"எதிர்க்கட்சி தலைவர் இவர் தான்.." கிட்டத்தட்ட உறுதி..ஆனா அது ராகுல் காந்தி இல்லையாம்! பெரிய ட்விஸ்ட்
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் 99 இடங்களில் வென்றதன் மூலம் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்தைக் காங்கிரஸ் பெற்றுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் பதவி ராகுல் காந்திக்கு செல்லும் எனக் கூறப்பட்ட நிலையில், அதில் அவர் ஆர்வம் காட்டவில்லை என இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு இப்போது மூன்று காங்கிரஸ் மூத்த தலைவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 240 சீட்களில் வென்ற பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பாஜக என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது.

எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி 232 சீட்களில் வென்றது.. காங்கிரஸ் மட்டும் 99 சீட்களை கைப்பற்றியது... இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது.
எதிர்க்கட்சி: லோக்சபாவில் எந்தக் கட்சி 10% இடங்களில் வெல்கிறதோ.. அதாவது 54 சீட்களில் வெல்கிறதோ அந்தக் கட்சிக்கே அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் காங்கிரஸ் உட்பட எந்தக் கட்சிக்கும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காத நிலையில், இந்த முறை 99 இடங்களில் வென்று காங்கிரஸ் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதில் சஸ்பென்ஸ் தொடர்ந்து வருகிறது.. ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராகத் தேர்வாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டியில் தீர்மானம் கூட நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை..
ராகுல் காந்தி: கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் இத்தனை இடங்களில் வெல்ல ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை முக்கிய காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றால் சரியாக இருக்கும் என்றே பலரும் கருதினர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் இது குறித்தே வலியுறுத்தினர்.
எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்கும் ஒருவருக்கு கேபினட் அந்தஸ்து கிடைக்கும். இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் சிறப்பாக ஒருங்கிணைக்க இது உதவியாக இருந்து இருக்கும். மேலும், லோக்சபாவில் பாஜக அரசு மீது கடுமையான விமர்சனங்களை வைக்கவும் இது உதவியாக இருந்திருக்கும். இதன் காரணமாகவே ராகுல் காந்தி இந்த பதவியை ஏற்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர்.
இவர்களில் ஒருவர்தான்: இதற்கிடையே லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி விரும்பவில்லை என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாகக் குமாரி செல்ஜா, கௌரவ் கோகோய் மற்றும் மணீஷ் திவாரி ஆகிய மூன்று மூத்த தலைவர்களில் ஒருவருக்கு இந்த எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கும் எனத் தெரிகிறது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், அப்போது கட்சித் தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதன் பிறகு அவர் எந்த பதவிக்கும் ஆர்வம் காட்டாத நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பதவியும் வேண்டாம் என முடிவு செய்துள்ளார். இதன் காரணமாகவே குமாரி செல்ஜா, கவுரவ் கோகாய், மணீஷ் திவாரி பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
வயநாடு: மேலும், வயநாடு மற்றும் ரேபரேலி என இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வென்ற நிலையில், அவர் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. அங்குப் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications