Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணக்கார சுல்தான் வாழும் நாடு.. மலேசியாவுக்கு பக்கம்.. மோடி, புருனே செல்ல காரணம் என்ன? ஏன் முக்கியம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று புருனே நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து புருனே 1984-ம் ஆண்டு விடுதலை பெற்ற பின்னர் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் முதலாவது இந்திய பிரதமர் நரேந்திர மோடி. நமது நாட்டின் கிழக்காசியாவை மையமாகக் கொண்ட கொள்கையில் புருனே மிக முக்கியப் பங்கு வகிப்பதால் பிரதமர் மோடியின் பயணம் முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள மிகச் சிறிய நாடுதான் புருனே என்ற புருனே தருஸ்ஸலாம். பொர்னே தீவின் வடக்கு கடலோரப் பகுதியில் உள்ளது.

india burnei

சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த தென்சீனக் கடலை வடக்கு எல்லையாகக் கொண்டது. மலேசியாவின் சரவாக் மாகாணம், புருனேவின் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு எல்லைகளாக உள்ளன. 1888-ம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் சிக்கியதுதான் புருனே.

1963-ம் ஆண்டு மலேசியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இடம் பெறாத மலாய் மொழி பேசக் கூடிய பிராந்தியம் புருனே. 1984-ம் ஆண்டுதான் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து புருனே விடுதலை அடைந்தது. காமன்வெல்த் மற்றும் ஏசியான் அமைப்புகளில் உறுப்பு நாடாகவும் உள்ளது.

india burnei

புருனேவின் மொத்த மக்கள் தொகை 4,60,000. இந்த நாட்டின் 3-ல் 2 பங்கு குடிமக்கள் மலாய் மொழிதான் பேசுகின்றனர். பல்வேறு பழங்குடி மக்களைக் கொண்ட நாடாகவும் புருனே உள்ளது. சீனர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். புருனேவில் சுமார் 15,000 இந்தியர்கள் வசிக்கின்றனர். ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து தற்காலிக பணியாளர்களாக ஏராளமானோர் புருனேவில் பணியாற்றுகின்றனர். இங்கு சன்னி முஸ்லிம் மதம் அதிக அளவின் பின்பற்றப்படுகிறது. சொற்ப எண்ணிக்கையில் கிறிஸ்தவமும் சீனர்களால் பவுத்தமும் கடைபிடிக்கப்படுகிறது. புருனேவில் வருமான வரி விதிப்பு நடைமுறை எதுவும் இல்லை.

உலகிலேயே மிக பணக்காரர் புருனேவின் மன்னரான சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா. புருனே சுல்தானின் சொத்து மதிப்பு 30 பில்லியன் டாலராகும். புருனே சுல்தானிடம் 7,000 கார்கள் வைத்துள்ளார். புருனே சுல்தானின் அரண்மனைதான் உலகிலேயே மிகப் பெரிய அரண்மையாகும். உலகிலேயே 1967-ம் ஆண்டு முதல் நீண்ட காலம் மன்னராக இருப்பவரும் புருனே சுல்தான்தான்.

1984-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து புருனே விடுதலை பெற்ற போது தம்மை தாமே பிரதமராக அறிவித்துக் கொண்டார் புருனே சுல்தான். 1991-ம் ஆண்டு மலாய் முஸ்லிம் மன்னர் பரம்பரையை அறிமுகமும் செய்து வைத்தார். ஷரியத் சட்டங்களை அமல்படுத்திய போது புருனே நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பையும் எதிர்கொண்டார். 2014-ம் ஆண்டு ஷரியத் சட்டத்தை ஏற்றுக் கொண்டது புருனே. கிழக்கு ஆசியாவில் ஷரியத் சட்டத்தை ஏற்றுக் கொண்ட முதல் நாடு புருனே. ஒரு பாலின சேர்க்கையை மரண தண்டனைக்குரிய குற்றமாக 2019-ல் புருனே அறிவித்தது.

இந்தியா - புருனே இடையே 1984-ம் ஆண்டு முதல் தூதரக உறவுகள் தொடங்கின. இருநாடுகளிடையேயான அரசு முறை உறவு என்பது 40 ஆண்டுகளை தொட்டிருக்கிறது. புருனேவில் வசிக்கும் பெரும்பாலான இந்தியர்கள் எண்ணெய், இயற்கை எரிவாயு, கட்டுமானம் மற்றும் சில்லறை வர்த்தகம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர். புருனேவில் இந்திய மருத்துவர்கள் பலரும் பணியாற்றுகின்றனர். அதேபோல ஆசிரியர்கள், பொறியாளர்கள், தகவல் தொழில்நுட்பப் பணியாளாகவும் இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். புருனேவின் ஜவுளித் தொழிலில் இந்திய வர்த்தகர்கள் கொடி கட்டிப் பறக்கின்றனர்.

இந்தியாவின் கிழக்கு ஆசியாவை நோக்கி அல்லது கிழக்கை செயல்படுத்துக என்ற கொள்கையில் புருனே முக்கிய இடம் பெறுகிறது. ஆசியான் நாடுகளுடனான நெருக்கமான இந்தியாவின் உறவுக்கு புருனேவின் பங்களிப்பு மிக முக்கியமானது என்கிறது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்.

இந்தியா புருனே இடையேயான இருதரப்பு வர்த்தகம் 2021-ல் 522.7 மில்லியன் டாலராக இருந்தது. 2022-ல் இது 382.8 மில்லியன் டாலராகவும் கடந்த ஆண்டு இது 195.2 டாலராகவும் உள்ளது. 2014-ம் ஆண்டு மியான்மரில் நடைபெற்ற ஏசியான் உச்சி மாநாட்டின் போது புருனே சுல்தானை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். 2017-ம் ஆண்டு பிலிப்பைன்ஸில் நடைபெற்ற கிழக்கு ஆசியா உச்சி மாநாட்டின் போதும் இரு தலைவர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். 2018-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க டெல்லி வருகை தந்திருந்தார் புருனே சுல்தான்.

2021-ல் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஏசியானின் தலைவராக புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா பொறுப்பேற்றிருந்தார். அப்போது புருனே சுல்தானின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி 18-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றினார். அந்த மாநாட்டில், தென் சீனக் கடல் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பொதுவான நலன்கள் மற்றும் அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் சர்வதேசப் பிரச்சனைகள் குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன.

அத்துடன் 2021-ம் ஆண்டு இந்திய கடற்படை கப்பல்களான ஷிவாலிக் மற்றும் காட்மாட், புருனே நாட்டின் முவராவில் அந்நாட்டு கடற்படையுடன் பல்வேறு இருதரப்பு தொழில்சார்ந்த கலந்துரையாடல்களில் பங்கேற்றன. மேலும் தென் சீனக் கடலில் இந்திய கடற்படையின் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக புருனே நாட்டின் முரா பகுதிக்கு இந்தியக் கடற்படைக் கப்பல் கில்டன் கடந்த மே மாதம் பயணம் மேற்கொண்டது. இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்தது.

பிரதமர் மோடிதான் புருனே நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதலாவது பிரதமராவார். இந்த பயணத்தின் போது பாதுகாப்புத் துறை, விண்வெளித் துறை, தொழில் மற்றும் வர்த்தகம், எரிசக்தி துறை, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன என்கிறது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+