அமெரிக்காவில் டாக்டர் பட்டம்.. ரூ. 5,700 கோடிக்கு அதிபதி.. பணக்கார மத்திய அமைச்சரான சந்திர சேகர்!
டெல்லி: மோடி 3.o அமைச்சரவையில் உள்ள பணக்கார அமைச்சர் என்ற பெயரைத் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திர சேகர் பெம்மாசானி பெற்றுள்ளார். யார் அவர்.. அவரது பின்னணி என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 240 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக, என்டிஏ கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைச்சது. பிரதமர் மோடி இன்று மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார்.

நேருவுக்குப் பிறகு நமது நாட்டில் ஒருவர் மூன்றாவது முறையாகப் பதவியேற்பது இதுவே முதல்முறையாகும். அவருடன் மற்ற அமைச்சர்களும் பதவியேற்றனர். இப்படி மொத்தம் 72 பேர் அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
சந்திர சேகர் பெம்மாசானி: இன்றைய தினம் ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திர சேகர் பெம்மாசானி என்பவரும் அமைச்சராகப் பதவியேற்றார். 2024 லோக்சபா தேர்தலில் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் தொகுதியில் வெற்றி பெற்ற இவர் தான் இப்போது நாட்டிலேயே பணக்கார எம்பியாவார்.. இப்போது மத்திய இணை அமைச்சராக இவர் பதவியேற்றுள்ள நிலையில், நாட்டிலேயே பணக்கார மத்திய அமைச்சர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.
₹5,705 கோடி: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் போது அனைத்து வேட்பாளர்களும் தங்கள் சொத்து விவரங்கள் குறித்த பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி இவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு ₹5,705 கோடி என்று அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பணக்கார அமைச்சராக இப்போது உருவெடுத்துள்ள இவர் யார்.. இவரது பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் சந்திர சேகர் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் குண்டூர் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு 8.64 லட்சம் வாக்குகளைப் பெற்ற சந்திர சேகர் சுமார் 3.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒய்எஸ்ஆர்சி காங்கிரஸ் வேட்பாளர் கிலாரி வெங்கட ரோசய்யாவை தோற்கடித்தார். இப்போது இவர் மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளார்.
மருத்துவர்: சந்திர சேகர் தொழில் ரீதியாக ஒரு மருத்துவர் ஆவார்.. இவரது குடும்பத்திற்கு ₹5,705 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருக்கிறது.. தற்போது நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பணக்கார எம்பியாக இவர் ஆவார். இவர் நேரடியாக அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே இவரது குடும்பத்தினர் பல தலைமுறைகளாகத் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக இருந்து வருகிறது.
தெனாலி மாவட்டம் புரிபாலம் கிராமத்தைச் சேர்ந்த சந்திர சேகர், 1993-94இல் நடந்த EAMCET தேர்வில் தேசியளவில் 27வது ரேங்க் பிடித்தார், இதையடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து அங்கு எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து, அமெரிக்கா பென்சில்வேனியாவில் உள்ள கீசிங்கர் மெடிக்கல் மையத்தில் எம்டி பட்டம் பெற்றார்.
அமெரிக்காவில் படிப்பு: தொடர்ந்து அங்குள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்-சினாய் மருத்துவமனையில் மருத்துவராக சுமார் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். அங்கு மாணவர்களுக்கு மருத்துவம் சொல்லியும் கொடுத்தார். அதன் பிறகு இந்தியா வந்த இவர் குடும்ப தொழில்களைக் கவனித்து வந்தார். கடந்த 2003இல் UWorld என்ற ஆன்லைன் கல்வி கற்கும் நிறுவனத்தைத் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.. இப்போது அவர் நேரடியாகவே அரசியலிலும் குதித்துக் கலக்கி வருகிறார்.












Click it and Unblock the Notifications