பென்ஷனாக கிடைக்கும் 50% ஊதியம் .. மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் யாரெல்லாம் சேரலாம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பணி ஓய்வு பெறுவோருக்கு 50 சதவீதம் ஓய்வூதியம் பென்ஷனாக கிடைக்கும். இந்த திட்டத்தில் யாரெல்லாம் சேரலாம்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது 2 வகையான பென்ஷன் (ஓய்வூதியம்) நடைமுறையில் உள்ளது. ஒன்று புதிய ஓய்வூதிய திட்டம். இன்னொன்று பழைய ஓய்வூதிய திட்டம். இதில் பல மாநிலங்கள், மத்திய அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளனர். ஜார்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களின் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் தான் பழைய ஓய்வூதிய திட்டம், புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை ( UPS or Unified Pension Scheme) கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த திட்டம் என்பது 2025 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த திட்டம் முதற்கட்டமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அமலாகிறது. முதற்கட்டமாக 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். இதன்மூலம் குறைந்தபட்ச ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியம் என்ற 3 அம்சங்கள் உறுதி செய்யப்படுகின்றன.
அதாவது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் 25 ஆண்டு ஒருவர் பணியாற்றி ஓய்வு பெறும் பட்சத்தில் அவர் கடைசி 12 மாதம் வாங்கிய சம்பளத்தின் அடிப்படை ஊதியத்தின் சராசரியில் இருந்து 50 சதவீதம் என்பது ஓய்வூதியமாக வழங்கப்படும். அதேபோல் 10ஆண்டு வரை பணியாற்றி ஓய்வு பெறுவோருக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும். மத்திய அரசு ஊழியர் பணியின்போது இறந்தால் அவரது அடிப்படை சம்பளத்தில் 60 சதவீதம் வரை குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்பட உள்ளது.
இந்த யூபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்பது மத்திய அரசு ஊழியர்களுக்காக அமல்படுத்தப்பட உள்ளது. இத்தகைய சூழலில் தான் தற்போது மத்திய அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டம் அல்லது தேசிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளனர். இவர்கள் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் இணையலாமா? அல்லது புதிதாக மத்திய அரசு பணியில் சேர்வோருக்கு மட்டும் தான் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதி திட்டத்தில் பலன் பெற முடியுமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
அதற்கு விடை என்னவென்றால் தற்போது புதிய ஓய்வூதிய திட்டம் அல்லது தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ள மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறலாம். அதாவது இதற்கு முன்பு எப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற்றப்பட்டனரோ? அதேபோல் விருப்பம் உள்ளவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து அமலாகப்போகும் ஒருங்கிணைந்த ஒய்வூதிய திட்டத்துக்கு மாறிக்கொள்ளலாம். இதற்கான நடைமுறை என்பது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அடுத்த ஆண்டு அமலாவதற்கு முன்பு செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசின் கேபினட் செயலாளர் டிவி சோமநாதன் தெரிவித்தார்.
அதேபோல் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்பது 2004 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பலன்பெற்று வருவோருக்கும் பொருந்தும். அதாவது 2004 முதல் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து ஓய்வு பெற்றவர்கள் முதல் 2025 மார்ச் 31ம் தேதி வரை ஓய்வு பெற உள்ளவர்களும் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து அனைத்து பலன்களையும் பெற முடியும். இந்த வேளையில் ஓய்வூதியதாரர்கள் திரும்பபெற்ற தொகையை கழித்து முந்தைய காலத்துக்கான அரியர்ஸ் தொகையையும் பெறுவார்கள் என கேபினட் செயலாளர் டிவி சோமநாதன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications