சீனா விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு பயப்படுவது ஏன்? சோனியா காந்தி சரமாரி கேள்வி
டெல்லி: சீனா விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு பயப்படுவது ஏன்? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
சீனாவின் அத்துமீறல் தொடர்ந்து அதிகரித்து வருவது நாட்டின் பாதுகாப்புக்கு எழுந்துள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல் எனக் கூறிய சோனியா காந்தி, இந்த விஷயத்தில் என்ன கொள்கையை மத்திய அரசு கொண்டுள்ளது எனவும் வினவினார்.
அருணாச்சலப் பிரதேசத்துக்குள் சீனப் படையினர் ஊடுருவியது குறித்து மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், சோனியா காந்தி இவ்வாறு பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

மத்திய அரசை சீண்டிய ராகுல்
அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதிக்குள் கடந்த 9-ம் தேதி 200-க்கும் மேற்பட்ட சீனப் படையினர் அத்துமீறி நுழைந்ததும், பின்னர் அவர்கள் இந்திய ராணுவத்தினரால் விரட்டியடிக்கப்பட்டதும் வடகிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, அண்மையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, "சீனா பெரிய போருக்கு தயாராகி வருகிறது. ஆனால், இந்திய அரசோ தூங்கிக் கொண்டிருக்கிறது" எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

பாஜகவை கொதிக்க வைத்த "நாய்" விமர்சனம்
இது ஒருபுறம் இருக்க, சீனா விவகாரத்தை முன்வைத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேரடியாக பாஜகவையே விமர்சித்தார். அதாவது, மக்கள் முன்பு பாஜக அரசு சிங்கமாவும், சீனா முன்பு எலியாகவும் இருப்பதாக அவர் கூறினார். மேலும், "சுதந்திரத்துக்காக எத்தனையோ காங்கிரஸார் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். ஆனால், பாஜகவினரின் நாய் கூட இந்த நாட்டுக்காக சாகவில்லை" என கார்கே பேசியது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. இவ்வாறு பேசியதற்காக கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியறுத்தி நாடாளுமன்றத்தில் பாஜகவினர் அமளியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சோனியா கடும் தாக்கு
இந்நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது: இந்தியாவுக்குள் சீனா தொடர்ந்து அத்துமீறி வருவது சாதாரண விஷயம் அல்ல. இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை. ஆனால், இதை சாதாரண விஷயமாக அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும் என அரசு விரும்புகிறது. அதனால்தான், நாடாளுமன்றத்தில் சீனா விவகாரம் குறித்து விவாதிக்க அரசு மறுக்கிறது.

ஏன் அரசு பயப்படுகிறது?
சீனா இந்தியாவை தொடர்ந்து தாக்குவதற்கு எங்கிருந்து துணிச்சல் வருகிறது? சீனாவின் இந்த செயலை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதியை செய்வதை விட, இறக்குமதியை அதிகமாக செய்கிறது. சீன அத்துமீறலுக்கு பிறகும் இது தொடர்கிறது. அதாவது நம்மை சீண்டிய போதிலும், சீனாவுக்கு மத்திய அரசு லாபம் தேடி தருகிறது. சீனாவின் இத்தகைய செயலுக்கு பொருளாதார ரீதியாக நாம் ஏன் பதிலடி கொடுக்கக் கூடாது? இதுபோன்ற ஏராளமான கேள்விகள் அரசிடம் கேட்க இருக்கின்றன. ஆனால், சீனா குறித்து விவாதிக்கவே மத்திய அரசு தயங்குகிறது. சீனாவை பார்த்து மத்திய அரசு பயப்படுவது ஏன்? இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications