வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் காலணிகள் விலை உயர்கிறது? என்ன காரணம்.. வெளியான புதிய தகவல்
டெல்லி: நமது நாட்டில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் காலணிகளின் விலை உயர வாய்ப்பு இருக்கிறது. பிஐஎஸ் எனப்படும் நமது நாட்டின் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் புதிய தரக் கொள்கைகள் அமலுக்கு வருவதால் இன்னும் இரண்டே நாட்களில் காலணிகளின் விலை உயர இருக்கிறது. அதேநேரம் இதில் சில விதிவிலக்குகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் சமீபத்தில் தான் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. மத்திய பட்ஜெட்டில் சில பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. சில பொருட்கள் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதனால் பல பொருட்களின் விலை மாறி இருக்கிறது. இதற்கிடையே ஆகஸ்ட் 1ம் தேதி முதல் காலணிகளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.. ஆனால், இதற்கும் பட்ஜெட்டிற்கும் தொடர்பு இல்லை. புதிய தரநிலை விதிகள் அமலுக்கு வருவதாலேயே காலணி விலை உயர இருக்கிறது.
காலணிகள்: சந்தையில் விற்கப்படும் காலணிகள், ஷூகளுக்கு புதிய தரத்தை பிஐஎஸ் எனப்படும் Bureau of Indian Standard நிர்ணயம் செய்துள்ள நிலையில், இதன் காரணமாக ஆகஸ்ட் 1ம் தேதி முதல் காலணிகள் விலை உயர வாய்ப்பு இருக்கிறது. இந்த புதிய தரக் கட்டுப்பாட்டு உத்தரவின்படி காலணி உற்பத்தியாளர்கள் IS 6721 மற்றும் IS 10702 வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் காலணிகளின் தரம் உயரும். அதேநேரம் இதனால் உற்பத்தியாளர்களின் செலவும் அதிகரிக்கலாம் என்பதால் காலணி விலையும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலக்கு: அதேநேரம் ஆண்டு வருவாய் ரூ. 50 கோடிக்கும் குறைவாக இருக்கும் நிறுவனங்களுக்கு பிஐஎஸ் அமைப்பின் இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பழைய காலணிகள் கையிருப்பில் இருந்தால் அவை வழக்கம் போல விற்கலாம். அவற்றுக்கு இந்த விதி பொருந்தாது.. அதேநேரம் இந்த நிறுவனங்கள் பழைய காலணிகள் எவ்வளவு தங்களிடம் இருக்கிறது என்பது குறித்த தகவல்களை பிஐஎஸ் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்பது விதியாக இருக்கிறது.
காலணிகள் மட்டுமின்றி மொத்தம் 46 பொருட்களுக்குத் திருத்தப்பட்ட தரத்தை பிஐஎஸ் அறிவித்துள்ள நிலையில், அவை அனைத்தும் ஆகஸ்டு 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
விதிகள் என்ன: இந்த புதிய திருத்தப்பட்ட தர விதியின் கீழ், ரெக்சின், இன்சோல் மற்றும் லைனிங் எனக் காலணிகளில் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் கெமிக்கல் பண்புகள் சோதிக்க வேண்டும். அதேபோல வெளிப்புறப் பகுதியை உருவாக்கப் பயன்படுத்தப்படும் பொருளின் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே விதிமுறையாகும்.
எதற்காக இது: இந்த புதிய விதிகள் காலணிகள் நீண்ட காலம் பயன்படுத்தும் அளவுக்குத் தரத்தில் வலுவாக இருப்பதை உறுதி செய்யும். மேலும், இது நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியத்தைக் குறைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தரமான பொருட்கள் என்றால் அது உற்பத்திச் செலவை அதிகரிக்கும்.. இருப்பினும், இதை எப்படி ஈடுகட்டத் திட்டமிடுகிறது என்பது குறித்து பிஐஎஸ் அமைப்பு எந்தவொரு கருத்தையும் கூறவில்லை.
பிஐஎஸ் என்பது நமது நாட்டின் தரக் கட்டுப்பாட்டு அமைப்பாகும். இந்தியாவில் விற்கப்படும் பொருட்களுக்கான தரத்தை இந்த அமைப்பே நிர்ணயம் செய்கிறது.












Click it and Unblock the Notifications