நாய் வளர்த்தால் புதிய வரி.. வேற எங்கேயும் இல்லை.. நம் நாட்டில்தாங்க! இந்த புது வரி எதுக்கு தெரியுமா
டெல்லி: நாய்கள் என்றாலே இங்கு பலருக்கும் கொள்ளை பிரியம். நாய்களை தங்கள் குழந்தைகளாக பாவித்து வளர்க்கும் பழக்கம் அதிகமாகவே உள்ளது. இதனிடையே நாய்களை வளர்ப்போருக்குப் புதிதாக வரி விதிக்க மபி நகராட்சி முடிவு செய்யப்பட்டுள்ளது.
எப்போதுமே நாய்கள் தான் மனிதர்களுக்குச் சிறந்த நண்பராக இருந்து வருகின்றன. நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களே கூட நம்மை சில சமயங்களில் கைவிட்டு விடும் ஆபத்து இருக்கவே செய்கிறது.
ஆனால், நாய்கள் நம்மைக் கைவிடாது. நமக்கு எதாவது ஆபத்து என்றால் தங்கள் உயிர்களைத் துச்சம் என நினைத்துப் பல நேரங்களில் நாய்கள் நமக்கு ஓடோடி வந்து உதவி உள்ளன. இதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன.

நாய்கள்
நாய்களை வளர்க்கும் பலரும் அவற்றை தங்கள் குடும்பங்களில் ஒரு நபராகவே கருதுகின்றனர். இதன் காரணமாகவே நாய்களுக்கும் கூட அவர்கள் பல ஆயிர ரூபாய் செலவழித்து நாய்களைப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.. நாய்கள் உயிரிழந்தால் அதற்கு நினைவிடங்கள் கூட பலரும் கட்டியுள்ளனர். நாய்களுக்கு இவர்கள் எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதையே இவை காட்டுகிறது.

செல்ல பிராணிகள்
அதேநேரம் நாய்களை வளர்ப்போர் முறையாக அதைக் கவனித்துக் கொள்ளவில்லை என்றால் இதனால் அண்டை வீட்டார் பாதிப்புகளைச் சந்திக்கிறார்கள். மேலும், வெளிநாடுகளைப் போல நாய்கள் ரோடுகளில் மலம் கழித்தால் அதை சுத்தம் செய்யும் பொறுப்பு ஓனர்களுக்கு இருப்பதில்லை. இதனால் பல இடங்கள் சாலை நாய்கள் மலத்தால் நிரம்பியுள்ளன. வெளிநாடுகளில் இருப்பதைப் போலவே இங்கும் நாய்களை வைத்திருப்போருக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

புதிய வரி
இதனிடையே மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாகர் முனிசிபல் கார்ப்பரேஷன், அங்கு நாய்களை வளர்க்கும் உரிமையாளர்களிடம் வரி வசூல் செய்ய முடிவு செய்துள்ளது. நகரவாசிகளின் பாதுகாப்பு மற்றும் தூய்மைக்காக வரி வசூல் செய்ய சாகர் முனிசிபல் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் நாய்கள் வளர்ப்போருக்குத் தனியாக வரி விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். நேற்று நடந்த கூட்டத்தில் அங்குள்ள 40 கவுன்சிலர்களும் ஒன்றாக இணைந்து ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளனர்.

எதற்காக இந்த வரி
இது குறித்த சட்டத்தை சாகர் முனிசிபல் கார்ப்பரேஷன் விரைவில் இயற்றப்பட உள்ளது. இந்தாண்டு ஏப்ரல் முதல் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாகர் பகுதியில் தெருக்களில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால், இந்த கூடுதல் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. பொது இடங்களில் செல்ல நாய்கள் மலம் கழித்துவிடுகின்றனர். அதைச் சுத்தம் செய்யவும் இந்த வரி பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

சாகர் மாநகராட்சி தலைவர்
சாகரில் உள்ள அனைத்து வளர்ப்பு நாய்களும் பதிவு செய்யப்பட்டு, அவற்றுக்குத் தடுப்பூசிகள் போடப்படும்.. இதன் அடிப்படையில் உரிமையாளர்களிடமிருந்து வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சாகர் மாநகராட்சி தலைவர் விருந்தாவன் அஹிர்வார் கூறுகையில், "தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் சாலைகளில் மோசமான பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், மக்களை நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகிறது.

எப்படி வரி
இதன் காரணமாக நாய் உரிமையாளர்களுக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளோம். வரும் காலங்களில் எத்தனை சதவிகிதம் வரி, யாருக்கெல்லாம் இது பொருந்தும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.. எந்தெந்த நகரங்களில் இதுபோன்ற வரி விதிக்கப்படுகிறது என்பதைப் பார்த்து அங்கு ஆய்வு செய்ய உள்ளோம். அதன் அடிப்படையில் சாகர் நகரிலும் வசி விதிக்கப் போகிறோம். மக்களின் நன்மைக்காகவும் நாய்களால் ஏற்படும் அசுத்தங்களைச் சுத்தம் செய்யவும் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications