யார் இந்த விகாஷ் யாதவ்? FBI-யால் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் “ரா” ஏஜெண்ட்!
டெல்லி: இந்திய "ரா" உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரியான விகாஷ் யாதவ், காலிஸ்தான் தலைவர் கொலை முயற்சி வழக்கில் அமெரிக்காவின் எஃபிஐ அமைப்பால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விகாஷ் யாதவ் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். யார் இந்த விகாஷ் யாதவ்?
அமெரிக்கா கனடா இரட்டை குடியுரிமை பெற்ற காலிஸ்தான் அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுனுக்கு எதிரான கொலை முயற்சியில், இந்திய முன்னாள் ரா அதிகாரி விகாஷ் யாதவ் ஈடுபட்டதாக அமெரிக்க அரசு குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக அமெரிக்கா தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில், இணை குற்றவாளியாக விகாஷ் யாதவ் பெயரையும் குறிப்பிட்டது.

தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த எஃப்.பி.ஐ: இந்த வழக்கு தொடர்பாக அமெரிக்க நீதித்துறை குற்றப்பத்திரிகையில் புகைப்படத்துடன் தேடப்படும் குற்றவாளியாக விகாஷ் யாதவை அறிவித்து, அவர் மீது கூலிக்கு கொலை செய்தல், பணமோசடி உள்ளிட்ட குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விகாஷ் யாதவ் அமெரிக்காவின் FBI-யால் தேடப்படுபவர் எனவும் போஸ்டர் வெளியிடப்பட்டது. அவருக்கு எதிராக கடந்த 10ஆம் தேதி கைது வாரண்டும் பிறப்பித்தது. ஆனால், தொடர்ந்து இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து வருகிறது. இவை அனைத்தும் முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என இந்தியா தெரிவித்து வருகிறது.
கொல்ல சதி: இந்த வழக்கில் இணை குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளார் விகாஷ் யாதவ். இதற்கு முன்னரே நிகில் குப்தா என்பவர் குற்றம் சாட்டப்பட்டு, அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார். தற்போது நிகில் குப்தாவின் இணை சதிகாரர் என விகாஷ் யாதவை குற்றம்சாட்டுகிறது அமெரிக்கா. விகாஷ் யாதவ், இந்தியாவிலிருந்து ரிமோட் மூலம், குர்பத்வந்த் சிங் பன்னுவை கொலை செய்வற்கான சதித்திட்டத்தை இயக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், விகாஸ் யாதவ் டெல்லியில் சிறப்பு தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பணம் கேட்டு மிரட்டியதாக ஒரு வழக்கில் விகாஷ் யாதவை கைது செய்து அவரிடம் சிறப்பு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
யார் இந்த விகாஷ் யாதவ்?: 39 வயதான விகாஷ் யாதவ், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்தியாவின் RAW உளவு அமைப்பின் முன்னாள் ஊழியர். இதற்கு முன் அவர் சிஆர்பிஎப்பில் பணியாற்றி வந்தார். போர்க்கப்பல் மற்றும் ஆயுதங்கள் தொடர்பாக சிறப்புப் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விகாஷ் யாதவ் பற்றிய உடல் விளக்கத்தை FBI வெளியிட்டது. அதன்படி அவருக்கு 39 வயது, 5 அடி 10 அங்குலம் உயரம் கொண்டவர், சுமார் 175 பவுண்டுகள் எடை. கருப்பு முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் கொண்டவர். தலைமறைவாக இருக்கும் விகாஷ் யாதவ் தொடர்புடைய தகவல் தெரிந்தவர்கள் தங்கள் அருகிலுள்ள FBI அலுவலகம் அல்லது அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு FBI தெரிவித்தது.












Click it and Unblock the Notifications