புது நாடாளுமன்ற கட்டிடம் ஓகே.. அப்போ பழைய நாடாளுமன்ற கட்டிடம் என்ன ஆகும்! மத்திய அரசு பிளான் என்ன
டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். இதற்கிடையே பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு என்ன ஆகும் என்று பலருக்கும் கேள்வி எழும். அதற்கான பதிலைப் பார்க்கலாம்.
இந்தியா ஜனநாயகத்தின் கோயில் என்று அழைக்கப்படும் நாடாளுமன்ற கட்டிடம் டெல்லியில் இருக்கிறது. லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவை கொண்ட நாடாளுமன்றம் தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வருகிறது.
டெல்லியில் உள்ள இந்த நாடாளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. தேசத்தை வடிவமைத்த இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் பல புகழ்பெற்ற விவாதங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற கட்டிடம்:
இருப்பினும், அங்கே போதிய இடவசதி இல்லை, தொழில்நுட்பம் இல்லை, நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டிடம் இல்லை என பல புகார்கள் நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது முன்வைக்கப்படுகிறது. இதையடுத்து புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. சுமார் 60,000 தொழிலாளர்களின் இரண்டு வருட கடும் உழைப்பால் இந்த புதிய கட்டிடம் இப்போது தயாராக உள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை, பிரதமர் நரேந்திர மோடி, மே 28ல் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தயாராகிவிட்ட நிலையில், பழைய கட்டிடத்தின் நிலை என்ன என்ற கேள்வி பலருக்கும் எழவே செய்யும். அதற்கான பதிலைப் பார்க்கலாம்.
இந்த கட்டிடம் தான் சுதந்திர இந்தியாவின் முதல் நாடாளுமன்றமாகச் செயல்பட்டது. மேலும், அங்கு தான் நமது வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்படி இந்திய வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நாடாளுமன்ற கட்டிடத்தைப் பாதுகாப்பது முக்கியமானது. முதலில் கவுன்சில் ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட இது, இந்தியாவின் ஜனநாயக உணர்வின் சின்னமாகக் கருதப்படுகிறது. இது இப்போது சென்ட்ரல் விஸ்டாவின் மையத்தில் உள்ளது.

வடிவமைத்தது யார்:
இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடம் பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது. 1921இல் கட்டுமானம் தொடங்கப்பட்ட நிலையில், இதைக் கட்டி முடிக்க ஆறு ஆண்டுகள் ஆனது. இர்வின் பிரபு காலத்தில் 1927ஆம் ஆண்டில்தான் இந்த கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்தது.
1956ஆம் ஆண்டில், இந்த நாடாளுமன்ற கட்டிடத்தில் இரண்டு தளங்கள் சேர்க்கப்பட்டன. அதைத் தொடர்ந்து 2006இல் இந்தியாவின் செழுமையான ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அருங்காட்சியகம் உள்ளேயே அமைக்கப்பட்டது.

இடிக்கப்படுமா:
இப்போது புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டுள்ள நிலையில், பெருமை மிக்க இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடம் இடிக்கப்படுமா என்ற கேள்வி பலருக்கும் வரும். இல்லை என்பதே இதற்கான பதிலாக இருக்கிறது. இந்த நாடாளுமன்ற கட்டிடம் இடிக்கப்படாது.
கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இது குறித்து விளக்கியிருந்தார். அதாவது, "புதிய நாடாளுமன்ற கட்டிடம் தயாரானதும், தற்போதுள்ள கட்டிடத்தைச் சீர் செய்யப்பட்டு, மாற்றுப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்" என்று கூறியிருந்தார்.
எதற்குப் பயன்படுத்தப்படும்:
இருப்பினும், அது எதற்காகப் பயன்படுத்தப்படும் என்பது குறித்து அப்போது அவர் எதையும் கூறவில்லை. தற்போது வரையிலும் கூட மத்திய அரசு பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு என்ன திட்டத்தை வைத்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், அந்த நாடாளுமன்ற கட்டிடம் இடிக்கப்படாது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.
இதற்கிடையே பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் ஒரு பகுதியை மத்திய அரசு அருங்காட்சியகமாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கடந்தாண்டு தகவல் வெளியானது. இது சென்டிரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும். அதன்படி பழைய நாடாளுமன்ற கட்டிடம் அருங்காட்சியகமாகப் பயன்படுத்தப்படவே வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications