ஆஹா பெரிய ட்விஸ்ட்.. ஆட்சியை அமைக்கும் "இந்தியா" கூட்டணி? உத்தவ் தாக்கரே சொல்வது என்ன கேளுங்க
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே சில பரபர கருத்துகளை கூறியுள்ளார். அது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்ற நிலையில், அதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

எக்ஸிட் போல்கள் பாஜக வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கணித்திருந்த நிலையில், தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாக இருந்தன. காலை முதலே இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டியே நிலவி வந்தது. இறுதியில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
உத்தவ் தாக்கரே : இதற்கிடையே தலைநகர் டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடக்கும் நிலையில், அதற்கு முன்னதாக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், எதிர்க்கட்சி கூட்டணியான "இந்தியா" மத்தியில் ஆட்சி அமைக்க உரிமை கோர வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே மேலும் கூறுகையில், "இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோர வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.. நான் டெல்லி செல்ல உள்ளேன். தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்க உள்ளோம்.
ஆஹா பெரிய ட்விஸ்ட்: இங்கே பல்வேறு கட்சிகளும் பாஜக கூட்டணி வைத்ததற்கு ஒரே காரணம் அக்கட்சி மேல் இருந்த பயம் தான். எனவே, அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சில நாட்களில் நிலைமை என்ன என்பது தெரிய வரும். சந்திரபாபு நாயுடுவை கூட அவர்கள் கடந்த காலங்களில் எந்தளவுக்குத் தொல்லை கொடுத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்" என்று அவர் தெரிவித்தார்.
நேற்று லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அதில் இந்தியா கூட்டணி மிகச் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்களில் முக்கியமானது மகாராஷ்டிரா.. அங்கு மொத்தம் 48 லோக்சபா சீட்கள் இருக்கும் நிலையில், அதில் காங்கிரஸ் 13 இடங்கள், தாக்ரே சிவசேனா 9 இடங்கள், சரத்பவாரின் என்சிபி 10 இடங்கள் என்று இந்தியா கூட்டணி மட்டும் 32 சீட்களில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா: இந்தியா கூட்டணி சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்களில் ஒன்று மகாராஷ்டிரா. எதிர்க்கட்சி கூட்டணி 30 இடங்களிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 17 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
தேர்தல் முடிவுகள்: நமது நாட்டில் மொத்தம் 543 சீட்கள் இருக்கும் நிலையில், அதில் பெரும்பான்மை பெற எந்தவொரு கட்சிக்கும் 272 சீட் தேவை. ஆனால், இந்த முறை யாருக்கும் அந்தளவு வெற்றி கிடைக்கவில்லை. என்டிஏ கூட்டணி 292 இடங்களில் வென்ற நிலையில், பாஜக 240 சீட்கள், தெலுங்கு தேசம் 16 சீட்கள், ஜேடியு 12 சீட்கள், ஷிண்டே சிவசனா 7 சீட்களில் வென்றுள்ளன.
மறுபுறம் இந்தியா கூட்டணி 234 சீட்களில் வென்றது. காங்கிரஸ் அதிகபட்சமாக 99 இடங்களில் வென்ற நிலையில், சமாஜ்வாதி 37 சீட்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 29 சீட்களிலும், திமுக 22 சீட்களிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications