டெல்லியில் அரசு காரை தவிர்த்த எடப்பாடி! முக்கிய நபரை சந்திக்கும் திட்டம் லீக் ஆகாமலிருக்க நடவடிக்கை?
டெல்லி: எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லிக்குச் சென்றுள்ளார். அவர் கட்சி ஆபீஸை திறக்கவே டெல்லி சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அதையும் தாண்டி வேறு சில விஷயங்களும் அவரது டெல்லி பயணத்தில் நடக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே டெல்லியில் அவர் அரசு வாகனங்களைத் தவிர்ப்பதாகவும் தகவல் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருக்கிறது. ஆனால், இப்போது தமிழக அரசியல் களம் பரபரப்பாகிவிட்டது. தேர்தலை மனதில் வைத்தே இப்போது பல்வேறு கட்சிகளும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

எடப்பாடி டெல்லி பயணம்
இந்தச் சூழலில் தான் எடப்பாடியின் திடீர் டெல்லி பயணம் பலரையும் கவனிக்க வைத்துள்ளது. டெல்லியில் உள்ள அதிமுக அலுவலகத்தைத் திறந்து வைக்கவே எடப்பாடி டெல்லி சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவரது வழக்கமான டெல்லி பயணத்தில் இருந்து இந்த பயணம் மாறுபட்டதாகவே இருக்கிறது. இதுவே பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
முதலில் எடப்பாடி பழனிசாமி எப்போதும் டெல்லி செல்லும்போது கட்சி நிர்வாகிகள் உடன் செல்வார்கள். ஆனால், இந்த முறை அவர் டெல்லி செல்லும்போது கட்சி நிர்வாகிகளுடன் யாரும் அவருடன் செல்லவில்லை. முதலில் அவர் தனியாகவே கிளம்பினார். அதன் பின்னரே அதிமுகவின் எஸ்பி வேலுமணி, கே.பி முனுசாமி ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர்.
அரசு வாகனங்களைத் தவிர்க்கும் எடப்பாடி
மேலும், டெல்லியில் எடப்பாடி பழனிசாமி அரசு வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சி தலைவருக்கு கேபினட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து இருக்கும். இதனால் எதிர்க்கட்சி தலைவர் டெல்லி செல்லும்போது தமிழக அரசின் காரை பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும், அரசு காரில் சென்றால் எங்குச் செல்கிறோம்.. யாரைச் சந்திக்கிறோம் என்பது எளிதாகத் தெரிந்துவிடவும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் எடப்பாடி பழனிசாமி அரசு கார்களை தவிர்க்கிறாராம்.
சீக்ரெட் சந்திப்பு?
இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி தனியார் நிறுவனங்களின் கார்களை டெல்லி பயணத்தில் பயன்படுத்துகிறாராம். அதிமுகவின் முக்கிய தலைவர் ஒருவரே கார்களையும் ஏற்பாடு செய்திருக்கிறாராம். அவர் இன்று இரவு பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவை ரகசியமாகச் சந்தித்து கூட்டணி குறித்துப் பேசவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் அரசு கார்களையும் தவிர்ப்பது கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது.
அதேநேரம் திடீர் டெல்லி பயணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர் எந்தவொரு தலைவரையும் சந்திக்க வரவில்லை என்பது போலவே பதிலளித்தார். அதாவது இது குறித்து கேள்வி எழுப்பியபோது, "நான் டெல்லி வந்திருக்கக் காரணமே வேற.. இங்க கட்சி ஆபீஸை திறந்து வைத்து அதைப் பார்க்கவே வந்தேன்" என்று மட்டும் கூறினார்.
எடப்பாடி டோன் மாறுதே
இருப்பினும், எடப்பாடியின் டெல்லி பயணம் என்பது கூட்டணிக்கான தொடக்கம் என்றே அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது சில மாதங்களுக்கு முன்பு வரை எடப்பாடி பழனிசாமி, பாஜக உடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்றே கூறி வந்தார். மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்காது என்றும் குறிப்பிட்டு வந்தார்.
ஆனால், சமீப காலங்களில் அவரது பேச்சில் மாற்றம் தெரிகிறது. அதாவது தங்களின் எதிரி திமுக என்றும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றத் தேவையான கூட்டணி அமைப்போம் என்கிறார். மேலும் வேறு ஒரு இடத்தில் பேசும்போது, கட்சியின் கொள்கை வேறு.. கூட்டணி வேறு என்றும் குறிப்பிட்டார். அவரது இந்த பேச்சுகளையும் தற்போது நடக்கும் டெல்லி பயணத்திற்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொண்டாலே அதிமுகவை எதை நோக்கிச் செல்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications