ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்த ஜேபி நட்டா! லோக்சபா தேர்தல் வேற நெருங்குதே.. என்ன காரணம்
டெல்லி: பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா தனது இமாச்சல பிரதேச ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த லோக்சபா தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. தேசியளவில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி இருக்கும்.

கடந்த முறை ராஜ்யசபாவில் இருந்து தேர்வான பல மத்திய அமைச்சர்களும் கூட இந்த முறை லோக்சபா தேர்தலில் களமிறங்க உள்ளது. ஏற்கனவே பாஜக 195 வேட்பாளர்களைக் கொண்ட தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் அறிவித்துவிட்டது.
ராஜினாமா: இது ஒரு பக்கம் இருக்க பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா திடீரென தனது இமாச்சல பிரதேச ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார். கடந்த மாதம் தான் அவர் குஜராத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வான நிலையில், அவர் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து தேர்வான ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அவர் உட்பட மொத்தம் 57 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடையும் நிலையில், அவர் முன்கூட்டியே ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து ராஜ்யசபா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இமாச்சல பிரதேச மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ராஜ்யசபா உறுப்பினரான ஜேபி நட்டா ராஜ்யசபாவில் தனது பதவியை ராஜினாமா செய்தார், அவரது ராஜினாமாவை 2024 மார்ச் 4ஆம் தேதி ராஜ்யசபா தலைவர் ஏற்றுக்கொண்டார்" என்று கூறப்பட்டு உள்ளது.
என்ன காரணம்: அவர் இமாச்சல பிரதேசத்தில் ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்தாலும் கூட குஜராத்தில் இருந்து அவர் ராஜ்யசபா எம்பியாக தேர்வாகி இருப்பதால் அவர் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பணியாற்றுவார். எதிர்வரும் லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக சமீபத்தில் நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்ற 41 வேட்பாளர்களில் நட்டாவும் ஒருவர். அவர் குஜராத்தில் இருந்து நேரடியாக பாஜக வேட்பாளராகத் தேர்வானார்.
ஜேபி நட்டா இதற்கு முன்பு எம்பியாக இருந்த இமாச்சல பிரதேசத்தில் இந்த முறை காங்கிரஸ் ஆட்சி இருந்தது. இதன் காரணமாகவே நட்டா குஜராத்தில் இருந்து போட்டியிட்டார். மறுபுறம் இமாச்சலில் தேர்தலுக்கு முன்பு திடீர் குழப்பம் ஏற்பட்ட நிலையில், ஆறு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மாற்றி வாக்களிக்க அங்கேயும் பாஜக வென்றது குறிப்பிடத்தக்கது.
இமாச்சலில் என்னாச்சு: இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் சிங்வி 34 வாக்குகள் பெற்றார். மறுபுறம் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனும் 34 வாக்குகளைப் பெற்றார். ஆறு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் மூன்று சுயேச்சைகள் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்தே இதற்குக் காரணம். இரு தரப்பும் ஒரே அளவு வாக்குகளைப் பெற்ற நிலையில், குலுக்கல் முறை பின்பற்றப்பட்டது. அதில் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கே திடீரென குழப்பம் ஏற்பட்ட நிலையில், இமாச்சல் பிரதேச காங்கிரஸ் அரசு கவிழும் சூழல் உருவானது. இதையடுத்து உடனடியாக செயல்பட்ட அம்மாநில காங்கிரஸ் அரசு இந்த 6 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications