பத்து பைசா வாங்காமல் ஏழைகளையும் ஐஏஎஸ், ஐபிஎஸ்ஸாக்கிய.. சைதை துரைசாமி மகன், வெற்றி துரைசாமி மறுபக்கம்
டெல்லி: இமாச்சல் பிரதேச மாநிலம் சட்லஜ் ஆற்றில் மாயமாகி 8 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் (45) உடல் இன்று மீட்கப்பட்டது.
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சல் பிரதேசத்திற்கு தனது உதவியாளருடன் புதிய படம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு வாடகைக்கு ஒரு காரை அமர்த்திக் கொண்டு காஷங் நாலா பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 ஆம் தேதி மாலை வெற்றி உள்பட 3 பேர் காரில் பயணம் செய்தனர்.

அப்போது ஓட்டுநர் டென்சினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து கார் தாறுமாறாக ஓடி 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீஸார், மீட்பு படையினர் சம்பவ இடம் சென்று நீரில் மூழ்கியிருந்த காரை கயிறு கட்டி மீட்டனர். அப்போது டென்சினின் உடல் மீட்கப்பட்டது.
இதையடுத்து வெற்றியின் உதவியாளர் திருப்பூரை சேர்ந்த கோபிநாத் படுகாயங்களுடன் பாறைகளில் விழுந்து கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை காணவில்லை. சைதை துரைசாமியின் மகனை சட்லஜ் ஆற்றுக்குள் தேடி வந்தனர்.
அவரது உடல் கடந்த 8நாட்களாக தேடப்பட்டு வந்தது. இந்த நிலையில் வெற்றியின் உடைகள், உடமைகள், சூட்கேஸ், ஐஃபோன் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டது. ஆனால் வெற்றியின் நிலை தெரியவில்லை. பாறை இடுக்குகளில் இருந்த மனித மூளை வெற்றியினுடையதா என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்தது.
ஏனெனில் டென்சினுக்கு தலையில் காயம் ஏற்படவில்லை. கோபிநாத்தும் உயிருடன் இருக்கிறார். இதையடுத்து மனித மூளை டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதனுடன் ஒப்பிட சைதை துரைசாமியின் டிஎன்ஏ மாதிரிகளும் இமாச்சலுக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் வெளியாவதற்குள் வெற்றியின் உடலை மீட்பு படையினர் மீட்டனர்.
யார் வெற்றி துரைசாமி: 8 நாட்களாக வெற்றி தேடப்பட்டு வந்த நிலையில் அவர் யார் என்பதை பார்க்கலாம். சென்னைக்கு 48ஆவது மேயராக சைதை துரைசாமி 2011 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். அதிமுகவின் முதல் சென்னை மேயர் சைதை துரைசாமி என்ற பெருமையை பெற்றார்.
இவர் மனிதநேயம் ஐஏஎஸ் அகாதமி என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அகாதமியில் ஏராளமான மாணவர்களுக்கு இலவசமாக குடிமைப்பணி தேர்வுகளுக்கான பயிற்சிகளை நடத்தி வருகிறார். இவரது பயிற்சி வகுப்பில் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட எழுத்து தேர்வுகளுக்கும் பயிற்சி கொடுக்கப்படுகிறது.
சைதை துரைசாமிக்கு மல்லிகா என்ற மனைவியும் வெற்றி துரைசாமி என்ற மகனும் உள்ளனர். 2012 ஆம் ஆண்டு வெற்றிக்கு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார். அது போல் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்டார். 2016ஆம் ஆண்டு வருமான வரித் துறை 40 இடங்களில் சோதனை நடத்தியதில் வெற்றியின் வீடும் ஒன்று. அவர் வசிக்கும் சிஐடி நகர் வீடு, தாம்பரத்தில் உள்ள செம்பாக்கம் பண்ணை வீட்டிலும் ரெய்டு நடந்தது.
வெற்றி "என்றாவது ஒரு நாள்" என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கொங்கு மண்டலத்தில் வெள்ளக்கோவிலில் எடுக்கப்பட்டது. இதில் விதார்த், ரம்யா நம்பீஸன் ஆகியோர் நடித்திருந்தனர். வெற்றி இயக்கிய படம் 2021 ஆம் ஆண்டு வெளியானது. இயக்குநராக இருந்தது மட்டுமில்லாமல் தனது தந்தையுடன் ஐஏஎஸ் அகாதெமியையும் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் சைதை துரைசாமி தனது ஒரே மகனை இந்த விபத்தில் இழந்துவிட்டார் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications