"இறைச்சி சாப்பிடும் ஆண்கள்.. செக்ஸ் வைத்துக் கொள்ள தடை விதிக்கணும்!" ஒரே போடாக போட்ட பீட்டா
டெல்லி: விலங்குகள் நல அமைப்பான பீட்டா அமைப்பு, வித்தியாசமான கோரிக்கை ஒன்றை முன்வைத்து உள்ளது.
விலங்குகள் நல அமைப்பான பீட்டா பற்றி கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்து இருக்கும். சர்வதேச அளவில் விலங்குகளின் நலனுக்காக இந்த பீட்டா அமைப்பு தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகிறது.
நமது ஊரில் ஜல்லிக்கட்டிற்குத் தடை கோரி கடைசி வரை வலியுறுத்திய அமைப்பு தான் இந்த பீட்டா. ஒட்டுமொத்தமாகவே அசைவ உணவைத் தடை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் வாதம்.

பீட்டா
இதனிடையே இந்த பீட்டா அமைப்பின் ஜெர்மனி பிரிவு புதிய ஒரு கோரிக்கையை முன்வைத்து உள்ளது. அதாவது இறைச்சி உண்ணும் அனைத்து ஆண்களும் உடலுறவில் ஈடுபடுவதைத் தடை செய்ய வேண்டும் என்று வித்தியாசமான கோரிக்கையை விடுத்து உள்ளது. மேலும், பருவநிலை மாற்றத்திற்குப் பெண்களைக் காட்டிலும் ஆண்களே அதிகம் காரணமாக உள்ளதாகவும் அந்த அமைப்பு சாடியுள்ளது.

உணவுப் பழக்கம்
PLOS One என்ற அமைப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வை பீட்டா மேற்கோள் காட்டியுள்ளது. அதில் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் 41 சதவீதம் அதிகம் பசுமை இல்ல வாயுக்கள் வெளியாகக் காரணமாக உள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணமே ஆண்களின் உணவுப் பழக்கம் தான். இதன் காரணமாக உலகில் உள்ள அனைத்து பெண்களும் நமது பூமியைக் காக்க ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது என்று பீட்டா வலியுறுத்தி உள்ளது.

பீட்டா கோரிக்கை
இது தொடர்பாக பீட்டா ஜெர்மனி பிரசார குழு தலைவர் டேனியல் காக்ஸ் கூறுகையில், "இங்கு வசிக்கும் ஆண்கள் கையில் பீர் பாட்டில் மற்றும் இறைச்சியை வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். தங்கள் 700 யூரோ கிரில்லில் அசைவ உணவைச் சமைத்துச் சாப்பிடுவது மட்டுமே அவர்களின் வேலை. இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் கிரில்லில் இறைச்சியைச் சமைத்துச் சாப்பிடுவது தான் ஆண்மையின் அடையாளம் என்று நினைக்கிறார்கள்.

பாதிப்பு
இது விலங்குகளுக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இவர்களின் இந்த உணவுப் பழக்கமும் காலநிலை மாற்றத்திற்குக் காரணமாக அமைகிறது. இதற்கு அறிவியல் பூர்வமாகவும் ஆதாரம் உள்ளது. பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அசைவ உணவு எடுத்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். உணவுப் பழக்கங்களை வைத்துத்தான் ஆண்மை முடிவு செய்யப்படும் என்ற தவறான எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

தனி வரி
மேலும், இறைச்சி சாப்பிடும் ஆண்கள் உடன் பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களுடன் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவும் கூடாது. இறைச்சி சாப்பிடும் ஆண்களுக்குத் தனியாக 41% வரி விதிக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் ஆண்டுக்கு 58.6 டன் CO2 வெளியாகக் காரணமாக உள்ளனர். எனவே, இது பெரிய சிக்கல் எல்லாம் ஏற்படுத்தாது. இறைச்சியை உண்ணும் ஆண்களும் கூட தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பூமியை விட்டுச் செல்ல வேண்டும் என்றே விரும்புவார்கள்..

எதிர்ப்பு
அவர்களை இறைச்சியை விடவில்லை என்றால் நல்ல பூமி அடுத்த சந்ததிக்குக் கிடைக்காது" என்று அவர் கூறினார். ஜெர்மனி பீட்டா அமைப்பின் இந்த கோரிக்கை இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இறைச்சி சாப்பிடுவது என்பது தனியுரிமை என்றும் அதில் தேவையில்லாமல் பீட்டா மூக்கை நுழைப்பதாகவும் இணையத்தில் பலரும் கடுமையான கருத்துகளைக் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications