3 பேர்.. ஸ்டாலினுக்கு வந்த போன்.. அடுத்த மூவிற்கு ரெடியான மம்தா.. வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு?
டெல்லி: தேசிய அளவில் பாஜக ஆளாத மாநில முதல்வர்களை ஒருங்கிணைக்கும் பணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குதித்து இருக்கிறார். இதில் விரைவில் சில முக்கியமான அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2019 லோக்சபா தேர்தலுக்கு முன் தேசிய அளவில் மூன்றாவது அணி உருவாக்க அல்லது எதிர்கட்சிகளை ஒன்று திரட்டி மகா பந்தன் கூட்டணி அமைக்க அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு முயன்று தோல்வி அடைந்தார். அப்போது எதிர்க்கட்சிகள் பல அதற்கு தயாராக இல்லை.
ஆனால் பாஜகவின் தொடர் வளர்ச்சி மற்றும் வெற்றியால் பாஜக ஆளாத மாநில முதல்வர்கள் பலரும் பாஜகவிற்கு எதிராக ஒன்று சேர முயன்று வருகிறார்கள். பாஜகவிற்கு எதிராக பெரிய கூட்டணியை உருவாக்க மாநில முதல்வர்கள் பலர் முயன்று வருகிறார்கள்.

லீடிங் எடுத்தார்
மேற்கு வங்க தேர்தலில் இமாலய வெற்றி பெற்று மீண்டும் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அவர் தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். தேசிய அளவில் தனது தலைமையில் மாபெரும் கூட்டணியை அமைக்க அவர் முயன்று வருகிறார்கள். கோவா தேர்தலில் தலையை நீட்டவும், உத்தர பிரதேச தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு இவர் ஆதரவு கொடுக்கவும் இந்த தேசிய அரசியல் திட்டமே காரணம். தேசிய அளவில் மாநில முதல்வர்கள் பலரை தனக்கு பின் கொண்டு வரும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

யாருக்கு எல்லாம் அழைப்பு
அடுத்த லோக்சபா தேர்தல் நடக்க இன்னும் 2 வருடங்களே உள்ளது. இந்த நிலையில் இப்போதே தேசிய அளவில் மாபெரும் கூட்டணியை உருவாக்க மம்தா முயன்று வருகிறார். இதற்காக ஏற்கனவே மாநில முதல்வர்களுக்கு அவர் போன் மூலம் அழைப்பு விடுத்து வருகிறார். முதல்வர் ஸ்டாலினை மம்தா போன் செய்து அழைத்தார். பாஜக ஆளாத மாநில முதல்வர்களின் கூட்டத்திற்கு வரும்படி முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை போன் செய்து அழைத்தார்.

3 போன் கால்
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதாக முதல்வர் ஸ்டாலினும் உறுதி அளித்தார். முதல்வருக்கு போன் செய்த கையோடு இன்னும் 3 பேருக்கு மம்தா போன் செய்துள்ளார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிடம் மம்தா இதே காரணத்திற்காக போன் செய்தார். மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வரும் கேசிஆர் இந்த மீட்டிங்கிற்கு வர சம்மதம் தெரிவித்து உள்ளார். அதேபோல் அகிலேஷ் யாதவ், மத்திய பிரதேச முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோருக்கும் போன் ,மூலம் மம்தா அழைப்பு விடுத்துள்ளார்.

கேசிஆர் கோபம் ஏன்?
மத வாதம், மாநில உரிமை என்ற காரணத்திற்காக மம்தா, ஸ்டாலின் ஆகியோர் மோடி மீது கோபத்தில் உள்ளனர். அதே போல கேசிஆர் பல்வேறு காரணங்களுக்காக பாஜகவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். ஹைதராபாத்தில் நடக்கும் மத ரீதியான பிரிவினைகள், தெலுங்கானாவில் பாஜகவின் திடீர் வளர்ச்சி, முன்பு கூட்டணியில் இருந்த போது டிஆர்எஸ் கட்சியை பயன்படுத்தி பாஜக அடைந்த அசுர வேக வளர்ச்சி இதை எல்லாம் பார்த்து கேசிஆர் பாஜக மீது கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. பட்ஜெட்டில் தெலுங்கானா புறக்கணிக்கப்பட்டதும் அவரின் கோபத்திற்கு முக்கிய காரணம் என்கிறார்கள.

காங்கிரஸ் லீடர் இல்லை
இந்த நிலையில்தான் கேசிஆர் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பலரை அழைத்து மம்தா கூட்டம் நடத்த உள்ளார். ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோருக்கு மம்தா அழைப்பு விடுக்கும் முடிவில் மம்தா உள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் மம்தா மோதலில் இருந்தாலும் கேரள முதல்வர், சிபிஎம் கட்சியை சேர்ந்த பினராயி விஜயனுக்கு மம்தா அழைப்பு விடுப்பார் என்று தேசிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டணிக்காக சில கொள்கை ரீதியான தியாகங்கள் செய்யப்படும் என்கிறார்கள்.

தேர்தலுக்கு பின் கூட்டம்
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் மார்ச் 10ம் தேதி வர உள்ளது. அதன்பின் 2 வாரத்தில் இந்த கூட்டம் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. டெல்லிக்கு பதிலாக உத்தர பிரதேசம் அல்லது வேறு வடஇந்திய மாநிலத்தில் இந்த கூட்டம் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு இந்த கூட்டம் முடிந்ததும், தேசிய அளவிலான கூட்டணி குறித்த அறிவிப்பும் வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பல முக்கிய அறிவிப்புகள் இதற்கு பின் வரலாம் என்கிறார்கள். இதில் ஆம் ஆத்மி கலந்து கொள்வது சந்தேகம்தான்.

தேர்தல் முடிவு காங்கிரஸ் நிலை
இந்த கூட்டணியில் காங்கிரஸ் இணைவதை மம்தா விரும்பவில்லை என்கிறார்கள். அதே சமயம் கேசிஆர், ஸ்டாலின் ஆகியோர் காங்கிரஸ் வருகையை விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் 5 மாநில தேர்தலில் காங்கிரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று பார்த்து அக்கட்சிக்கு கூட்டணியில் இணைய வாய்ப்பு வழங்கப்படலாம். அதே சமயம் காங்கிரசுக்கு கூட்டணியை வழிநடத்தும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications