ஏன் அதிகப்படியான அன்ரிசர்வ்டு டிக்கெட் விற்கப்பட்டது.. ரயில்வேக்கு டெல்லி ஐகோர்ட் சரமாரி கேள்வி
டெல்லி: டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே துறையை டெல்லி உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியிருக்கிறது. ஒரு பெட்டியில் எவ்வளவு பயணிகள் பயணிக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு ஏன் கூடுதல் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை விற்பனை செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யராஜ் நகரில் நடைபெறும் கும்பமேளாவிற்கு செல்வதற்காக பிப்ரவரி 15ம்தேதி அன்று டெல்லி ரயில் நிலையத்தில் பல ஆயிரம் பயணிகள் குவிந்திருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு ரயில்வேயின் அலட்சியமே காரணமே என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் எதிர்காலத்தில் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய் மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அமர்வு இன்று ரயில்வேக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியது. ஒரு பெட்டியில் எவ்வளவு பயணிகள் பயணிக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு ஏன் கூடுதல் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை விற்பனை செய்ய வேண்டும்? விற்கப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை ஏன் அந்த எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கிறது? அன்று டெல்லி ரயில் நிலையத்தில் எத்தனை லட்சம் பேர் இருந்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? உள்கட்டமைப்பு ரீதியாக அந்த வகையான கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் ரயில் விபத்து போன்றது அல்ல என்று நீதிபதிகள் ரயில்வே துறையை கடுமையாக கண்டித்தனர்.
அதேபோல் ரயில்வே சட்டத்தின் பிரிவு 57-ஐ மேற்கோள் காட்டிய டெல்லி உயர்நீதிமன்றம், அதிகபட்ச பயணிகளை நிர்ணயிப்பது மற்றும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் விற்பனை செய்வது குறித்து ஆய்வு செய்யுமாறு ரயில்வேக்கு உத்தரவிட்டது. நீதிபதிகள் இதுபற்றி கூறும் போது,
"நீங்கள் (ரயில்வே நிர்வாகம்) ஒரு எளிய விஷயத்தை எழுத்துப்பூர்வமாகவும் மனப்பூர்வமாகவும் செயல்படுத்தினால், இதுபோன்ற சூழ்நிலைகளை நிச்சயம் தவிர்க்கலாம். அவசர நாட்களில் அவ்வப்போது வரும் அவசரநிலைகளைப் பொறுத்து நெரிசலை ஈடுசெய்ய அந்த எண்ணிக்கையை நீங்கள் அதிகரிக்கலாம். ஆனால் ஒரு பெட்டியில் இவ்வளவு பேர் தான் பயணிக்க வேண்டும் என்ற எண்ணிக்கையை நிர்ணயிக்கவில்லை.. இந்த விஷயம் எல்லா நேரங்களிலும் புறக்கணிக்கப்பட்டதாகத் தெரிகிறது என்று கூறினார்கள்.
இந்த வழக்கில் முன்னதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில். "நாம் இப்போது டெல்லி ரயில் நிலையத்திற்குச் சென்றால் கூட, பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் மற்றும் ரயில் டிக்கெட்டுகள் இல்லாமல் நிறைய பேர இருப்பதை காண முடியும். பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் தேவை என்று ரயில்வே சுற்றறிக்கைப்படிதான் டெல்லி ரயில் நிலையம் இருப்பதாக தெரியவில்லை. ரயில்வே அதன் சொந்த விதிகளின் படி செயல்பட்டிருந்தால் கூட நிறைய விஷயங்களைத் தடுத்திருக்கலாம். நாங்கள் பெரிய பொது நலனுக்காகவே இங்கு வந்துள்ளோம். ரயில்வே உள்கட்டமைப்பு அல்லது எந்த கொள்கை குறித்தும் நாங்கள் கருத்து தெரிவிக்கவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க, ஏற்கனவே ரயில்வே வகுத்துள்ள விதிகளின்படி தான் செயல்பட வேண்டும் என்று கோருகிறது.இந்த விஷயத்தை ரயில்வே எதிர்க்கக்கூடாது என்று வாதிட்டார்.
இதுபற்றி விசாரணையில் கருத்து தெரிவித்த நீதிபதி உபாத்யாய், "அவரது (மனுதாரரின்) கவலை என்பது துரதிர்ஷ்டவசமான சம்பவத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. ரயில்வே தனது விதிகளை பின்பற்றியிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்பதுதான் அவரது கவலையாக உள்ளது. எதிர்காலத்தில் ரயில்வே தனது விதிகளை சரியாக செயல்படுத்துமாறு அறிவுறுத்தல்களைத்தான் கேட்கிறார். இதல் எந்த எதிர்ப்பும் இருக்கக்கூடாது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். மனுதாரர் எழுப்பியுள்ள பிரச்சினைகள், ரயில்வே வாரியத்தின் உயர் மட்டத்தில், சொலிசிட்டர் ஜெனரல் பரிந்துரைத்தபடி, ஆராயப்படட்டும், அதன் பிறகு ரயில்வே வாரியத்தால் எடுக்கப்படக்கூடிய முடிவுகளின் விவரங்களைக் கூறி பிரதிவாதி ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யட்டும் என்று கூறினார்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும் போது, டெல்லி ரயில் நிலைய விவகாரத்தில், எந்தவிதமான விரோதமான முறையில் எடுக்கப்படவில்லை என்றும், ரயில்வே சட்டத்தைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும் கூறினார். எப்போதுமே இல்லாத ஒரு சூழ்நிலை இருந்தது என்றும். மனுவில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் உயர் மட்டத்தில் நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்றும் நீதிமன்றத்திற்கு உறுதியளித்தார். இந்த விவகாரம் குறித்த அடுத்த விசாரணை மார்ச் 26 அன்று நடைபெறும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications