4 வருடத்தில் 30 லோக்சபா இடைத்தேர்தல்.. 6 ல் மட்டும் வென்ற பரிதாப பாஜக.. மோடி அலை எங்கே?
கடந்த 4 வருடத்தில் 30 லோக்சபா தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெறும் 6 இடங்களில் மட்டும் வென்றுள்ளது.
டெல்லி: கடந்த 4 வருடத்தில் 30 லோக்சபா தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெறும் 6 இடங்களில் மட்டும் வென்றுள்ளது.
பாஜக கட்சி இந்தியாவின் மிகவும் வலுவான கட்சியாக மக்களிடம் காட்டப்படுகிறது. ஆனால் உண்மையில் களநிலவரம் வேறாக இருக்கிறது. கடந்த 4 வருடமாக மோடி அலையும், அமித் ஷா பூகம்பமும் சரி இந்தியாவின் எந்த தேர்தலிலும் சரியாக வீசவில்லை.
வரிசையாக சந்தித்த எல்லா தேர்தல்களிலும் பாஜக தோல்வியை தழுவி இருக்கிறது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த 4 வருட புள்ளி விவரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

பாஜக இமாலய வெற்றி
மத்தியில் பாஜக கட்சி ஆட்சி அமைத்த போது 282 உறுப்பினர்கள் இருந்தார்கள். 30 வருடங்களுக்கு பின் பாஜக கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்தது. இந்த வெற்றிக்கு பின் பாஜக மிகவும் வலுவான கட்சியாக மக்கள் முன்னிலையில் பிரபலப்படுத்தப்பட்டது. ஆனால் உண்மை அப்படி இல்லை.

தொடர் தோல்வி
பாஜக தொடர் தோல்விகளால் பெரும்பான்மையை இழந்து கொண்டே வந்தது. கடந்த 4 வருடங்களில் நடந்த பல நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் பாஜக வரிசையாக தோல்வி அடைந்துள்ளது. கடைசியாக கர்நாடகாவில் நடந்த நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரை அனைத்திலும் வரிசையாக தோல்வி அடைந்து வருகிறது.

என்ன தோல்வி
2014க்கு பின் இந்தியாவில் மொத்தம் 30 லோக் சபா இடைத்தேர்தல் நடந்தது. இதில் கடைசியாக நடந்த கர்நாடக மாநில 3 லோக் சபா தொகுதி இடைத்தேர்தலையும் சேர்த்து மொத்தமாக 6ல் மட்டுமே பாஜக வென்று இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணிதான் 20 தொகுதிகளில் வென்று இருக்கிறது. மற்ற 4 இடங்களில் மாநில கட்சிகள் தனியாக வென்றுள்ளது.

முக்கிய தொகுதிகள்
இந்த ஆண்டு நடந்த பல மாநில சட்டமன்ற தேர்தலிலும் சரியாக பாஜக செயலாற்றவில்லை. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கோரக்பூர் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வென்ற லோக் சபா தொகுதி; புல்பூர் உ.பி. துணை முதல்வர் கேசவ்பிரசாத் மவுரியா வென்ற லோக் சபா தொகுதி. இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. அதேபோல் பாஜகவின் கோட்டையான கர்நாடகாவில் பெல்லாரி லோக் சபா தொகுதியிலும் மிக மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது.

என்ன கவனிக்க வேண்டிய விஷயம்
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் அந்த கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்து இருக்கிறது. பாஜக ஆளும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில்தான் பாஜக அதிக இடங்களில் இழந்துள்ளது. அதேபோல் பாஜக ஏற்கனவே கைவசம் வைத்திருந்த தொகுதிகளைதான் இடைத்தேர்தலில் அதிகம் இழந்துள்ளது. மாறாக காங்கிரஸ் புதிய தொகுதியில் வென்றுள்ளது.

என்ன மெஜாரிட்டி
லோக் சபாவில் மெஜாரிட்டிக்கு 272 உறுப்பினர்கள் தேவை. தற்போது பாஜக கட்சியின் பெரும்பான்மை மொத்தமாக குறைந்து, பெரும்பான்மையை இழந்து இருக்கிறது. பாஜக கட்சியின் பலம் 270 இருக்கிறது. மொத்தமாக அவைத்தலைவரையும் சேர்த்து 271 பேர் தான் இருக்கிறார்கள். இதனால் தற்போது பாஜக அரசு மைனாரிட்டி அரசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications