‛கிட்ஸ் டிரெய்ன்' வந்தாச்சு.. குழந்தைகளுக்கான தனி உலகம்.. டெல்லியில் ஜாலி ரைடு போக ரெடியா?
டெல்லி: டெல்லியில் நடக்கும் உலக புத்தக கண்காட்சியில் ‛கிட்ஸ் ரயில்' இடம் பெற்றுள்ளது. குழந்தைகளுக்குக் கற்பனை, படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்புகள் நிறைந்த ஓர் அற்புதமான பயணத்தை இந்த ‛கிட்ஸ் ரயில்' வழங்கி வருகிறது.

டெல்லியில் ஜனவரி 10ம் தேதி உலக புத்தக கண்காட்சி தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சி நாளை வரை நடைபெற்று வருகிறது. தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர்.
பாரத் மண்டபத்தின் 6ம் அறையில் ‛கிட்ஸ் ரயில்' நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலில் குழந்தைகளுக்குக் கற்பனை, படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்புகள் நிறைந்த அனுபவத்தை வழங்குகிறது.
கண்கவர் ஊதா நிறத்தில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் வெளிப்புறத்தில் ஜன்னல்கள், டிக்கெட் பரிசோதகர், டீ விற்பவர், இசைக் கலைஞர் மற்றும் புத்தகம் படிக்கும் குழந்தைகள் போன்ற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இது அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது. மேலும் புகையை வெளியேற்றும் இன்ஜின் முகம் போன்ற நுழைவாயில் வழியாக, NBT-இந்தியா சார்பாக வித்யா மற்றும் கியான் ஆகியோரால் இளம் பார்வையாளர்கள் உள்ளே வரவேற்கப்படுகிறார்கள்.
ரயில் உள்ளே பல கோச்சுகள் உள்ளன. ஒவ்வொன்றும் வாசிப்பு, சிந்தனை, படைப்பு மற்றும் உணர்வுகளைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்வெளி கருப்பொருள் சுவரில் "நட்சத்திரங்களுக்கு அப்பால் படியுங்கள்" என்ற வாசகத்துடன், "ஸ்டோரிடைம் சதாப்தி" வாசிப்பு என்ற அலமாரியில் ராக்கெட் வடிவிலான புத்தக அலமாரிகள் உள்ளன.
"ரயில் அருங்காட்சியகத்தில்" (Rail Museum), நீராவி எஞ்சின் மற்றும் நவீன வந்தே பாரத் ரயில் மாதிரிகள் "இயங்குவதே ரயில்" என்ற வாசகத்தின் கீழ் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய ரயில்வேயின் பரிணாம வளர்ச்சியை ஒரு சிறு புகைப்படக் கண்காட்சி விவரிக்கிறது. அத்துடன் வினாடி வினாக்கள், புதிர்கள் மற்றும் சுடோகு போன்ற விளையாட்டுகளுடன் குழந்தைகளுக்கான திரைகள் உள்ளன. இதில் வெற்றி பெறுவோருக்கு புத்தக டோக்கன்கள் வழங்கப்படுகிறது.
"வாசகர் மன்ற இயக்கம்" கோச், NBT-யின் "ரீடர்ஸ் கிளப் புல்லட்டின்" மற்றும் "பதக் மன்ச் புல்லட்டின்" ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறது. இதில் இளம் வாசகர்களின் கவிதைகள், கட்டுரைகள், ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது. வாசிப்பு மற்றும் எழுத்துத் திறனை ஊக்குவிக்கிறது. ரயில்வே புத்தகக் கடைகளால் ஈர்க்கப்பட்ட "கிதாப் கர்" (Kitab Ghar), முடிக்கப்படாத கதைகளைப் பூர்த்தி செய்யவும், கவிதைகள் எழுதவும், புத்தக அட்டைகளை வடிவமைக்கவும் குழந்தைகளை உற்சாகப்படுத்துகிறது. "எமோஜி மீ" பகுதி வண்ணங்கள், கலை மூலம் உணர்ச்சிகளை ஆராய உதவுகிறது.
குடும்பங்கள் மறக்க முடியாத தருணங்களை உணரும் வகையில் நீர்மூழ்கிக் கருப்பொருள் கொண்ட "கிளிக்-மீ ஜங்ஷன்" புகைப்படக் கார்னர் உள்ளது. மதுரை, வார்லி கலை, களிமண் கலை, கைவினைப் பொருட்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் குழந்தைகள் செயல்படுவதை இது எடுத்து காட்டுகிறது. "ரங் தோ துனியா சாரி" என்ற வாக்கியத்துடன் "கலர் மீ" (Colour Me) பகுதி குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் உள்ளது.
இசை, நாடகம், பொம்மலாட்டம், வேடமணிதல் போன்ற கதைசொல்லல் உள்ளிட்டவற்றை காட்டுவது, நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) தொடர்பான செயல்பாடுகளும் அரங்கத்தை விளையாட்டின் மூலம் கற்றலுடன் உயிர்ப்புடன் வைத்துள்ளன. ஸ்பெயின், ரஷ்யா, பின்லாந்து, இஸ்ரேல் போன்ற நாடுகளிலிருந்து வரும் சர்வதேச கதை சொல் நபர்கள் தங்கள் கதைகள் மூலம் இளம் பார்வையாளர்களை உலக கலாச்சாரங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
ஓரிகாமி, கார்ட்டூன் வடிவமைப்பு, நாடகம், பொம்மலாட்டங்கள், பிராந்திய கலைகளை எடுத்து கூறும் வகையில் நிகழ்ச்சி நடக்கிறது. "மேத்ஸ் மேஜிக்" அரங்கு உள்ளது மாலை நேரங்களில், "பயிற்சியாளர்களுக்கு பயிற்சி" (Training the Trainers) என்றொரு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் பங்கேற்று, பொம்மை அடிப்படையிலான கற்பித்தல், நாடக அடிப்படையிலான கற்றல், விளையாட்டின் மூலம் கணிதம், வகுப்பறைகளில் மனநலம் மற்றும் படைப்பு கற்பித்தல் கருவிகள் குறித்த பட்டறைகளில் கலந்துகொள்கின்றனர்.
இவற்றுடன், குழு விவாதங்கள் மற்றும் "நூலகர்கள் சந்திப்பு" நிகழ்வுகளும் நடக்கிறது. லாரா எஸ்குவெலா, அனிதா சின்ஹா, ராஜீவ் தாம்பே, ஜனகி சபேஷ், ஐரிஸ் ஆர்கமன், ஐரிஸ் மாட்டா, இரினா கிரேயெவா, ஷாரண்யா ஸ்ரீராம், நாமித் ஷெர்பா மற்றும் ராமேந்திர குமார் போன்ற முன்னணி ஆளுமைகள் நிகழ்ச்சிகளுடன் கிட்ஸ் எக்ஸ்பிரஸ் இளம் வாசகர்களுக்கான அறிவுக்கூடமாக திகழ்கிறது.
மொத்தத்தில், கிட்ஸ் எக்ஸ்பிரஸ் ஒரு "இயங்கும் உலகம்". இங்கே புத்தகங்கள் வெறும் படிப்புக்கானதாக மட்டுமில்லாமல் அனுபவித்தும் வாழும் வகையில் உள்ளது. விளையாட்டோடு சேர்த்து குழந்தைகளுக்கு கற்றலை தூண்டுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications