டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அதிரடியாக கைது செய்த அமலாக்க துறை.. உண்மையில் என்ன காரணம்.. முழு பின்னணி
டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்துள்ளனர். அதற்கான பின்னணி மற்றும் காரணத்தை நாம் பார்க்கலாம்.
மதுபானக் கொள்கை விவகாரத்தில் இன்று மாலை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்யும் என்று ஆம் ஆத்மி தலைவர் அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகியோர் கூறியிருந்தனர்.

அதன்படியே கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை மணிஷ் சிசோடியா, டிஆர்எஸ் கவிதா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது: இந்த வழக்கில் இதுவரை என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம். கடந்த 2021- 2022 காலகட்டத்தில் டெல்லியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. ஆனால், புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்துள்ளதாகப் புகார்கள் வந்த நிலையில், இது குறித்த விசாரணைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையில் தான் பல ட்விஸ்ட்கள் அரங்கேறி உள்ளன.
இந்த வழக்கில் அமலாக்கத் துறை சமர்ப்பித்த குற்றப்பத்திரிக்கையில் கெஜ்ரிவால் conspirator அதாவது முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு இருந்தது. டெல்லியில் புதிய மதுபான கொள்கை ஊழலில் பிஆர்எஸ் தலைவர் கேசிஆரின் மகள் கவிதா, கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
லாபி: தென்னிந்தியாவைச் சேர்ந்த மதுபான லாபி ஒன்றுக்குப் பலன் தரும் வகையில் இந்த கொள்கையை உருவாக்கப்பட்டதாக அத்தாக்க துறை கூறியது. அதை அமலாக்கத் துறை "தெற்கு லாபி" என்றும் அழைத்தது. தங்களுக்குச் சாதகமான மதுபான கொள்கையை உருவாக்குவதற்காக ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த "சவுத் லாபி" ₹ 100 கோடியை வழங்கும் என முடிவு செய்ததாகவும் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை பலரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இதற்கிடையே சில குற்றவாளிகள் மற்றும் சாட்சிகள் அளித்த வாக்குமூலங்களில் கெஜ்ரிவாலின் பெயர் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.. அமலாக்கத் துறையும் தனது ரிமாண்ட் குறிப்பு மற்றும் குற்றப்பத்திரிகைகளில் இதைக் குறிப்பிட்டுள்ளது.
என்ன நடந்தது: மதுபான கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான விஜய் நாயர், கெஜ்ரிவாலின் அலுவலகத்திற்கு அடிக்கடி வந்து செல்வார் என்றும் அவர் தனது பெரும்பாலான நேரத்தை அங்கேயே செலவிடுவார் என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த விஜய் நாயர் தான் புதிய மதுபான கொள்கை தொடர்பாக மதுபான வியாபாரிகள் மற்றும் கெஜ்ரிவாலுடன் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
இண்டோஸ்பிரிட் என்ற மதுபான உரிமையாளர் சமீர் மகேந்திருவையும் கெஜ்ரிவாலையும் இந்த விஜய் நாயர் தான் சந்திக்க வைத்துள்ளார். அந்த சந்திப்பில் இரு தரப்பிற்கும் இடையே ஒருமித்த முடிவு எட்டப்படவில்லையாம். இதையடுத்து மீண்டும் விஜய் நாயர் தான் தலையிட்டு இருவரையும் வீடியோ காலில் பேசி வைத்துள்ளார். அப்போது தான் விஜய் நாயரை கெஜ்ரிவால் தனது பிள்ளை என்றும் அவரை முழுமையாக நம்புவதாகவும் கூறியிருந்தார்.
சவுத் லாபி: இந்த வழக்கில் சவுத் லாபியில் இருந்து ராகவ் மகுந்தா முதல் குற்றவாளியாகக் கூறப்பட்டு இருந்தார். அவர் இப்போது முக்கிய சாட்சியாக மாறியுள்ளார். ராகவ் மகுந்தாவின் தந்தை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்பியாக இருக்கிறார். அவர் மதுபான கொள்கை தொடர்பாக கெஜ்ரிவாலைச் சந்தித்ததாக ராகவ் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இவை எல்லாம் சேர்ந்து தான் கெஜ்ரிவாலுக்கு கைது வரை இந்த விவகாரத்தை எடுத்து வந்துவிட்டது.












Click it and Unblock the Notifications