போர் காலம் தெரிந்த உண்மை முகம்.. எந்த நாடுகள் இந்தியாவை ஆதரித்தன? பாக். பக்கம் சாய்ந்த நாடுகள் எவை?
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக நடந்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யத் தூது விட்டது. இந்தக் காலகட்டத்தில் உலக நாடுகளில் யார் இந்தியா பக்கம் இருந்தனர்.. யார் பாகிஸ்தான் பக்கம் இருந்தனர் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை இந்தியா நடத்திய நிலையில், அதன் பிறகு பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதனால் கடந்த சில நாட்களாக மோதல் தொடர்ந்தது.. இந்தியா திருப்பி அடிக்க தொடங்கியதும் அதைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.

உலக நாடுகள்
இந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான நாடுகள் மவுனமாகவே இருந்தது. இருப்பினும், மோதல் ஏற்பட்ட போது துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய இரு நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. சீனா கூட கடைசியில் தான் பாக். ஆதரவாக இருப்பதாகக் கூறியது. ஆனால், இந்த இரு நாடுகளும் தான் முதலில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது.
துருக்கி
மோதல் நடந்து கொண்டு இருக்கும் போதே துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதாகக் கருத்து தெரிவித்தார். பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைப்பேசி மூலம் பேசிய எர்டோகன், பாகிஸ்தானுக்கு எப்போதும் துருக்கி துணை நிற்கும் என்று கூறியிருக்கிறார்.
பஹல்காம் தாக்குதல் தொடர்பாகச் சர்வதேச விசாரணை தேவை என பாகிஸ்தான் கூறியிருந்த நிலையில், அதையும் துருக்கி அதிபர் எர்டோகன் ஆதரித்திருந்தார். மேலும், இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் குறித்து வாய் திறக்காத எர்டோகன், அதற்குப் பதிலடியாக இந்தியா நடத்திய தாக்குதலுக்கு மட்டும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்கு ஆதரவாம்
மேலும் அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதற்றம் மோதலாக மாறியுள்ளது. ஏவுகணைத் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழக்கக்கூடும் என கவலைகொள்கிறோம். தாக்குதல்களில் உயிர் இழந்த எங்கள் சகோதரர்களுக்கு அல்லாஹ்வின் கருணைக்காக நான் பிரார்த்திக்கிறேன், பாகிஸ்தான் அரசுக்கு மீண்டும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.
அஜர்பைஜான்
அதேபோல அஜர்பைஜானும் தொடக்கத்திலேயே பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதாக அறிக்கை வெளியிட்டது. இந்தியா பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றம் கவலை அளிப்பதாக அஜர்பைஜான் தெரிவித்தது. மேலும், பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிப்பதாகவும் பாகிஸ்தான் மக்களுடன் ஒற்றுமையுடன் நிற்பதாகவும் தெரிவித்திருந்தது.
சீனா
சீனா முதலில் இந்த விவகாரத்தில் யாரையும் ஆதரிக்கவில்லை. ஆனால், மோதல் முடிவுக்கு வரும் போது கடைசி நேரத்தில் பாகிஸ்தானை ஆதரிப்பதாகத் தெரிவித்தது. பஹல்காம் தாக்குதலை கண்டிக்கும் அதேநேரம், பாகிஸ்தானுக்குப் பக்க பலமாக இருப்போம் என்றும் சீனா தெரிவித்தது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டாருடன் தொலைப்பேசியில் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பாகிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசியச் சுதந்திரத்தைப் பாதுகாக்கச் சீனா ஆதரவு தரும் என்று கூறியிருந்தார்.
இந்தியா ஆதரவு
மறுபுறம் இந்தியாவைப் பொறுத்தவரை இஸ்ரேல் மட்டுமே வெளிப்படையாக ஆதரித்தது. ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த இஸ்ரேல், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இஸ்ரேல் இந்தியாவுடன் நிற்பதாகக் கூறியது.
அமெரிக்கா, ரஷ்யா
இஸ்ரேல் மட்டுமே இந்தியா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. அதேநேரம் பெரும்பாலான நாடுகள் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு துணை நிற்பதாக அறிவித்தது. உலகின் வல்லரசு நாடுகளும் கூட பஹல்காம் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது. ரஷ்யாவும் விவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் துணை நிற்பதாகவே அறிவித்திருந்தது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை அவர்கள் யாருக்கும் நேரடியாக ஆதரவு தெரிவிக்கவில்லை.. இருப்பினும், மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் தீவிரமாக முயன்றதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு அதிக அழுத்தத்தை அமெரிக்கா கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications