"இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு.." பட்டுனு சொன்ன சோனியா.. டக்குனு பார்த்த மல்லிகார்ஜுன கார்கே
டெல்லி: காங்கிரஸ் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்றுள்ள நிலையில், இது தொடர்பாகச் சோனியா காந்தி சில முக்கிய கருத்துகளைக் கூறி உள்ளார்.
காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி கடந்த 2019 மக்களவை தேர்தலுக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். அதன் பின்னர் சோனியா காந்தியே இடைக்கால தலைவராக இருந்தார்.
இதனிடையே காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கட்சியிலேயே பலரும் வலியுறுத்தினர். அதன்படி கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடைபெற்றது.

காங்கிரஸ்
இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் போட்டியிட்டனர். இதில் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே மாபெரும் வெற்றி பெற்றார். இதையடுத்து மல்லிகார்ஜுன கார்கே இன்று அதிகாரப்பூர்வமாகக் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய காங். புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் வெற்றி என்பது இந்தியாவின் வெற்றிக்குச் சமம் என்று பேசினார்.

சோனியா காந்தி
இந்த நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, "புதிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நான் மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். அவர் கட்சியில் உள்ள மிக மூத்த தலைவர்களில் ஒருவர். கட்சியில் சாதாரண தொண்டராகத் தொடங்கி தனது கடின உழைப்பால் படிப்படியாக உயர்ந்து இப்போது அவர் இந்த இடத்திற்கு வந்துள்ளார். அவர் கட்சி தொண்டர்களுக்கு என்றும் உத்வேகமாக இருப்பார்.

புதிது இல்லை
உண்மை சொல்ல வேண்டும் என்றால் நான் இப்போது தான் நிம்மதியாக உணர்கிறேன். காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாகவே சில பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. அவற்றை நாம் சரி செய்ய வேண்டியது அவசியமாகிறது. காங்கிரஸ் கட்சிக்கு இது புதிது இல்லை. கடந்த காலங்களிலும் காங்கிரஸ் பல பெரிய சவால்களையும் ஆபத்துகளையும் சந்தித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் ஒருபோதும் தோல்வியை ஏற்றுக் கொண்டது இல்லை.

பெரிய சவால்
அதேபோல வரும் காலத்திலும் நாம் போராடி வெற்றி பெறுவோம். காங்கிரஸ் என்பது வெறும் கட்சி இல்லை. பல ஆண்டுகளாக மக்களுடன் இருக்கும் இயக்கம். எப்போதும் காங்கிரஸ் அப்படியே தான் இருக்கும். காங்கிரஸ் கட்சியின் முன் பல சவால்கள் நிற்கின்றன. இப்போது நமது நாட்டில் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. அதை எதிர்த்துப் போராடுவது தான் இப்போது நமக்கு இருக்கும் மிகப் பெரிய சவாலாக உள்ளது. ஆனால், இந்த சவால்களை எல்லாம் வெற்றிகரமாக எதிர்கொண்டு காங்கிரஸ் வெற்றி பெறும்.

நிம்மதி
நான் தலைவராக இருந்த காலகட்டத்தில் எனக்கு அளித்த ஆதரவுக்கு அனைவருக்கும் நன்றி. காங்கிரஸ் தலைவர் தேர்தலைச் சுமுகமாக நடத்தியதற்காகத் தேர்தல் பொறுப்பாளர் மதுசூதன் மிஸ்திரிக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். காங்கிரஸ் தலைவராக எனது கடமையை என்னால் முடிந்தவரைச் சிறப்பாகச் செய்தேன். இப்போது நான் கொஞ்சம் நிம்மதியாக உணர்கிறேன்.

பெரிய பொறுப்பு
இத்தனை ஆண்டுகளாகக் காங்கிரஸ் தலைவராக இருந்ததே மிகப் பெரிய பொறுப்பு.. இப்போது அந்த பொறுப்பு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சென்று உள்ளது. மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம். மாற்றம் ஒன்றுதான் என்றும் மாறாதது" என்றார். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வந்துள்ளார். நாடு முழுக்க பாத யாத்திரை சென்று இருந்த ராகுல் காந்தி, இதில் கலந்து கொள்ள டெல்லி சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications