"இந்தியாவில் இருந்து வெளியேற நேரிடும்.." மத்திய அரசின் புது ஐடி ரூல்ஸிற்கு எதிர்ப்பு! வாட்ஸ்அப் பரபர
டெல்லி: எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முறையை உடைக்க கட்டாயப்படுத்தினால் இந்தியாவில் இருந்து மொத்தமாக வெளியேற நேரிடும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கடந்தாண்டு ஏப்ரல் மாதம் புதிய ஐடி விதிகளைக் கொண்டு வந்தது. இந்தியாவில் செயல்பட விரும்பும் அனைத்து சமூக வலைத்தள நிறுவனங்களும் இந்த புதிய விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

இதற்கிடையே இந்த புதிய சட்டத்திற்கு எதிராக வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தன.
எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்: அதாவது நீதிமன்றம் உத்தரவிடும் போது ஒரு மெசேஜ்ஜை யார் அனுப்பினார்கள் என்ற விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. இருப்பினும், வாட்ஸ்அப் நிறுவனம் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் என்ற வசதியை வழங்குவதால்.. மத்திய அரசின் இந்த புதிய விதிகளை எதிர்த்து.
இந்த எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் என்பது ஒரு வகை பாதுகாப்பு வசதி. இந்த எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் இருந்தால் ஒரு மெசேஜ்ஜை அனுப்பியவர் மற்றும் பெறுபவர் மட்டுமே அதைப் பார்க்க முடியும். சம்பந்தப்பட்ட நிறுவனமே நினைத்தாலும் அந்த மெசேஜ்ஜை படிக்க முடியாது.
தனியுரிமை: இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் நடந்த வழக்கில் தான் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் என்பது யூசர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதாகவும் அதில் சமரசம் செய்யக் கொள்ள முடியாது என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சட்டத்திற்கு இணங்குவது என்பது என்க்ரிப்ஷன் பிராசஸை அர்த்தம் இல்லாமல் செய்துவிடும் என்றும் அது தனியுரிமையை மீறும் ஒரு செயல் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
வாட்ஸ்அப் விளக்கம்: இது தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜாஸ் கரியா கூறுகையில், "எங்கள் என்க்ரிப்ஷன் முறையை உடைக்கச் சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும். வாட்ஸ்அப் நிறுவனத்தைப் பொறுத்தவரைத் தனியுரிமை தான் எங்களின் முக்கிய கொள்கை. இந்த தனியுரிமையைப் பயனாளர்களுக்குத் தர எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன் ரொம்பவே முக்கியம். வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ்ஜை அனுப்பியவர், பெறும் நபரைத் தவிர வேறு யாராலும் படிக்க முடியாது. இந்த என்க்கிரப்ஷன் இருப்பதாலேயே யூசர்கள் எங்களை நம்புகிறார்கள்" என்றார்.
மத்திய அரசு வாதம்: இருப்பினும், ஆபத்தான மெசேஜ்களை கண்டறிந்து ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு மெசேஜ்ஜை அனுப்பியவர் யார் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது என்று மத்திய அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மற்றும் வன்முறையைத் தூண்டுபவர்களை அடையாளம் காண உதவும் பொறுப்பு சமூக வலைத்தளங்களுக்கு இருப்பதாக மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட செய்தியால் சமூகத்தில் ஆபத்து ஏற்பட்டால் அதை அனுப்பியவர் யார் என்பதைக் கண்டறியவே மத்திய அரசு இந்த விதிமுறைகளை அறிவித்துள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
டெல்லி ஐகோர்ட்: இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி ஐகோர்ட், இதில் சிக்கல் இருப்பது உண்மை தான் என்று ஒப்புக்கொண்டது. தனியுரிமை என்பது எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் இருக்க முடியாது என்ற நீதிபதி, இந்த விவகாரத்தில் ஒரு சமநிலை தேவை என்றனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.












Click it and Unblock the Notifications