக்கும் வகையில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இடங்களில் நடைமுறையில் இருந்த இந்த கொடூரம், சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர் மெல்ல ஒழிந்தது. அதேபோல இந்தியாவில் குழந்தை திருமணத்தைத் தடுக்கவும் பல்வேறு சட்டங்கள் உள்ளது. இதற்காகக் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 ஆகியவை கொண்டு வரப்பட்டது.

குழந்தை திருமணம்
சமீபத்தில் தான் பெண்களுக்கான திருமண வயது 18இல் இருந்து 21ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. நாடாளுமன்ற நிலைக்குழு இந்த திருத்தத்தை ஆய்வு செய்து வருகிறது. இருப்பினும், வெறும் சட்டங்கள் மட்டும் குழந்தை திருமண முறையை முடிவுக்குக் கொண்டுவர போதுமானதாக இருக்காது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். குழந்தை திருமணம் தொடர்பாக விழிப்புணர்வை உண்டாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ரொம்பவே முக்கியம். பெண் குழந்தைகளுக்கான கல்வி, மருத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

திட்டங்கள்
உதாரணமாகத் தமிழ்நாட்டில் பெண் கல்வியை ஊக்குவிக்க பல்வேறு சட்டங்களை நடைமுறையில் உள்ளது. குறிப்பாக, உயர் கல்வி படிக்கும் பெண்களுக்குப் பல ஆண்டுகளாகத் தாலிக்குத் தங்கம் திட்டம் உதவியது. இப்போது அந்தத் திட்டம் மாற்றப்பட்டு அதற்குப் பெண்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக மாதம் 1000 ரூபாய் செலுத்தும் "புதுமைப் பெண்" திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதுபோன்ற திட்டங்கள் மூலம் குழந்தை திருமணங்கள் தடுக்கப்படும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. இதேபோல திட்டங்களை நாட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு வர வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.