சாப்பிடும் சப்பாத்திக்கும் தட்டுப்பாடு வரலாம்.. கோதுமை பற்றாக்குறை சிக்கலில் இந்தியா.. பின்னணி என்ன?
டெல்லி: நம்நாட்டில் அதிகரித்த வெப்பத்தால் பாதிக்கப்பட்ட கோதுமை உற்பத்தி ஆகியவற்றால் இந்தியாவில் சப்பாத்திக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கச்சா எண்ணெய், பாமாயில், கோதுமை உள்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனால் இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகள் சிரமங்களை சந்தித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. பிற உணவு பொருட்களின் விலையும் ஏறுமுகமாக சென்று வருகிறது.

30 நாடுகளில் பிரச்சனை
இந்நிலையில் தான் உலகம் முழுவதும் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் இந்த மாதத்தின் மத்தியில் கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது. இதேபோல் இந்தோனேசியாவில் இருந்து பாமாயில், மலேசியாவில் இருந்து கோழி ஏற்றுமதி என ஒவ்வொரு நாடுகளில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு சுமார் 30 நாடுகள் தடை விதித்துள்ளன. இது உணவு பொருட்களுக்கான தட்டுப்பாட்டை காட்டுவதோடு, அதன் விலைகளை பலமடங்கு அதிகரிக்க வாய்ப்பாக உள்ளது.

கோதுமை தட்டுப்பாடு
இது ஒருபுறம் இருக்க உலகளவில் கோதுமை தட்டுப்பாடு தலைதூக்கியுள்ளது. உலகில் கோதுமை ஏற்றுமதியில் 25 சதவீத பங்கை ரஷ்யா, உக்ரைன் நாடுகள் பூர்த்தி செய்கின்றன. ஆனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் கோதுமை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவுக்கு அடுத்த படியாக அதிகமாக கோதுமை உற்பத்தி செய்யும் இந்தியா உலகளவில் நிலவும் தட்டுப்பாட்டை சரிசெய்ய முயலும் என எதிர்பார்க்கப்பட்டது.

விளைச்சல் குறைவு
இதை உறுதி செய்யும் வகையில் தான் கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் நரேந்திர மோடியும், ஜோபிடனுடன் பேசியபோது, உலக வர்த்தக அமைப்பு அனுமதியளித்தால் இந்தியாவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உணவு தானியங்களை பிற நாடுகளுக்கு வழங்க தயாராக இருப்பதாக கூறினார். இந்நிலையில் தான் இந்தியாவில் இந்த ஆண்டு கோதுமை விளைச்சல் எதிர்பார்த்த அளவு கைக்கொடுக்கவில்லை. இது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதோடு, கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் நிலையையும் ஏற்படுத்தி உள்ளது.

காரணம் என்ன?
அதாவது காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் கோதுமை விளைச்சல் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. வட இந்தியாவில் முக்கிய பயிராக பயிரிடப்படும் கோதுமையானது அதிகப்படியான வெப்பத்தால் பாதிக்கப்பட்டது. மார்ச் மாதம் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வடமாநிலங்களில் வெப்பம் அதிகமாக இருந்தது. இது கோதுமை விளைச்சலை வெகுவாக பாதித்துள்ளது.

ஒரு கிலோவில் மாவு எவ்வளவு?
மேலும் இந்த ஆண்டு இந்தியாவின் கோதுமை விளைச்சல் 7 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதோடு கடந்த ஆண்டு ஒரு கிலோ இந்திய கோதுமையில் சுமார் 770 கிராம் அளவுக்கு மாவு கிடைத்தது. இந்த ஆண்டு இது 720 கிராம் ஆக குறைய வாய்ப்புள்ளது. இதன்மூலம் ஒருகிலோ கோதுமையை திரித்தால் 50 கிராம் மாவு குறைவாக கிடைக்கலாம்.

இருப்பு குறைய வாய்ப்பு
மேலும் உக்ரைன்-ரஷ்யா போரால் உலகளவில் கோதுமை அதிக விலைக்கு விற்பனையானதால் இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடம் அதிக விலைக்கு கோதுமையை வாங்கினர். இதனால் விவசாயிகள் அரசிடம் கோதுமை விற்கவில்லை. இதுவும் பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. விவசாயிகள் அரசிடம் கோதுமை விற்பனை செய்யாததால் தானிய குடோன்களில் கோதுமையின் இருப்பு குறையலாம்.

சப்பாத்திக்கு தட்டுப்பாடு
இதனால் முந்தைய ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்படலாம். எனவே சப்பாத்தி உற்பத்தி குறையலாம். அதோடு இந்தியாவில் சப்பாத்தி என்பது எட்டாக்கனியாக வாய்ப்புள்ளது. இந்தியாவில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை பாகுபாடு இன்றி கோதுமை சப்பாத்தியை சாப்பிட்டு வரும் நிலையில் இப்பிரச்சனை உருவாகும் நிலை உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசும் கோதுமை விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது












Click it and Unblock the Notifications